Other Articles
Meena relives her Anbulla Rajinikanth days
கொரோனா வைரஸ் : தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை ரஜினி ரசிகர்கள்கள் விநியோகித்தனர்
நமக்குப் பல கடமைகள் இருக்கிறது... ரசிக சண்டையில் ஈடுபடுவது அந்தக் கடமை இல்லை
முதல்வன் படத்தின் தொடக்க விழா நினைவுகள் நவம்பர் 1998
superstar Rajinikanth offers supportive words to Singapore quarantined workers
Vaanam Paarthen from Kabali - A serious, soul-searching music album
Rajinikanth cares for Covid-19 ... Light up a candle at 9 pm for 9 minutes & act in a short film
Rajinikanth Into The Wild with Bear Grylls tops TV ratings
Top 10 comfort movies of Rajinikanth you can stream right now
Coronavirus : Rajini clarifies on his Twitter & Rajini donate 50 Lakhs to FEFSI
Rajinikanth shares importance of rainwater harvesting, Into The Wild episode
அஞ்சலி : வசனகர்த்தா விசு
சாணக்யா இணையதள சேனல் முதலாம் ஆண்டு விழாவில் ரஜினி சுவாரஸ்யமான பேச்சு
பாண்டே சொன்னது என்ன? - ஒரு ரசிகனின் பார்வையில்....
ரஜினியின் சந்திப்புக்குப் பிறகு தினசரி செய்தித்தாளில் தலைப்புச் செய்திகள்
கட்சிக்கு ஒரு தலைமை- ஆட்சிக்கு ஒரு தலைமை - தலைவர் ரஜினிகாந்த்
ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை... ஏமாற்றமே! - மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு குறித்து ரஜினி
சி ஏ ஏ விவகாரம்... வீதிக்கே வராமல்... வீடு தேடி வரவைத்த ரஜினி
மதத்தை வைத்து அரசியல்; இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும் - டெல்லி வன்முறை பற்றி ரஜினி
70 ஆண்டுக் கட்சிகளுக்கு 70 வயது மனிதரால் சாவு மணி அடிக்கப்படும்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினிகுறித்து நெகிழ்ச்சியடைந்த மணிவண்ணன்
(Saturday, 9th May 2020)

நல்ல மனிதர்களைத் தேடிப்பிடித்து நட்புபாராட்டும் உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். அப்படி அவரே விரும்பி தனக்கு நண்பராக்கிக் கொண்டவர்களில் இயக்குநர் மணிவண்ணனும் ஒருவர். ஆனால், இவர்கள் இருவருக்கும் அவ்வளவு பெரிய நட்பு எதுவும் இல்லை. ஏனெனில், ரஜினியோ ஆன்மீகவாதி, மணிவண்ணனோ நாத்திகவாதி அதனால், அவர்களுக்குள் அந்த அளவுக்கு நெருக்கமில்லை. இந்த நட்பை பலர் ஊதிப்பெரிதாக்குகிறார்கள் என்று சிலர் நையாண்டி செய்தார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், தனக்கும் உள்ள நெருங்கிய நட்புகுறித்தும், தன் வாழ்க்கையில் ரஜினி என்கிற மாமனிதர் தன்மனதில் எந்த உயரத்தில் உள்ளார் என்பதுபற்றியும், மணிவண்ணனே மனம்நெகிழ்ந்து கூறியுள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் குறித்து பொதுவாக அனைவரும் கேட்கும்   'ரஜினி என்னதான் செய்கிறார்? , ஏன் இமயமலைக்கு செல்கிறார்? , அங்கு என்னதான் தேடுகிறார்? ' என்கிற கேள்விகளுக்கும் இவரே, பதிலளித்துள்ளார், இவை சூப்பர் ஸ்டாரே தன்னிடம் சொன்னதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

"அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைவிட சீக்ரெட் ஸ்டார் என்கிற பட்டம்தான் மிகப்பொருத்தமானது. இத்தனை வருடங்கள் கடந்தபிறகும் தனக்குள் பல ரகசிய பக்கங்களை ஒளித்து வைத்திருக்கும் வித்தைக்காரர் " என்கிறார் மணிவண்ணன், சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாத ஒரு செய்தி, அவர் மணிவண்ணனுக்கு மிக நெருக்கமானவர் என்பது. மணிவண்ணனின் மகள் திருமணத்திற்கு திரையுலக முக்கியபிரபலங்கள் பலர் வந்திருந்தனர். மணிவண்ணனின் குருவான பாரதிராஜா அவர்களும் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினாலும், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக்கொடுத்தது ரஜினிதான். 'அமாங்க, இந்த எளிய நண்பனுடைய வீட்டுக் கல்யாணத்திற்கு குடும்பத்தோட வந்திருந்தது தாலி எடுத்துக்கொடுத்து கல்யாணம் முடியறவரை இருப்பாருன்னு நான் எந்தக் காலத்திலேயும் நினைச்சதேயில்லை ' என்று கண்கலங்கினார் மணிவண்ணன்.

" டைரக்டரா மட்டும் இருந்த என்னை நடிகனாக்கி அழகு பார்த்ததே ரஜினிதான். கொடிபறக்குது படத்திலே, ரஜினிக்கே சவால் விடும் வில்லன் கேரக்டருக்கு ஒருவரை எங்க டைரக்டர் தேடிக்கொண்டிருந்தபோது, ‘எதுக்கு பாரதி வெளிய அலைந்து கொண்டிருக்கிறிங்க, அதுதான் நம்ம மணிவண்ணன் இருக்கிறாரே, அவரையே வில்லனாக்கிடுங்க,’ என்று என்னை கேமிரா முன்னாடி நிற்கவைத்ததே சூப்பர் ஸ்டார்தான். அந்த படத்தில் ரஜினி, தன் பெயரை ஈரோடு சிவகிரி ன்னு ஸ்டைலா சொல்லுவார், நானும் அவரும் வரும் ஒரு காட்சியில் அவர் அந்தப் பெயரைச் சொல்லும்போது, நான் அசால்டா ' அதவிடுயா, அது என்ன காந்திப்பிறந்த போர்பந்தரா? ' அப்படின்னு நக்கலாப் பேசிட்டேன். உடனே, டைரக்டர் என்னை தனியாக அழைத்துக்தொண்டுபோய், ‘ஏன்யா, ரஜினி எவ்வளவுப் பெரியஸ்டார், இப்படி எடுத்தெரிஞ்சமாதிரி வசனம் பேசிட்டியே’ அப்படின்னு என்னிடம் கோபித்துக்கொண்டார். அடுத்தடேக்கில் போர்பந்தர் டைலாக்குக்குப் பதில் 'அப்படியா ' என்று மரியாதையா பேசிட்டேன். அந்த  ரியாக்ஷன்  சூப்பர் ஸ்டாருக்கு சுத்தமா பிடிக்கவில்லை, ' மணி முன்ன கிண்டலா பேசினீங்களே அதுதான் நல்ல இருக்கு, அதயே பேசுங்கன்னு ‘ பேசவைத்து ரசித்தார். தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் மற்றவர்களின் திறமையை கவனிக்கும் அபூர்வமான நடிகர் சூப்பர் ஸ்டார் மட்டுமே.

நான் நாத்திகவாதின்னு தெரிஞ்சிருந்தும், என்னை நண்பனாக்கி ஏற்றுக்கொண்டவர். ஒருமுறை ரஜினி, 'நீங்க ஏன் மக்களிடம் நேரிடையாக நாத்திகப் பிரச்சாரம் பண்றதில்லை? ' என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் ' நான் எப்படி பகுத்தறிவுக் கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கிறேனோ, அதேபோல்தானே ஆன்மீகவாதிகளும் கடவுளை நம்புகிறார்கள். அந்த செண்டிமென்டை நான் காயபடுத்தவிரும்புவதில்லை ' என்று சொன்னேன். அதற்கு அவர் 'குட், குட் ' என்று ரசித்தார். அவர் ஒவ்வொரு படம் முடிந்ததும்  உடனே ரிஷிகேஷ் பறந்துவிடுவார். இதற்கு முன்னாடி நானே அவரை இதுபற்றி கண்ணாபின்னாவென்று விமர்சித்திருக்கிறேன். நான் ஒருமுறை இது குறித்துக் கேட்டதற்கு, சூப்பர் ஸ்டார் அமைதியா ' மணி, நான் யாரு, என் பெயர் என்ன என்றுகூட அங்கிருக்கும் மலைவாசிகளுக்குத் தெரியாது. அவர்களிடம் காசு பணம் கிடையாது. ஆனால், அன்பு காட்டுவதில் அவர்களைப்போல பணக்காரர்கள் இந்த உலகத்திலேயே கிடையாது. அங்கவசிக்கிறவர்களோட சேர்ந்து ஓட்டஒடச்சலான பஸ்ஸில் பயணிப்பது, சிலுசிலுன்னு ஓடுகிற ஐஸ்நதியில் குளிப்பது, அந்த அமைதியான சூழ்நிலைதான் என்னை இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ரஜினியான பிறகு, நான்தொலைத்த சிவாஜிராவை அங்கதான் நான் பார்க்கிறேன். அங்க இன்னொரு சுவாரசியமும் இருக்கு, அது என்னவென்றால் 'சாமியார்கள் '. கடவுளைத் தேடி, நிம்மதியைத்தேடி திரியும் நிஜசாமியார்கள் அதிகம். அங்க பக்கத்திலுள்ள நேபாளத்திலிருந்து, கொலை, திருட்டு செய்துவிட்டு சாமியார் வேடமிட்டு தலைமறைவாக திரிபவர்களும் ஏராளம். அந்தக் கூட்டத்தில் நிஜசாமியார்களையும், போலிச்சாமியார்களையும் கண்டுபிடுப்பதுதான் எனக்கு பிடித்தப் பொழுதுபோக்கு. அது தனிகலை, இதற்குதான் நான் அடிக்கடி ரிஷிகேஷ் போகிறேன். கிளம்பும் போது செல்போனை வீட்டிலே வைத்துவிடுவேன், மூன்று செட் உடைகள் அவ்வளவுதான். துணி அழுக்காகிவிட்டால் நானே துவைத்துக்கொள்வேன். ஒவ்வொரு தடவை ரிஷிகேஷிலிருந்து திரும்பிவந்ததும் உடம்பும், மனதும் இலேசாகிவிடும். இது தவறா? ' என்றார். நான் அப்படியே ஆடிவிட்டேன் என்றார் மணிவண்ணன்.

ரிஷிகேஷ் மட்டுமல்ல, சென்னை மற்றும் பெங்களூரில் ரஜினி மாறுவேடத்தில் சுற்றித்திரிவார், இது அவர் வீட்டுக்காவல்காரருக்குக்கூட தெரியாது. பெங்களூருக்குச் செல்லும்போது தன்னுடன் ஓட்டுனராக வேலைப்பார்த்த ராஜ்பகதூருடன் மாறுவேடத்தில் சுற்றித்திரிவார். சென்னையில் தன்னந்தனியாக இரவு நேரத்தில், மவுண்ட்ரோடு, கலைவாணர் அரங்கம், ராஜாஜி ஹால் மற்றும் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் அருகில் சுற்றித்திரிவார். போகும் இடங்களில் நடைபாதையில் படுத்திருப்போர் அருகில் அமர்ந்துக் கொண்டு, அவர்களிடம் பேச்சுக் கொடுத்து அரசியல், சினிமா, விலைவாசி, ஆன்மீகம் பற்றி அவர்கள் மனம்விட்டு கூறுவதை அமைதியாகக் கேட்டுக்கொள்வார். அதில் சிலர் ' இந்த ரஜினிகாந்த் சுத்த வேஸ்ட்யா, ஒன்னு அரசியலுக்கு வரேன்னு சொல்லனும், இல்லை வரமாட்டேன்னு சொல்லனும், சும்மா சொதப்பிக்கிட்டு இருக்கான்யா ' என்று திட்டுவார்களாம், இவரும் அவர்களோடு சேர்ந்து குரலைமாற்றி தன்னைத்தனே திட்டிக்கொள்வாராம். பிறகு அவர்களோடு படுத்து உறங்கிவிட்டு பகல் விடிவதற்குள் வீட்டுக்குத் திரும்பிவிடுவாராம். இதை என்னிடம் சிரிச்சிக்கிட்டே சொன்னபோது, நான் அசந்தே போய்விட்டேன். 

வீட்டில் இருக்கும்போது அடிக்கடி போன் செய்து, வீட்டிற்கு வரச்சொல்லி பல விஷயங்கள் குறித்து மனம்விட்டுப் பேசுவார். திமுக கட்சி எப்படி உருவாகியது, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பெரியார் வெளிவந்தது ஏன்?, அண்ணா எப்படிப்பட்டவர் என்று விவரிக்கும் பல புத்தகங்களை என்னிடம் கேட்டு வாங்கி ஆர்வமாக படித்துமுடித்துவிட்டார். ஒருமுறை தயங்கித்தயங்கி ' நீங்க எப்போதுதான் அரசியலுக்கு வருவீங்க? ' என்று கேட்டதற்கு, வழக்கம்போல சிரிப்புத்தான் பதிலாக கிடைத்தது. அது ஏன் என்று தெரியவில்லை. அவர் நடிக்கும் படத்தில் எனக்கு ஒரு ரோல் கண்டிப்பாக கொடுத்துவிடுவார். படையப்பா படத்தில் ஒரு காட்சியில், சிவாஜி, ரஜினி, லட்சுமி, சவுந்தர்யா, சித்தாரா இப்படி எல்லா நடிகர்களும் இருக்கும்போது, நான் ஒவ்வொருவரிடமும் நீளமாக வசனம் பேசவேண்டும். 'இவன் மட்டும் நீளமா வசனம் பேசுவான், நாங்க எல்லாம் இவன் மூஞ்சிய பார்க்கணுமா? ' என்று சிவாஜி கிண்டலடித்தார். அந்த காட்சி நடித்து முடித்து நான் தனியாகப் போய் அழுதுவிட்டேன். அதைப்பார்த்த ரஜினி ' என்னாச்சி மணி, என்று பதறிகிட்டே கேட்டார் ', சிவாஜி மற்றும் ரஜினி இவர்களுடன் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும் அதுதான், என்றேன். சிவாஜி படத்திலேயும் எனக்கு அப்பா வேடம் கொடுத்து என்னைப் பெருமை படுத்தினார். ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். என்றாவது, ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால், டைரக்டர் முதல் லைட்பாய்வரை எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்பார். சூப்பர் ஸ்டார் நிஜவாழ்க்கையிலும் யாராலும் புரிந்தக் கொள்ளமுடியாத ஹீரோதான்.

"உங்கள் குரு பாரதிராஜாதான் என்கிறபோது, உங்கள் மகள் கல்யாணத்தில், ரஜினியை தாலி எடுத்துக்கொடுக்கச் சொன்னது ஏன்? " என்று மணிவண்ணனிடம் கேட்டபோது, " ரஜினிக்கு கல்யாணப்பத்திரிக்கைக் கொடுக்கும் போதே, தாலிய நீங்கதான் எடுத்துக் கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டேன். நான் என் குருநாதர் பாரதிராஜாவிடம்தான் வளர்ந்தேன், இந்த கல்யாணத்தை முன்னின்று நடத்தவேண்டிய கடமையும் உரிமையும் அவருக்குத்தான் உண்டு. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினி வருகிறார் என்றதும், கல்யாணத்துக்கு முதல்நாளே வரவேற்புக்கு வந்து சென்றுவிட்டார் பாரதிராஜா. அவருக்கு அவ்வளவு ஈகோ. மேலும், என் குரு பாரதிராஜாவைவிட என் குடும்பத்தாரிடம் ரஜினிக்கு மிகுந்த பரிவு உண்டு"  என்று கண்கள் கசிய கூறியுள்ளார் மணிவண்ணன்.


 
0 Comment(s)Views: 15044

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information