 
சென்னை வெள்ளப்பேரிடர் சோகங்கள் கேட்கக்கேட்க நீண்டுகொண்டே போகின்றன.
காப்பாற்ற ஆளில்லாமல் உயிர்நீத்த முதியோர்கள், தம்பதி தம்பதிகளாக மாண்டுபோன உயிர்கள், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்கள் இப்படி நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள்…
பார்த்துப் பார்த்துக் கட்டியதோ, பணிச்சூழல் காரணமாக இண்டு இடுக்கில் வாடகைக்கு குடியேறியதோ… திடீரென ஆயிரக்கணக்கான வீடுகள் பத்தடி உயர வெள்ளத்தில் மூழ்கின...
வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதி மக்களின் சோகம் சொல்லி மாளாது. குடிநீர், உணவு தொடங்கி உடை, படுக்கை, கழிவறை என அத்தியாவசியங்களுக்காக தவித்து திடீரென நிர்க்கதியாக நின்றது இலட்சக்கணக்கான குடும்பங்கள்…
சோபாவில் படுத்துக்கொண்டே ஃப்ளாட் டிவியில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் தினம் சில மணிநேரங்களில் மாறிப்போனது… வெள்ளம் வடிந்தாலும் அவர்கள் பட்ட சோகம் இன்னும் சில மாதங்களுக்கு வடியாது…
ஒட்டுமொத்த இழப்பின் மதிப்பு ஒரு லட்சம் கோடியைத் தாண்டுமாம். தவணை முறையில் வாங்கி பதவிசாக உபயோகப்படுத்திய மிண்ணனு சாதனங்களில் உயிர்த்துடிப்பில்லை. ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்க குடும்பத்தின் இழப்பு சராசரியாக ஒரு லட்சம் ரூபாயில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் வரை என்கிறது ஒரு கணக்கு.
இப்படி எல்லா சோகங்களுக்கும் காரணம் தலைமைச்செயலகம் ஏரியைத் திறந்துவிட முடிவெடுக்காமல் சோம்பலாக படுத்துக்கிடந்ததே காரணம் என்று இப்போது தெரிய வருகிறது. அதாவது ஓரிரு மனிதர்களின் சோம்பேறித்தனம் இன்று பலப்பல கோடிகள் நாசம்.
இதற்கு யார் காரணம்? யார் பதில் சொல்வது? யாரிடம் கேட்பீர்கள்? எல்லாவற்றையும் இழந்து மாற்றுத்துணியில்லாமல் ஈரத்துணியோடு ஓடிய அப்பாவி மக்களுக்கு கடன் பட்டு நிற்பது யார்? அவர்கள் தரும் சில ஆயிரம் ரூபாய்கள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுமா இல்லை திரும்ப இதுபோல நேராது என்று அவர்கள் மக்கள் முன் வாக்குக்கொடுக்க தயாரா?
அறுபதடி அகல அடையாறு வாய்க்கால் வெறும் பதினெட்டு அடியாகக் குறுகி நிற்கிறது. இது பல வருடங்களாக எல்லோர் ஆட்சியிலும் தவணைமுறையில் திருடு போனது. இன்று மொத்தமாக சென்னை மக்களின் தலையில் இடியை இறக்கிவிட்டது. வெகு சுலபமாக மறக்கக்கூடிய நிகழ்வா இது? ஆனால் அதற்கு முயல்வார்கள்.
இன்று உங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் குலைத்துப்போட்டுவிட்டு அதை எப்படி திசைதிருப்புவது என்று தவிக்கிறார்கள். இருக்கவே இருக்கிறார் ரஜினி. இழுத்து நடுவில் விட்டால் ஊடகங்களில் அனல் பறக்கும்; பின்னூட்டங்களில் புரட்சி வெடிக்கும்; தமிழுணர்வு தலையில் இருந்து எல்லோருக்கும் பீய்ச்சியடிக்கும்.
மறந்துவிடுவார்கள், மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். அதுதான் நடக்கிறது. உண்மை தெரியாமலேயே, அதை முறையாக விசாரிக்காமல் செய்திகள் வெளியிடுவதும் அவர்கள்தான், பின்னர் நல்லபிள்ளை மாதிரி ‘இப்படி செய்யலாமா’ என்று உங்களையும் எங்களையும் முட்டாளாக்குவதும் இவர்கள்தான். இதற்கு ஒத்து ஊத ஆளுங்கட்சியினரும், அவர்களுக்கு ‘காவடி’ எடுக்கும் முப்பாட்டன் சிவனின் பேரன்களும், சிகரத்தை எட்ட நேர்மையற்றுபோனவர்களின் ரசிகர்களும் மாறுவேடத்தில் உலா வருகின்றனர். பிறர் உணர்ச்சியைத் தூண்டும்விதமாக எழுதி 'ரஜினியைப் பாருங்கள், தமிழ்நாட்டை ஏமாற்றிவிட்டார்' என்று கூக்குரலிடுகிறார்கள். அப்படியே கொஞ்சம் மேலே படியுங்கள் - யார் யாரை ஏமாற்றியது? யார் யாரைச் சுரண்டியது? யார் யார் பொருளைத் திருடியது?
இனியும் உணர்ச்சிக்கு விலை போகாதீர். சட்டையைப் பிடித்துக் கேளுங்கள். ஓட்டுப்போட்ட உங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். உங்கள் கோபத்தை திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள்.
சில நூறு ரூபாய் செலவழித்து உள்ளே சென்றால் பொழுதுபோக்கு அம்சங்களால் மூன்று மணி நேரம் மகிழ்வித்து அனுப்பும் சினிமாவா அல்லது ஒரு ஓட்டுப்போட்டு விட்டு ஐந்து வருடங்கள் உங்கள் பொன்னான வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டு வந்தால் அத்தனையையும் பறித்துக்கொண்டு நிற்கிறானே அந்த அரசியல்வாதியா? யார் குற்றவாளி?
- சுரேஷ் ருத்ரன்
|