 
ரஜினிகாந்த் குறித்து இயக்குநர் பிரியதர்ஷன் மலையாள மனோரமா பத்திரிகையில் கூறியதன் நேரடி தமிழாக்கம்....
"1980-களின் கடைசி.... தயாரிப்பாளர் பாலாஜி (மோகன்லாலின் மாமனார்) வீட்டில் ஒரு சிறிய விருந்து நிகழ்ச்சி.... தமிழ் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் பெரும்பாலானோர் வந்திருந்தனர்.. லேசான உற்சாக பானம் அருந்தியவாறு பார்த்த போது, அரங்கில் ஒரு ஓரமாக நின்று கொண்டு யாரோடோ பேசிக் கொண்டு நின்ற ரஜினியைக் கண்டேன்.... ஏதோ ஒரு மனநிலையில் நான் அவரிடம் சென்று சற்றே கோபத்துடன் பேச ஆரம்பித்தேன்...
'உங்கள் படங்களால் இந்திய திரையுலகிற்கு ஏதாவது பெருமை உண்டா.? ஒவ்வொருவரும் எவ்வளவோ சிந்தித்து கஷ்டப்பட்டு சினிமாவை அடுத்தடுத்த கட்டத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்..... அகில இந்திய அளவில் எவ்வளவோ தரமான படங்கள் வருகின்றன. ... ஆனால், அவற்றை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படியே ஒரு வழியாக ரிலீஸ் செய்தாலோ படம் பார்க்க ஆளில்லை. ... மறுபக்கம் என்னடாவென்றால், எந்தக் கதையோ நன்மையோ இல்லாத.., சிகரெட், கூலிங் கிளாஸ் வித்தைகளுடன் அபத்தமான உங்கள் படங்களை தயாரிக்கவும் வெளியிடவும் பார்க்கவும் எல்லாரும் காத்துக் கிடக்கின்றனர்.. நல்ல படம் எடுக்க விரும்பும் கலைஞர்கள் நஷ்டத்துடன் வேறு தொழிலுக்கு திரும்புகின்றனர்.... சாபக்கேடு.. என்றெல்லாம் பேசிவிட்டேன்... என் குரல் உயர்ந்தது எனக்கே தெரியவில்லை.
அந்த இடத்தில் வந்திருந்த அனைவருக்கும் கொண்டாட்ட மனநிலை போய்விட்டது.. கூட்டம் கூடி விட்டது. .. மேலும், அன்றைய ரஜினியின் கோபம் மிகவும் பிரசித்தி பெற்றது... அவருக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்று யூகிக்கவே முடியாது என்று தெரிந்த மற்றவர்கள் என்னை வலுக்கட்டாயமாக அழைத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்... ஆனால் அவரோ, ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. யாரோ யாரிடமோ கோபப்படுகிறார்கள் என்பது போலவும்....தனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பே இல்லாத மாதிரியும் நகர்ந்து விட்டார்....
சிலகாலம் கழித்து, எடுத்த படங்கள் எல்லாமே தோல்வியடைந்த காலம்... தயாரிப்பாளர்களோ நடிகர்களோ என்னைக் கண்டதுமே தவிர்ப்பது உணர்ந்த தருணங்கள்.... மோகன்லால் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்றேன்... அவர் கொஞ்சம் ஆறுதலாக பேசினார்... அப்போது AVM-ல் 'தளபதி' ஷூட்டிங் நடப்பது அறிந்து, மம்முட்டியையும் சந்திக்கலாமென்று போனேன்...
ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வெளியாட்கள் யாரையும் அனுமதிக்க கூடாது என்று மணிரத்னம் கராறாக உத்தரவிட்டாரென்பதால் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். .. வாதாடியும் பயனில்லை. .. நானும் ஒரு இயக்குநர் தான்.. உள்ளே சென்று மணிரத்னத்திடம் விஷயத்தை கூறுங்கள், அவர் அனுமதிப்பார் என்று கூறி ஒருவழியாக அவரை உள்ளே அனுப்பினேன்..
திடீரென்று மின்னல் வேகத்தில் அப்படி ஒரு விறுவிறு நடையுடன் பாய்ந்து வந்தார் ரஜினிகாந்த்.... வந்த வேகத்தில் கட்டியணைத்துக் கொண்டார்.... "மன்னிக்கணும், எதுவும் தப்பா எடுத்துக்கக் கூடாது... நீங்க இங்க வந்திருக்கிறது தெரியாமப் போச்சு... ரொம்ப நேரம் ஆயிருச்சா சார் நீங்க வந்து.? மணிசார் செட்டில் யாரையும் அலவ்ட் பண்றதில்லை.. அவரோட பாலிஸி அது... நீங்க எதுவும் மனசுல வச்சிக்காதிங்க..ப்ளீஸ் " என்று என்னை கையை பிடித்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார்... பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது எனக்கு. ஆனால் அவர் அதை மறந்தே விட்டிருக்கிறார்.... அன்று அவர் பேசுகையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்த ஒரு விஷயம். அவர் எனது எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறார். . .., ஒவ்வொரு படங்களின் ஒவ்வொரு சீன், டயலாக் முதற்கொண்டு குறிப்பிட்டு பேசியதை கேட்டு நம்ப முடியாது நின்றேன்... பிறகு நாட்கள் செல்லச் செல்ல அவர் என்னை வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். ..
சென்னையில் உள்ள எனது '4 Frames' டப்பிங் ஸ்டுடியோவுக்க டப்பிங் பேச நள்ளிரவில் தான் வருவார்... பகலில் வந்தால் கூட்டம் சமாளிக்க முடியவில்லை என்பதே காரணம். .. அவ்வாறு வரும் இரவுகளில், அவரது இடையிடையே உள்ள 'பிரேக்' நேரத்தில் அவரது பேச்சுத்துணை நண்பர்கள் யாரென்றால்.... அங்குள்ள இரவு வாட்ச்மேன் மற்றும் ஆயா போன்ற கடைநிலை பணியாளர்கள் தான்... அதைவிட பெரிய ஆச்சரியம், அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரைச் சொல்லி அழைத்து. .... அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போல, பிள்ளைகள் படிப்பு பற்றியெல்லாம் படுசீரியஸாக பேசுவார் என்பதே.... எனக்கு கூட அவர்கள் பெயர் விபரங்கள் எதுவும் தெரியாது. .... ஆனால், இந்தியாவிலேயே மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். .. இவர்களிடம், கடந்த முறை பேசியவற்றை ஞாபகம் வைத்து அதைப் பற்றி விசாரிப்பார்...
புகழ் அவரது தலையில் ஏறியதே இல்லை.... அவரது வீட்டில் ஒரு அறையில் உள்ள பெரிய கண்ணாடி முன் நின்று.. "என்ன.? படம் ஹிட் ஆயிருச்சு, பெரிய ஸ்டார் ஆயிட்டதா நினைப்பா..? ஜனங்க கைதட்றதை நெனைச்சு சந்தோஷப்படறியா..? டேய், மூணு படம் வரிசையாக ப்ளாப் ஆயிருச்சுண்ணா தான் தெரியும். .. தூக்கி குப்பையில வீசிருவாங்க.. அதனால ரொம்ப ஆடாத... "
என்று தனது பிம்பத்தை கண்ணாடியில் நோக்கி கூறுவார்.... அவர் ஒரு மகான்..."
|