Related Articles
Superstar Rajinikanth Birthday Special by India Today Magazine in 2011 (104 Pages)
Thalaivar fans recall an emotional moment ... Thalaivar Reborn Day
Superstar Rajinikanth extends his support to Actor Ponnambalam
Cheran recalls meeting Rajinikanth during success meet of Arunachalam
Superstar Rajinikanth about Director K. Balachander : KB90
அவரது கண்களில் இருக்கும் ஈர்ப்பு சக்தி எவரையும் கவர்ந்துவிடும் - நடிகை ராதிகா ஃப்ளாஷ்பேக்
நல்லது பண்றீங்க...: சித்தா டாக்டருக்கு நடிகர் ரஜினி பாராட்டு
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 7 - பாண்டியன்
சாத்தன்குளம் அநீதி - சத்தியமா விடவே கூடாது!!
ஒரே ஒரு போன் கால் மூலம் ... சாத்தன்குளம் அநீதியை உலகத்தின் பார்வைக்கு எடுத்த சென்ற ரஜினிகாந்த்!!!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 8 - எஜமான்
(Saturday, 18th July 2020)


நடிகர் ரஜினிகாந்த்க்கு ஆண் ரசிகர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அதே அளவுக்கு பெண் ரசிகைகளும் உள்ளார்கள் என்பது உண்மை. 90 களின் துவக்கத்தில் வெளிவந்து பெண்களின் பெரும் ஆதரவைப் பெற்ற ஒரு படம் என்றால் அது எஜமான் தான். 

அந்தக் காலகட்டத்தில் தமிழ் நாட்டின் முன்னணி நடிகர்கள் எல்லோரும் வேட்டி கட்டிய கிராமத்து பஞ்சாயத்து தலைவர்களாக நடித்தப் படங்கள் பெரு வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தன.  படம் முழுக்க வேட்டி சட்டையில் வரும் ரஜினியைப் பார்த்தும் வெகு நாட்கள் ஆன நிலையில் வந்த ஒரு அக்மார்க் கிராமப் பின்னணி படம் எஜமான். 

1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது எஜமான். 

தயாரிப்பு : ஏவி எம் புரொடக்சன்ஸ் 

இயக்கம் : ஆர்.வி. உதயக்குமார் 

இசை : இளையாராஜா 

ஒளிப்பதிவு : கார்த்திக் ராஜா 

எடிட்டிங் : பி எஸ் நாகராஜ் 

நடனம் : ரகுராம் 

சண்டைபயிற்சி : ராக்கி ராஜேஷ் 

கந்தவேலு வானவராயன் இந்த பெயரை ரஜினி உச்சரித்து துண்டைத் தோளில் சுற்றி போடும் போது தமிழகமே அதை தானும் செய்து பார்த்தது. 

எஜமானில் ரஜினிகாந்த் ஒரு ஊர் பெரிய மனிதர் பாத்திரம் ஏற்றிருந்தார்,  அந்த பாத்திரத்தின் பெயர் தான் கந்தவேலு வானவராயன். 

கதைக்குப் போவோம் வாருங்கள்,  தமிழகத்தில் ஒரு கிராமம், அந்தக் கிராமத்தில் ஒரு பெரிய வீடு, பொள்ளாச்சியில் இருக்கும் இந்த வீடு படத்தில் வரும் ஒரு முக்கியப் பாத்திரம் என்று கூட சொல்லலாம். படத்தின் ஆரம்பமே அந்த அழகிய வீட்டின் காட்சியோடு தான் அமைக்கப்பட்டிருக்கிறது. 

ஊரில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது,  அது குறித்த உரையாடலுடன் படம் துவங்குகிறது. வல்லவராயன் தன் சேவகன் செம்பட்டையிடம் தன் தேர்தல் வெற்றி வாய்ப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறான்.  அப்போது அவனுக்கு ஊரில் யாருமே வாக்களிக்க வரவில்லை என்ற தகவல் வந்து சேர்க்கிறது. தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஊர்க்காரர்கள் ஏமாத்தி விட்டதாக வல்லவராயன் ஆத்திரம் கொண்டு கிளம்புகிறான். 

ஊர்மக்கள் எல்லாரும் வல்லவராயானிடம் வாங்கிய பணத்தை ஒரு பொது இடத்தில் சேர்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கேள்வி கேட்க வரும் வல்லவராயனைத் தங்கள் எஜமான் வானவராயன் பக்கம் திருப்பி விடுகிறார்கள். 

சூப்பர் ஸ்டாரின் அறிமுகம் படு ஜோராக இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று. ஊர் மக்கள் இடைவெளி விட்டு நடந்து வர வேட்டி சட்டை துண்டு சகிதம் காற்றில் அலையென பறக்கும் முடியோடு ரஜினி துள்ளல் நடை போட்டு வரும் காட்சி ரசிகர்களைக் கட்டி இழுக்கிறது. 

முதல் காட்சியில் ஓட்டு போட்டு தான் ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்பதில்லை, பலக் காலமாய் ஓட்டு போட்டு பலனின்றி போனதால் இனி அரசியல்வாதிகளை நம்புவதில் அர்த்தம் இல்லை, தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றி கொள்வதே சால சிறந்தது என்று ஊர்மக்கள் வானவராயன் தலைமையில் முடிவு எடுக்கிறார்கள். 

அரசியல் அதிரடி வசனம் பேசி ரஜினி துண்டை சுற்றி போட்ட அக்கணத்தில் ஆகா இது தலைவர் கலக்கப் போகும் அரசியல் படமால்ல இருக்கு என ரசிகன் நிமிர்ந்து உட்கார்கிறான். 

வல்லவராயன் வானவராயன் பகை அந்தக் காட்சியில் பார்வையார்கள் மனத்தில் அழுத்தமாய் பதிவு செய்யப்படுகிறது. 

தொடர்ந்து வானவராயன் வீடும் அவர் குடும்பமும் நமக்கு அறிமுகம் ஆகிறது.  அவருக்கு தாய் தந்தை இல்லை, தாத்தாவும் பாட்டியும் தான்,  பாச மழை பொழிகிறார்கள்.  பின்னர் அவருக்கு நெருக்கமான பணியாள் வெள்ளியங்கிரி.  அவன் ஒரு நக்கல் பிடித்த நகைச்சுவை வேலைக்காரன். 

அடுத்தப் படியாக படத்தின் மிக முக்கிய பாத்திரமான வைத்தீஸ்வரி அறிமுகம் ஆகிறாள்.  வானவராயனின் மாமன் மகள் இவள்.  இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் பெரும் ஈர்ப்பு இருக்கிறது.  ஒரு கண்ணியமான காதலுக்கான அஸ்திவாரம் போடப்படுகிறது. வைத்தீஸ்வரியின் வீடு, குடும்பம், பணியாள் என்று எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் ஆகிறார்கள். 

முதல் பாதி கதை வானவராயன் - வைத்தீஸ்வரி காதல்,  வல்லவராயன் - வானவராயன் மோதல், என்று சீரான பாதையில் பயணிக்கிறது. 

வைத்தீஸ்வரிக்கும் வானவராயனுக்கும் மணம் பேசும் நேரத்தில் வல்லவராயன் குறுக்கில் வருகிறான்,  தனக்கும் பெண் கேட்க முறை இருக்கிறது என்று முறுக்கி கொண்டு நிற்கிறான்.  

மாட்டு வண்டி ரேஸ் வைத்து வெல்பவருக்கே பெண் என வைத்தீஸ்வரியின் அப்பா சொல்லி விடுகிறார். 

சூப்பர் ஸ்டார் படத்தில் போட்டி என்று வந்து விட்டால் வெற்றி யாருக்கு என்பது பச்சைக் குழந்தைக்கும் தான் தெரியுமே!
போட்டியில் சவால்களை சமாளித்து வைத்தீஸ்வரியின் மலர் கரங்களால் வெற்றி மாலை சூடுகிறார் வானவராயர். 

இங்கிருந்து படம் வழக்கமான ரஜினி பாணி அதிரடியில் இருந்து விலகி ஆதர்சமான குடும்ப களத்தில் பயணிக்கிறது. 

இரு வீட்டு பணியாட்களின் காமெடி, தாத்தாவின் சேட்டைகள் என மிதமான வேகத்தில் நகர்கிறது படம். 

வானவராயன் தன் மனைவி மீது அன்பைப் பொழிகிறான். அவளைத் தன் உள்ளங்கையில் வைத்து தாங்குகிறான். 
வானவராயன் - வைத்தீஸ்வரி ஜோடிக்கு தமிழ் திரையுலகப் பக்கங்களில் நிச்சயம் ஒரு இடம் உண்டு, அப்படி ஒரு ஜோடி பொருத்தம். 

வல்லவராயனுக்கு வானவராயன் வாழ்வு கண்டு பொறாமை பொங்குகிறது,  பழைய பகையும் அவனை சும்மா இருக்க விடவில்லை. சதா தன் எதிரியின் வாழ்வை குலைப்பதிலேயே குறியாக இருக்கிறான் 

தன் கையாள் செம்பட்டை மூலம் வைத்தீஸ்வரியின் கருவை வஞ்சகமாய் கலாய்க்க ஏற்பாடு செய்கிறான். வானவராயன் வம்சம் இன்றி போக வேண்டும் என்று சூழ்ச்சி செய்து அதில் வெற்றியும் பெறுகிறான்.

தன் காதல் மனைவியின் மனம் நோகும் என்று வானவராயன் குழந்தை இல்லாத ஏக்கத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு சகஜமாக வளைய வருகிறான்.

வல்லவராயன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வானவராயன் கவுரத்தின் மீது சேற்றை வாரி
இறைக்கிறான். வானவராயனை ஊர் முன்னால் அவமானப்படுத்துகிறான் 

அதே ஊரில் வாழும் பொன்னி என்னும் பெண், வானவராயன் மீது பெரும் அபிமானம் கொண்டவள். தன் மானத்திற்கு சோதனை வரும் என்று தெரிந்தும் வானவராயன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்க சபை ஏறி வானவராயன் தன்னை பலவந்தப் படுத்தியதாக குற்றம் சுமத்துகிறாள். 

நெருப்பில் விழுந்த பொன் போல் பழியில் இருந்து மேலும் ஒளி வீசி வெளியே வருகிறான் வானவராயன். 

இதற்கிடையில் இந்த விஷயம் தெரிய வரும் வைத்தீஸ்வரி தன்னால் தன் கணவனுக்கு நேரும் இழுக்கை நினைத்து பெரும் கவலையடைகிறாள்.  தன் உயிருக்கும் மேலான கணவனின் மானம் காக்க தன்னுயிரையே விடுகிறாள். 

சாகும் தருவாயில் தன் கணவனிடம் பொன்னியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வாக்கு கேட்கிறாள். 

இதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை மீதிப் படம் சொல்லுகிறது. 

எஜமான் படம் பாடல்களுக்காக பெரிதும் பேசப்பட்ட ஒரு படம்.  இந்தப் படத்திற்கு இசை இளையராஜா. இந்தப் படத்தில்  மொத்தம் எட்டுப் பாடல்கள் 

"எஜமான் காலடி மண்ணெடுத்து.. " படத்தின் முதல் பாட்டு  இது தான்,    

சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு கட்டியம் கூறும் ஒரு பாடலாக அமைந்திருக்கும், இது ஒரு ரஜினி பக்தி பாடலாக பிற்காலத்தில் உருப்பெற்றது. 

"தூக்கு சட்டிய "  மெல்லிய நகைச்சுவைத் தவழும் ஒரு குட்டிப் பாட்டு, ரஜினி கவுண்டமணி கூட்டணியில் அமர்க்களப் பட்டிருக்கும். 

"ஆலப் போல் வேலப்போல் " அமர்க்களமான ஒரு காதல் பாட்டு, காட்சியமைப்பு கண்களுக்கு குளிர்ச்சி, குறிப்பாக பாய்களால் வேயபட்டிருந்த குடில்கள் காட்சிக்கு மேலும் அழகு சேர்த்திருக்கும். 

"ஒரு நாளும் உன்னை மறவாத.. " இனிமையான காதல் பாட்டு, இந்தப் பாட்டில் மீனா அழகு பொம்மையாக ஒளிர்வார். 

"நிலவே முகம் காட்டு.. " உணர்வுகளை தொட்டு செல்லும் பொருள் பொதிந்த வரிகள் நிறைந்த பாட்டு இது, கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவின் ஆழம் சொல்லும் ஒரு அழகுப் பாட்டு 

"இடியே ஆனாலும் தாங்கிக் கொள்ளும்.. " கொஞ்சம் தத்துவம் கலந்த ஒரு சூழ்நிலை சொல்லும் பாட்டாக படத்தில் இடம் பெற்று இருக்கும் ஒரு பாட்டு. 

"உரக்க கத்துது கோழி.. " ரஜினி படங்களில் விரக தாபம் தொனிக்க வரும் பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.ஆனாலும் அந்த வரிசையில் வந்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கின்றன. அப்படி எஜமானில் இடம் பெற்ற ஒரு பாடல் தான் இது. நடிகை ஐஸ்வர்யா மீது படமாக்கப் பட்டிருக்கும்

"அடி ராக்கு முத்து... " படம் வந்த நேரத்தில் முதல் ஹிட் பாடல் இது தான், காட்சியமைப்பிலும் பெயர் வாங்கிய ஒரு பாடல் என்று நிச்சயமாய் சொல்லலாம். ரஜினி முழுக்க முழுக்க வேட்டி கட்டி ஆட்டத்தில் அதிர விட்ட ஒரு பாடல் இது. 

எஜமான் படத்தின் பாடல்களை கவிஞர் வாலியும், இயக்குனர் ஆர்.வி.உதயக்குமாரும் எழுதி இருக்கிறார்கள். பெரும்பான்மை பாடல்களை SPB, மலேசியா வாசுதேவன், ஜானகி, சித்ரா பாடி இருப்பார்கள்.

எஜமானில் வானவராயனுக்கு இணையான ஒரு வில்லன் வேடம் வல்லவராயன். அதை கச்சிதமாக நடிகர் நெப்போலியன் செய்து இருந்தார்.  பொறாமை, போட்டி, இயலாமை, வெறுப்பு, என வில்லத்தனம் வெளுத்து வாங்கி இருந்தார்,  அவரது உயரம் உடல் வாகு என சூப்பர் ஸ்டார்க்கு பொருத்தமான வில்லனாக திரையில் ஜொலித்தார். 

கல்யாண வீடா இருந்தா நான் தான் மாப்பிள்ளையா இருக்கணும், எழவு வீடா இருந்தா நான் தான் பொணமா இருக்கணும், மாலையும் மரியாதையும் எனக்கு தான் கிடைக்கணும் என்ற வல்லவராயன் வசனம் ரசிகர்களுக்கு அவ்வளவு எளிதில் மறக்காது. 

வானவராயன் தாத்தா வேடத்தில் நகைச்சுவை மிளிர நடித்திருப்பது பழம் பெரும் வில்லன் நடிகர் எம் என்  நம்பியார்,  சேட்டைகார கிழவனாகப் பின்னியிருப்பார். 

நம்பியாருக்கு ஜோடியாக நடித்து இருப்பது மனோரமா ஆச்சி,  இயல்பாக நடித்து அசத்தி இருப்பார். 

ரஜினிக்கு மாமானார் வேடத்தில் நடிகர் விஜயகுமார் கொஞ்சமே என்றாலும் நிறைவாக நடித்து இருப்பார். 

கவுண்டமணியும் செந்திலும் படத்தின் கலகலப்பு காட்சிகளை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய அக்னி நட்சத்திரம் சினிமா கதாநாயகன்கள் டெம்ளேட் எடுத்து இதில் காமெடியன்களுக்கு பயன்படுத்தி இருப்பார்கள். 

கவுண்டர் வழக்கம் போல் கூடுதல் கலகலப்பு.  

மீனா சீடை செய்து கொடுக்க, அதை ரஜினி உண்ண முடியாமல் திணற, அதைப் பார்த்து கவுண்டர், எங்க ஊரில் ரோடு போடும் மெஷின் வந்துருக்காம், நான் அதுக்கு அடியில் கொடுத்து சாப்பிட்டுக்குறேன் என்பதெல்லாம் கவுண்டர் பிராண்ட் நக்கல். 

நம்பியாருடன் சேர்ந்து பெண்களுக்கு நெல் அளக்கும் காட்சியும் கவுண்டர் கொடுக்கும் வெடி சிரிப்பு மருந்து 

செந்தில் கவுண்டர்க்கு துணையாக வந்து போகிறார். தனக்கு உரிய வகையில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தாலும் வைத்தீஸ்வரி வேடம் தான் ரசிகர்களின் மொத்த உள்ளத்தையும் அள்ளி செல்கிறது.  

வைத்தீஸ்வரியாக நடித்து இருப்பது நடிகை மீனா.குழந்தை நட்சத்திரமாக ரஜினியோடு "அன்புள்ள ரஜினிகாந்த்" மற்றும் "எங்கேயோ கேட்டக் குரல் " என இரு படங்களில் வளர்ந்தப் பின் ரஜினியோடு ஜோடி சேர்ந்த முதல் படம் எஜமான்.  

அழகான தோற்றத்தாலும் தேர்ந்த நடிப்பாலும் மீனா வைத்தீஸ்வரி பாத்திரத்துக்கு பெரும் வலு சேர்த்தார். கணவன் கவுரவம் காக்க உயிர் துறக்கும் காட்சியில் பெரும்பான்மையான பெண் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கி விடுகிறார். 

மீனாவின் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு ரஜினி ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது. ரஜினிக்கும் மீனாவுக்கும் இடையே உள்ள வயது குறித்த விமர்சனங்கள் படம் வெளியான போது காணாமல்  போனது வரலாறு 

படத்தின் இன்னொரு நாயகி ஐஸ்வர்யா, பழம் பெரும் நடிகை லட்சுமியின் மகள். ரஜினியோடு லட்சுமி நெற்றிக் கண் படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஐஸ்வர்யாவுக்கு கொஞ்சம் கனமான வேடம், தன்னால் முடிந்த அளவு செய்து இருப்பார். 

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம், செம்பட்டை. பிரபல ஸ்டண்ட் நடிகர் "தளபதி" தினேஷ் இந்த வேடத்தில் சிறப்பாக நடித்து இருப்பார்.  லீடரே ஒரு பக்குவம் சொல்லுறேன் கேளுங்க என்று நெப்போலியனிடம் இவர் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில்  வெகு பிரபலமானது. 

இவரது பங்களிப்பு சண்டைக்காட்சிகளிலும் தெளிவாய் தெரியும். ரஜினியோடு இவர் மோதும் சண்டைக்காட்சியில் அனல் தெறிக்கும். 

90களில் வந்த ரஜினிகாந்த் படங்களில் எந்த ஒரு வேடம் கொடுத்தாலும் அதில் எதாவது ஒரு முத்திரை வைப்பது ரஜினியின் வழக்கமாக மாறிகொண்டிருந்தது. 

எஜமானில் கந்தவேலு வானவராயன் என்று பெயர்  சொல்லும் போதே தோளில் கிடக்கும் துண்டை ரஜினி படு ஸ்டைல் ஆக மாற்றி போடுவார். படம் நெடுக ஆங்காங்கே இந்த சித்து வேலையை ரஜினி செய்து கொண்டே இருப்பார். அப்போதையக் காலகட்டத்தில் ரஜினி ஸ்டைல்களில் இதுவும் இடம் பிடித்து தோள்களில் துண்டுகளோடு ரஜினி ரசிகர்கள் வலம் வந்தார்கள். 

ஆரம்பக் காட்சிகளில் ஜனநாயகம் காக்க புது விளக்கம் கொடுப்பதாகட்டும், தன்னிடம் பேச வரும் அரசு அதிகாரிகளிடம் தாய் மொழியில் பேசலாமே என்று மெலிதாக இடித்துரைப்பது  ஆகட்டும், கோயிலில் துப்பாக்கி முனையில் முதல் மரியாதை வாங்கும் முறையாகட்டும் திரையில் ரஜினி கெத்து கொடி கட்டி பறக்கிறது.

மீனாவின் அறிமுக காட்சியில் அவரைத் தாங்கி பிடிப்பது,  மீனா சொன்னதால் மொத்த ஆலங்குச்சிகளையும் வைத்து பல் விளக்குவது, சீடை சாப்பிடப் போய் பல் இழப்பது, பட்டாம்பூச்சி பிடிக்க சேற்றில் விழுவது எனக் காதல் கலந்த காமெடியிலும் ரஜினி கொடி ஏற்றி விட்டிருப்பார். 

இடைவேளை காட்சியில் கண்ணியம் குறையாத தன் மீது குற்ற பழி ஏற்று நிற்கும் காட்சியில் ரஜினி அமைதியான நடிப்பில் ஜெயித்து இருப்பார். 

தன் மனைவியின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்பவன் தான் சரியான ஆம்பளை என்று தன் பாத்திரப் படைப்பு ஏற்று அழுத்தமான நடிப்பை வழங்கி இருப்பார் ரஜினி 

எஜமான் ஸ்டண்ட் மற்றும் சண்டைக் காட்சிகள் பிரமாண்டமாக படம் பிடிக்கப் பட்டிருந்தன.  

மாட்டுவண்டி பந்தயம் பொள்ளாச்சியை சுற்றி தெருக்களில் படம் பிடித்து உள்ளார்கள். பந்தயக் காட்சிகள் படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி பார்த்துக் கொண்டன.  இன்னொரு குறிப்பிட தகுந்த சண்டைக்காட்சி படகுகளில் எடுக்கப்பட்டிருக்கும், அதுவும் திரையில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். 

இந்தப் படத்தை இயக்கியவர் ஆர். வி. உதயக்குமார்,  இவர் கிராமப்பின்னணி கொண்ட கதைகளால் 90 களின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாக் கல்லாப் பெட்டிகளை நிறைத்து கொண்டிருந்தார். 

எஜமான் கதை உருவாகும் முன் ரஜினிக்காக இவர் உருவாக்கிய கதை "ஜில்லாக் கலெக்டர் ", அந்த கதையை விட ஏவி எம் எஜமான் கதையை எடுக்க ஒப்புதல் தெரிவித்ததால் படம் மாறியதாக ஒரு தகவல் உண்டு. 

ரஜினிக்கு உரிய மாஸ் உடன் தன் கிராமக்கதை பார்முலாவை கலந்து கதையை நிறுத்த இயக்குனர் பல இடங்களில் தடுமாறி நிற்பது படம் பார்க்கும் சாமன்யனுக்கே புரியும். 

எஜமான் படத்திற்கு ஏவி எம் செய்த விளம்பரங்கள் தனி சிறப்பு வாய்ந்தவை. பெண்கள் கூட்டத்தை திரையரங்கள் நோக்கி படை எடுக்க வைக்க நாளும் பல் போட்டிகள் நடத்தினார்கள். அதற்கு சிறப்பான பலனும் இருந்தது.  தமிழக தாய்க்குலங்கள் எஜமானைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 

எஜமானின் பாடல்களும் காட்சிகளும் இன்றும் ரசிகர்களை வசீகரிக்க தவறுவது இல்லை. 

எஜமானில் மாலையோடு இருக்கும் ரஜினிகாந்த் படம் கால் நூற்றாண்டு காலமாய் இன்றும் சுவரொட்டிகளுக்கான தேர்வாக இருந்து வருகிறது. 

எஜமான் படத்தில் ரஜினிக்கான தருணங்கள் நிறைய இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்து இருக்கலாமே என்பதே ரஜினி ரசிகனின் எண்ணம்,  எஜமான் ரசிகர்களின் அன்பை விட தமிழ்நாட்டு பெண்களின் ஆதரவை அதிகமாக சம்பாதித்த ஒரு படம்.

 

- தேவ்

ஓவியம் : அறிவரசன்






 
0 Comment(s)Views: 584

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information