 
ரஜினி மீது எனக்கும் முரண்பாடு உண்டு. விமர்சனம் உண்டு. ஆனால் அவர் பெயரைக் குறிப்பிட்டாலே கருத்து கந்தசாமி ரேஞ்சுக்கு கேள்வி கேட்பதும் வசைமாரி பொழிவதும் சரியல்ல. ஒருவர் சமூகத்தில் பிரபலமானவராக உள்ளார்...வசதியோடு உள்ளார் என்பதாலேயே அவர் வள்ளலாக வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேராசை.
ரஜினி மேடை போட்டு ஊடக வெளிச்சத்தில் உதவிகள் செய்து நல்ல பெயர் எடுக்கவில்லை என்றாலும் இதுநாள் வரை ஒழுங்காக வருமானவரி செலுத்திவரும் மிகச் சில நடிகர்ளுள் அவரும் ஒருவர். அவர் செலுத்தும் வருமான வரி அரசின் நலத்திட்டங்கள் மூலம் மக்களைத் தானே சென்றடைகிறது...?! சரி நம்மில் எத்தனை பேர் தம் பிறந்த நாளுக்கும் பண்டிகைக்கும் அநாதை இல்லங்களுக்கும்முதியோர் இல்லங்களுக்கும் சென்று கொண்டாடி இருப்போம்? குறைந்தபட்சம் நம் பிறந்தநாளுக்கு ஒரு நாலு பேருக்கு உணவளித்திருப்போம்?
மேலும் திரும்ப திரும்ப அவரை கன்னடன் மராத்தியன் என்று அரைத்த மாவையே அரைத்து சோர்வடைவதில் யாருக்கு என்ன லாபம்..? மொழி சார்ந்து அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அவர் ஒருபோதும் மறுத்ததே இல்லை. தான் ஒரு கன்னடன் ..தன் பூர்வீகம் மராட்டியம் என்பதை அவர் எப்போதும் மறைத்ததே இல்லை.. அதன்பின்பும் அவர் இனம் குறித்து கருத்துக் கூறுவது தேவையற்றது என்றே கருதுகிறேன்.. தொண்ணூறுகளின் இறுதியில் அரசியல் சார்பு நிலை..காவேரி பிரச்சனை போன்றவற்றினால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்..அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் " கர்நாடகா போனா மராத்தியன்னு சொல்லி ஒத்துக்குறாங்க..மஹாராஷ்டிரா போனா மதறாசின்னு சொல்லி ஒத்துக்குறாங்க...சரின்னு தமிழ்நாடு வந்தா கன்னடன்னு சொல்லி நீங்களும் ஒதுக்குறீங்க...நான் எங்க தான் போறது ? " என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.. அவரின் அந்த விரக்தியில் நடிப்பு இருப்பதாக கருதவில்லை இல்லை..(ஏனெனில் இங்கு பலரது கருத்துப்படி அவருக்குத் தான் நடிக்கவே வராதே..?! )
தன் படங்கள் வெளிவரும் போது தன் அரசியல் நுழைவுபற்றி பூடகமாக எதையாவது சொல்லி தன் படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்பது அவர் மீதான மறுக்க முடியாத குற்றச்சாட்டு..அதில் ஓரளவு உண்மையும் உள்ளது... ஆனால் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று சொல்லி சொல்லியே ஏமாற்றுகிறார் என்று ரஜினி மீது கல்லெறியும் நாம், முப்பதாண்டு காலம்..நாற்பதாண்டு காலம் பொதுவாழ்வில் இருந்து கொண்டு நல்லது செய்கிறேன்... அதைசெய்கிறேன் ..இதை செய்கிறேன் என்று வெற்று வாக்குறுதிகளை அளித்து மாறி மாறி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி வருகிறார்களே திராவிடக் கட்சிகள்...அவர்களுக்கு எதிராக என்ன செய்து விட்டோம்...? மாற்றம் வேண்டும் என்று முகநூலில் வசனம் பேசினாலும் தேர்தல் நாளில், " ஜெய்க்கிற கட்சிக்கு ஓட்டுப் போட்டேன் " என்று அசடு வழிபவர்தான் நம்மில் அநேகம்..
இன்றைய சமூக நிலையை குற்றம் சொல்லவேண்டும் என்றால் குறை நம் எல்லோரின் மீதும் சரிசமமாக உள்ளது .. அதை உணராமல் இங்கு நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரு சிலர் தான் காரணம் என்று ஒரேயடியாக சேற்றை வாரி அடிப்பது அயோக்கியத்தனம்..!
நன்றி : யுவராஜா
|