Related Articles
பாடகர் மலேசியா வாசுதேவன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - 75 இயர்ஸ் ஆஃப் மலேசியா வாசுதேவன் !!
தமிழ் சினிமாவை மாற்றி அமைத்த சிவாஜி !!!
ஃப்ளாஷ்பேக் : பெத்தராயுடு படத்தின் 200 வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி (1995)
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 4 - அருணாச்சலம்
அரசியலுக்காக ரஜினியை எதிர்ப்பது எந்த பயனும் இல்லை!! இறங்கி வந்த திருமாவளவன் !!
எம் ஜி ஆர் உருவாக்கி வைத்திருந்த மாஸ் ஹீரோ பார்முலாவை மாற்றியமைத்த ரஜினி
அவ்வளவு அழகான பாடலை படத்தில் இருந்து நீக்குவதற்கு எப்படி மனம் வந்தது?
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 3 - வீரா
எம் ஜி ஆர் சிவாஜி படங்களின் டைட்டிலை ரஜினி தன் படத்திற்கு பயன்படுத்தினாரா?
சூப்பர் ஸ்டாருக்கு உதவிய பத்திரிக்கையாளர்! கட்டித் தழுவி பாராட்டிய ரஜினி!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 5 - உழைப்பாளி
(Sunday, 21st June 2020)

1969ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி ஜெயலலிதா நடித்த நம் நாடு படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு பராம்பரிய விஜயா வாகினி ஸ்டூடியோ ஒரு தமிழ் படம் எடுக்க தீர்மானிக்கிறார்கள், அந்தப் படம் தான் "உழைப்பாளி"

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு அசாதாரண சூழ்நிலையில் நடித்து பல சிக்கல்களைத் தாண்டி வெளிவந்த படம் உழைப்பாளி.  திரையில் எதிர்ப்புக்களை அதிரடியாக சூப்பர் ஸ்டார் சந்தித்து வெளுத்து வாங்கும் காட்சி தமிழகத்திற்கு ஒன்றும்  புதிது அல்ல.  திரைக்கு வெளியே திரையுலகில் தனக்கு எழுந்த பெரும் எதிர்ப்பு அலைகளைத் தாண்டி ரஜினி தானே வெளியீட்டு வெற்றி கண்ட வரலாறு கொண்ட படம் தான் உழைப்பாளி. 

விநியோகிஸ்தர்கள் ரஜினிகாந்த்க்கு ரெட் கார்டு போட்டநிலையில் சென்னை ஏரியாவில் ரஜினியின் சொந்த விநியோகம் மூலம் படம் வெளியானது. 

சென்னையில் பெரு வணிக  வெற்றியும் பெற்றது உழைப்பாளி. 

படம் வெளிவந்த ஆண்டு - 1993

இயக்கம் - பி வாசு 

இசை - இளையராஜா 

தயாரிப்பு - நாகி ரெட்டியின் சந்தமாமா விஜயா  கம்பைன்ஸ் 

ஒளிப்பதிவு - M C சேகர் 

எடிட்டிங் - மோகன்ராஜ் 

படத்துக்கு போவோம் வாங்க, ஒரு பெரிய அலங்காரமான வீடு காட்டப்படுகிறது. ஒளிவெள்ளம் பாய வீடு வெளிச்சம் பெறுகிறது, அலாரம் அடிக்கிறது, வீடே சுறுசுறுப்படைகிறது. 

தமிழரசு எழுந்து விட்டார் என்று பெரும் பரபரப்பு அடைகிறது வீடு. 

சட்டை... கோட்டு... டை.. என ஒன்று ஒன்றாக சுட்டுக் காட்டுகிறது ஒரு கை.. இறுதியாக கூலிங் கிளாஸ் ஒன்றை விரல் சுட்டி எடுத்து மாட்டி கண்களால் தன் ரசிகர்களுக்கு வணக்கம் வைத்து அறிமுகம் ஆகிறார் நம் சூப்பர் ஸ்டார். 

90களில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் தூக்கலான படங்கள் வந்துக் கொண்டிருந்த நேரத்தில் உழைப்பாளி கொஞ்சம் 80கள் சாயல் கொண்ட ரஜினி படமாகவே வந்தது. 

அண்ணாமலையில் கொண்டு வந்த SUPER STAR முத்திரை இசை எல்லாம் இதில் கிடையாது. 

அறிமுகக் காட்சிக்கு மீண்டும் போவோம்.  மிடுக்கான உடுப்பில் சரசரவென தமிழரசாக ரஜினி படிகள் இறங்கி வர, அவரை வரவேற்க ராதாரவி, நிழல்கள் ரவி  மற்றும் எஸ் எஸ் சந்திரன் ஆகியோர் வரிசை கட்டி நிற்கிறார்கள். 

அவர்கள் போடும் மாலை, சால்வை என அனைத்தையும் பக்கத்தில் இருக்கும் பணியாளரிடம் ரஜினி படு ஸ்டைலாக கொடுக்கும் இடம் பக்கா சூப்பர் ஸ்டார்த் தனம். 

அவர் அவ்வாறு செய்வதைப் பார்த்து இது தெரிஞ்சு இருந்தா எல்லாத்தையும் அவனுக்கே ( பணியாளருக்கே) நேரடியாக போட்டு இருக்கலாம்  என்று எஸ் எஸ் அடிக்கும் நக்கல் அவருக்கே உரித்தானது. 

முறைப்பும் விறைப்புமாக ரஜினி இருக்கிறார்.  அங்கிருந்து காரில் செல்லும் போது காரை நிறுத்த சொல்லி இறங்குகிறார், காரை விட்டு கெத்தா இறங்கி அங்கும் இங்கும் பார்த்து விட்டு ஓட்டம் பிடிக்கிறார்.  அவரைக் காரில் பின் தொடர்ந்து வரும் ராதாரவி சகோதரர்கள் மடக்குகிறார்கள். 

பார்வையாளர்களுக்கு ஆர்வம் தொற்றி கொள்கிறது. ஆமா ரஜினி யார்?  எதுக்கு அவர் ஓடுறார்?  இவங்க எதுக்கு ரஜினியை மடக்குறாங்க? 

கேள்விகளுக்குப் பதிலும் உடனே கிடைக்கிறது. 

ரஜினி ஒரு நாடக நடிகர், அவரை தங்கள் சகோதரியின் அமெரிக்க ரிட்டன் மகனாக நடிக்க அழைத்து வருகிறார்கள்,  அவரிடம் தங்கள் சகோதரியின் நலன் திரும்பவே ரஜினியை அழைத்து வந்ததாக சொல்லி அவரை நம்ப வைக்கிறார்கள்,  ஆனால் உண்மையில் அக்காவின் சொத்தை எல்லாம் ரஜினியை வைத்து குறுக்கு வழியில் அடைய திட்டம் போடுகிறார்கள்.

படத்தில் பெரும் நட்சித்திர அணிவகுப்பு இருக்கிறது. 

சுஜாதா ரஜினியின் புத்தி சுவாதீனம் இல்லாத தாயாராக நடித்து இருக்கிறார். 

நடிகர் ரவிச்சந்திரன் அவர் கணவராக கொஞ்ச நேரமே வந்து போகிறார்.

நடிகர் இயக்குனர் விசு ரஜினியின் குடும்ப வக்கீலாக வருகிறார், அவருடைய உதவியாளராக வரும் கவுண்டமணி காமெடியில் கலக்குகிறார்.

கதைப்படி  ரஜினியின் தாய் மாமன்கள் தான் வில்லன்கள். அந்த வேடங்களில் முறையே ராதாரவி, எஸ் எஸ் சந்திரன், நிழல்கள் ரவி வருகிறார்கள்.  ஒவ்வொருத்தரும் தங்கள் ட்ரேட் மார்க் வில்லத்தன நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். 

அவர்கள் வாரிசுகள் வேடங்களில் வருபவர்கள் உதயபிரகாஷ், ரவி,  

நாயகி ரோஜா எஸ் எஸ் சந்திரன் மகளாக வருகிறார்.  குஷ்பூவுக்கு பிறகு ரஜினிப் படத்தில் ரோஜாவுக்கு அவர் பெயர் வரும் மாதிரியான ஒரு பாடல் அமைக்கப்பட்டுள்ளது. 

ரஜினிக்கும் ரோஜாவுக்கும் காதல் மட்டும் இல்லை காமெடியிலும் எக்கச்சக்கமாய் பொருந்திப் போகிறது.  குறிப்பாக துணிக்கடையில் துணி மாறி போகும் காமெடி பெரிய ஹிட்டடித்தது.  

துணிக்கடை முதலாளியாக அந்த  ஒரு காமெடிக் காட்சியில் வந்த நடிகர்  மதன் பாப்க்கும் நல்ல பெயர் கிடைத்தது 

ரோஜா ரஜினி பாடல்காட்சிகள் கண்ணுக்கும் காதுக்கும் ஒரு சேர விருந்து படைக்கின்றன. 

ஸ்ரீவித்யா ரஜினியின் பாசமுள்ள அக்காவாக வருகிறார், அவரது கணவராக நடிகர் விஜயகுமார் நடித்து இருக்கிறார்.  கதையில் இவர்கள் பாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்றவைகளாக இருக்கின்றன. 

மீண்டும் கொஞ்சம் கதைக்குப் போவோம் வாங்க 

மீண்டும் ரஜினியை வீட்டுக்கு கூட்டி வரும் ராதாரவி சகோதரர்கள் ரஜினியைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்,  ஆனால் ரஜினி அவர்களின் கயமையைப் புரிந்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடி விடுகிறார். 

ரஜினி திரும்பி தன் அக்கா வீட்டுக்கே வந்து விடுகிறார். விதி வசத்தால் தன்னுடைய சொந்தக் கம்பெனியிலேயே கூலியாக நண்பர்களின் உதவியால்  வேலைக்கு சேர்கிறார். 

உழைப்பாளியில் இசை இளையராஜா, பின்னணி இசை அவர் மகன் கார்த்திக் ராஜா.  பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன.  மொத்தம் ஏழு பாடல்கள்.

அனைத்து பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். 

எதிர்பாராமல் ரஜினி தன் அம்மாவை சந்திக்கிறார்,  அங்கு தான் யார்?  தன் மாமன்களால் தன்னுடைய தந்தை கொல்லப்பட்டது, தன் தாய் புத்தி பேதலித்து நிற்பது, தன்னைத் தன் சிறு வயதில் தன் மாமன்கள் தன்னைக் கொலை செய்ய  முயன்றது என தன் கடந்தக் காலம் பற்றி அறிந்து கொள்கிறார். 

வக்கீல் விசு மூலம் தன் மாமன்களின் சதியை வீழ்த்த மீண்டும் தமிழரசு அவதாரம் எடுத்து பெரிய வீட்டுக்குப் போகிறார்.

ஒரு பக்கம் தமிழழகன் என்று உழைப்பாளியாகவும்  இன்னொரு பக்கம் தமிழரசன் என்று முதலாளியாகவும் ரஜினி பட்டையைக் கிளப்புகிறார். 

ரஜினியைக் கூலி என்று நிரூபிக்க ரோஜாவும் அவர் சகோதரர்களும் முயன்று தோற்கிறார்கள்.  

ரஜினியின் தாயாருக்கு நினைவு திரும்புகிறது, சொத்தை கொடுத்து விட்டு நாம் எங்கேயாவது போய் விடலாம் என்று ரஜினியிடம் சொல்லுகிறார். ரஜினியாச்சே தோற்று ஓடுவது அவர் படங்களில் நாம் பார்த்து அறியாதது அல்லவா !

தன் மாமன்களின் தீயத் திட்டங்களை வீழ்த்தி அவர்களிடம் இருந்து தன் குடும்பம்,  சொத்து, தொழிற்சாலை, தொழிலாளர்கள் எல்லாரையும் ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மீதிக் கதை 

இயக்குனர் வாசு ரஜினியோடு சேர்ந்த பணியாற்றிய ஐந்து படங்களில் உழைப்பாளியும் ஒன்று. 

ரஜினி ரசிகர்கள் ரசிக்க சரியான ரஜினி பஞ்ச்க்கள், சண்டைகள், ஸ்டைல்கள் என்று ஒரு பக்கம் நிறைத்து விட்டு மறுபக்கம் குடும்பங்கள் கொண்டாட காமெடி,  அம்மா செண்டிமெண்ட், காதல் என்ற அம்சங்களையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கிறார். 

வாசு ரஜினிக்கு ஒரு ராசியான இயக்குநர். ரஜினிக்கு என்று அளவெடுத்து திரைக்கதை அமைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை வாசு உழைப்பாளி மூலம் மீண்டுமொரு முறை நிரூபித்து இருப்பார்.

"உழைப்பாளி இல்லாத நாடு தான்.. "தமிழ் திரையுலம் உழைப்பாளிகளுக்கு செலுத்திய ஒரு உன்னத காணிக்கைப் பாடல் என்று தாராளமாய் சொல்லலாம். 

பாடலின் படமாக்கமும் பாராட்டும் படி இருக்கும். இந்தப் பாடலில் அக்காலத்தைய ராகவேந்திரா லாரன்சையும் காணலாம். 

"ஒரு மைனா மைனா குருவி.. " கிளுகிளுப்புடன் கூடிய ஒரு ரஜினி ஸ்டைல் பாடல், இந்தப் பாட்டில் ரஜினியுடன் நடித்த பழைய நாயகி ரூபிணி மற்றும் பல்லவி, ஷாபாகுப்தா அலி ஆகியோர் சரியான ஆட்டம் போட்டு இருப்பார்கள் 

" முத்திரை இப்போது " இன்னொரு சில்லென்ற பாடல், காதல் பாட்டில் வாலி  "ஏணிகள் ஆயிரம் இங்கு இருந்தாலும் என்றும் ஏழைகள் ஏறிட விட்டதில்லை " என்ற வரியின் மூலம் கொஞ்சம் சமுதாய சிந்தனையும் புகுத்தியிருப்பார். 

"ஒரு கோலக் கிளி.. " இது ரஜினி மேஜிக் சொல்லும் ஒரு மெல்லிசை பாடல், தெவிட்டாத செவி இன்பம் கொடுக்கும் பாடல் 

"உழைப்பாளியும் நானே.. " இனிய ஒரு காதல் கிண்டல் சூழ்நிலை பாட்டு, நாயகியிடம் நாயகன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டம், பாடல் மூலம் பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது.

"அம்மா அம்மா " இந்தப் பாடல் படத்தில் இரண்டு முறை வருகிறது. பாடகி சுனந்தா குரலில் ஒரு முறையும் பாடகர் எஸ்பிபி குரலிலும் ஒரு முறை ரஜினிப் பாடுவதாக ஒலிக்கிறது.

உழைப்பாளி ஒரு மியூசிக்கல் ஹிட். 

இசையில் உழைப்பாளி எந்த அளவு வெற்றி பெற்றதோ அதே அளவுக்கு காமெடியிலும் பெரு வெற்றி பெற்ற படம் உழைப்பாளி. 

கவுண்டமணி மட்டும் இன்றி வளரும் நிலையில் இருந்த விவேக், மயில்சாமி, சார்லி போன்றோரும் படத்தில் இருந்தார்கள்.

இதற்கு மேல் ரஜினி காமெடிக்கு செய்திருக்கும்  பங்களிப்பு படத்தில் காமெடியை மேலும் பிரகாசிக்க செய்கிறது. 

காமெடி முத்திரை நிறைந்து இருக்கும் சிலக் காட்சிகளை அசைப் போடுவோமா 

வெளிநாட்டில் இருந்து வந்தவராக வக்கீலிடம் ரஜினி அறிமுகம் ஆகும் காட்சியில் ரஜினி விசுவிடம் பேசும் ஆங்கிலம் இருக்கே, வெடி சிரிப்பு. 

விவேக் திருமணம் நடக்க ஜமீன் வேடம் போட்டு செல்லும் ரஜினி கல்யாண வீட்டில் கவுண்டமணி பக்கத்தில் உட்கார்ந்து அவர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் தெறி சிரிப்பு 

சிவபெருமான் வேடத்தில் குருக்கள் ஸ்கூட்டரில் ரஜினி அடிக்கும் லூட்டி குழந்தைகளும் கொண்டாடும் கலகல காமெடி. 

கவுண்டர் அடிக்கும் கமெண்ட்கள் வழக்கம் போல் அடடா ரகம். ஊட்டி ரயில் நிலையம் வாசலில் பஞ்சு மிட்டாய்காரனிடம் பேசும் வசனங்களில் புதைந்து இருக்கும் சமதர்ம சிந்தனை பலே ரகம். 

ரஜினி - இது ரஜினி படம், அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி படம். ரசிகர்களுக்குப் பிடித்ததைப் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். 

படத்தில் முதல் சண்டைக்காட்சி ரஜினி இரட்டையார்களோடு மோதும் படி அதிரடியாக  அமைக்கப்பட்டு இருக்கும். 

அவர் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை தட்டி பறிக்கும் அடியாட்களிடம்,   

"கஷ்ட்டப்பட்டு வியர்வை சிந்தி உழைச்ச கூலியைக் கூலியைக் குறைச்சுக்கவும் மாட்டேன், உழைப்பாளிகளை ஏமாத்துறவங்களைப் பார்த்து சும்மா இருக்கவும் மாட்டேன் " தன் மீது ரெட் கார்ட் போட்டவர்களைப் பார்த்து ரஜினி சொல்வதாகவே படம் வெளியான போது பரபரப்பாக பேசபபட்டது. 

படத்தில் வரும் பெரிய வீட்டின் செட், பழைய சினிமா ரசிகர்களுக்கு இன்னொரு மாபெரும் வெற்றி படத்தின் ஞாபகம் கொடுக்கும், அது புரட்சித் தலைவரின் எங்க வீட்டுப் பிள்ளை தான் அந்தப் படம், "நான் ஆணையிட்டால்.." பாடலில் எம்ஜிஆர் சாட்டை சுழற்றி நிற்கும் அதே போன்ற  படிக்கட்டுகள் உழைப்பாளி படத்திலும் வருவதைக் காணலாம். 

அந்தப் படிக்கட்டுகளில் வைத்து தான் ரஜினி இன்றளவும் அவர் ரசிகர்கள் குறிப்பிடும் வசனங்களைப் பேசியிருப்பார் என்பதைக் கவனிக்க வேண்டும். 

"அந்த ஆண்டவன் நேற்று என்னை ஒரு கூலியா வச்சிருந்தான், இன்னிக்கு ஒரு நடிகனா ஆக்கி இருக்கான், நாளைக்கு... "  என்ற படி அந்தப் படிகளில் ஏறிப் போவார்.

படத்தின் பிற்பகுதியில், "யார் என்ன சொன்னாலும் ஒருத்தன் எப்படி வைக்கணும் என்பது நம்மை படைச்சவன் தவிர யாருக்கும் தெரியாது " என்ற வசனமும் ரஜினி பேசுவது இந்த படிகளில் தான். 

படத்தில் உழைப்பின் பெருமை பற்றி ரஜினி பேசும் இன்னொரு வசனமும் கவனிக்கத் தகுந்தது.

நன்றாக உழைத்தவன், கல்லைத் தின்றாலும் ஜீரணம் ஆகி விடும்  முள் மேல படுத்தாலும் தூக்கம் வரும், ஆனா டகல்பாஜி வாழ்க்கை நடத்தி வந்தால் பச்சைத் தண்ணீர் குடிச்சாலும் ஜீரணம் ஆகாது பட்டு மெத்தை மேல படுத்தாலும் தூக்கம் வராது. 

ரஜினி படங்களில் சின்னதாக வரும் காட்சிகளிலும் கூட ரஜினி முத்திரை இருக்கும், அதற்கு உழைப்பாளி படத்தில் அவர் பார்ட்டிக்கு போகும் காட்சியை சொல்லலாம். 

கிழிந்த ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கிளப் வாசலில் நிற்கும் வாயில் காவலரிடம் ரஜினி பேசும் காட்சி ஒரு நிமிடத்திற்கும் குறைவானது தான் என்றாலும் அதில் அவர் அள்ளி தெளிக்கும் கருத்துக்கள்  ஏராளம். 

நான் யாருன்னு கேளு? 

யார்? 

கூலி 

மனுஷன் ஏன் சம்பாதிக்கணும்ன்னு கேளு? 

நல்லா சாப்பிடுறதுக்கும் நல்லா டிரஸ் பண்ணுறதுக்கும் தான் 

என் பேண்ட் ஏன் கிழிஞ்சு இருக்கு கேளு? 

எலி கடிச்சுருச்சு, அதுக்கு அதைத் தூக்கிப் போட முடியுமா, அதான் போட்டு இருக்கேன். 

நான் யாருடைய சீஷ்யன் கேளு? 

மகாத்மா காந்தி, அவர் சட்டையே போடாமல் உலகமெல்லாம் சுத்தி வந்தப்போ, அவர் சிஷ்யன் நான் கிழிஞ்சப் பேண்ட் போட்டு உள்ளே போகக் கூடாதா? 

ஒரு மனுஷன் எப்படி வாழணும் கேளு? 

மனசுல கவலையும்  உடம்பில் வியாதியும் இல்லாமல் வாழணும் 

ரஜினி ஜொலிக்கும் காட்சி அது. 

காமெடி காட்சியில் பகவானுக்கே ரெட் ஆ,  தன்னாலே Green ஆயிடும் என்று ரெட் கார்ட் அரசியல் பேசுவதாகட்டும்,  உதர் மத் ஜாவ் என்று ஸ்கூட்டரில் இருந்து கத்தும் ரஜினியிடம், இங்கே எல்லாம் இந்திப் பேசக்கூடாது, பேசினால் தார் பூசிடுவாங்க என்று சொல்லும் குருக்கள். அதில் வெளிப்படும் திராவிட அரசியல் மீதான எள்ளல், இவை எல்லாம் பக்கா ரஜினி நகைச்சுவை மாத்திரைகள். 

உழைப்பாளியும் நானே பாட்டு துவக்கம் முன்பு, ரோஜாவை வம்புக்கு இழுப்பார் ரஜினி. தன்னை முதலாளியாக காட்டிக் கொள்ளும் ரஜினியிடம் ரோஜா தான் உழைப்பாளி ரஜினியைத் தான் ரோஜா சொல்லும் இடத்தில் ரஜினியின் முகபாவ மாற்றங்களைக் கவனியுங்கள், நவரசம். 

படத்தில் ரஜினியின் மேக்அப் கொஞ்சம் முன்ன பின்னே இருந்தாலும் அவரது உடைகள் மிகவும் பிரமாதமாக இருக்கும். 

கடைசி சண்டை காட்சி சேசிங் காட்சி விறுவிறு என்று இருக்கும், புனித் இசாருக்கும் ரஜினிக்குமான கடைசி சண்டை ஆக்ரோசமாக அமைக்கப்பட்டிருக்கும். புனித் இஸார் அந்தக் காலத்தில் தூர்தர்ஷன் மகாபாரத தொடரில் நடித்து பெரும் புகழ் பெற்று இருந்தார். உழைப்பாளியில் துணை வில்லனாக நடித்திருந்தார். 

உழைப்பாளியில நடனங்கள் சுந்தரம் மாஸ்டர் அமைத்திருக்கிறார். ரஜினிக்கு ஸ்டைலான முறையில் நடனம் அமைந்த படங்களில் உழைப்பாளியும் ஒன்று. 

உழைப்பாளி கர்நாடக மாநிலம் மலைப் பகுதியான சிக் மகளுரில் அதிகம் படமாக்கப்பட்டிருக்கிறது. 

இதை ஓட்டி இயக்குநர் வாசு, ஒரு பேட்டியில் பகிர்ந்த ஒரு சுவாரஸ்ய தகவல். அங்கு ரஜினி உட்பட படப்பிடிப்பு குழுவுக்கு தங்குமிடம் இல்லாமல் போக ஒரு இரவு ரோட்டில் காரிலேயே ரஜினி படுத்து தூங்கி நடித்துக் கொடுத்து இருக்கிறார். 

அங்கு ஹோட்டலில் சண்டையில் இறங்கிய வாசு, தான் யார் தெரியுமா?  என்று கேட்டுக் கொண்டு நின்ற போது, பின்னால வந்த ரஜினி, நாம் யாருன்னு அவங்களுக்கு தன்னால் தெரியணும், நாம் போய் கேட்டு என்ன ஆகப்போகுது ன்னு நகைச்சுவையாக பொருள் பொதிய சொன்னது இன்னொரு ஹை லைட். 

உழைப்பாளி - 90களில் வந்த ஒரு சந்தோசமான சூப்பர் ஸ்டார் படம், திரைக்கு வெளியேயும் தான் ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்று ரெட் கார்ட் வென்று வரலாற்றில் நின்ற ஒரு படம். 

- தேவ்

ஓவியம் : அறிவரசன்






 
0 Comment(s)Views: 650

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information