|
Madurai

ரஜினி படம் வெளியான
தியேட்டரில் `தடியடி': போலீஸ் மீது ரசிகர்கள் கல்வீச்சு
மதுரை, ஏப். 14-
ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா நடித்த "சந்திர முகி"
படம் இன்று தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்தபடத்தை காண
நேற்று நள்ளிரவு முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர்.
மதுரை முனிச்சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று
அதிகாலையிலேயே ஏராளமான ரஜினி ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
படம் பார்க்க செல்வதில் அவர்களுக்கிடையே தள்ளு- முள்ளு
ஏற்பட்டு மோதல் உருவானது.
பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்த
முயன்றனர். அப்போது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே
கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தில்
இருந்த ரசிகர்கள் சிலர் போலீசாரை நோக்கி கல்வீசினர். இதில்
பாதுகாப்புக்கு நின்ற ஒரு போலீஸ் காரரின் மண்டை உடைந்து
ரத்தம் கொட்டியது. உடனே மற்ற போலீசார் ரசிகர்கள் மீது தடியடி
நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் சினிமா பார்க்க வந்த ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும்,
பதட்டமும் உருவானது. கல்வீச்சு பற்றிய தகவல் போலீஸ் உயர்
அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து
வந்தனர். மேலும் ஆயுதப் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
அவர்கள் மேலும் அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|