ஒருபுறம் எம்ஜிஆர் 'இன்பமே உந்தன் பேர் பெண்மையோ' என்று பாடி கொண்டிருந்த பொழுது மறுபுறம் "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" என்று ஜெமினி கணேசன் பாடிக்கொண்டிருந்தார்.
காதல் காட்சிகளில் பாடலை விட உடல் மொழிகள் முன்னேறிக் கொண்டிருந்த காலம் அது.
அப்படி உடல் தோற்றத்தாலும் மொழியாலும் ஜெமினி கணேசன் காதல் மன்னனாகவும் முடிசூடி கொண்டிருந்தார்.
இப்படிக் காதல் காட்சிகளில் தங்களை மிகவும் இலகுவாகவும், சாந்தமாகவும், ஒரு குழந்தை தனமான முகபாவனையுடன் காட்டி கொள்பவர்களே பின்னாட்களில் ஜெமினி கணேசனாக வலம் வந்தார்கள்.
தமிழ் சினிமாவில் காதல் மன்னன்,காதல் இளவரசன், காதல் மந்திரி,தொடங்கிச் சாக்லெட் பாய், அனைத்து ஹீரோக்களுக்குமே அவர்களது நடிப்புத்திறனை விட ஒரு காதல் காட்சியில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தன்மையை விட, அவர்களது புறத்தோற்றம் தான் முதன்மையாகக் கருதப்பட்டது. கருதப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது "கமலை விட ரஜினி ரொம்ப ரொமான்ஸ் பண்ணுவார்னுலாம் சொல்லாதீங்க" என்று சொன்னார்.
அந்த ஒப்பீடு எந்த வகையில் நியாயமென்று எனக்குத்தெரியவில்லை..
கமல் தனக்கான ஒரு பிராண்டை தொடங்கியதே ஜெமினி கணேசன் போன்ற ரொமான்ட்டிக் ஸ்டாம்போடு தான், என்று மேலும் யோசித்ததும் புரிந்தது.
அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் எனத் தனது முதல் அத்தியாயத்தை ஒரு மிட்டாய் பையனாகவே எழுதி வைத்திருந்தார்.
அதனாலோ என்னவோ அவருக்கான ஒரு சிக்னேச்சர் ரொமான்ஸில் இருந்து தொடங்கியது.
ஆனால் ரஜினிகாந்தின் தொடக்கமும் ஆரம்பகாலத் தோற்றமும் அவர் நம்பியாருக்கும் அசோகனுக்கும் ரீப்ளேஸ்மண்ட்டாக இருக்குமோ என்று தான் கருத வைத்தது..
உடலில் நிற்காத கோட்-சூட், சவரம் செய்யாத முகம், எந்தப்பக்கமும் வார முடியாத கோரமுடி எனச் சினிமாவின் இலக்கண மீறலாக அடியெடுத்து வைத்த அவருக்கு எந்தவொரு பாசிட்டிவ் இமேஜும் எளிதில் கிடைத்துவிடவில்லை.
அப்படி இமேஜ் எதுவும் கிடைக்காத ரஜினி, தனக்கான இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தனக்குச் சுலபமாகக் கைவரும் கதாபாத்திரங்களில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.
அது அவரை ஒரு முரடன், ஒரு காட்டுப்பய என்ற கரடுமுரடான பிம்பத்தை அனைவரிடத்திலும் முன்னிறுத்தியது.
தனது பாதையை மாற்றிக்கொள்ளாது அவருக்கான அடிகளைப் பார்த்து பார்த்து தான் எடுத்துவைத்திருந்தார்.
காலம் காலமாகச் சொல்லப்படும் ரொமான்டிக் பிரேம்களில் அவரைப் பொருத்திப்பார்க்க அன்றைய சினிமா வர்த்தகமும் தயாராக இல்லை.
தனக்கான ஸ்டைல் பீடத்தைக் கட்டமைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அவரை வைத்துச் செய்யப்பட்ட சோதனை முயற்சிகளான முள்ளும் மலரும் (1978), ஆறிலிருந்து அறுபது வரை(1979) இரண்டுமே மிகப்பெரிய வெற்றி முடிவை தந்தன.
"முள்ளும் மலரும்" படத்தில் பரிசலில் ஊர் பெண்கள் ரஜினியை கடந்து செல்லும் காட்சியில் "நீங்க எல்லாம் என்கிட்ட வந்து மாட்டிருக்கணும்டீ, உதச்சேன்னா" என்று தனது வசனத்தை ரஜினி முடிக்கும்வரை அந்தப் பெண்கள் ரஜினியை ஒரு கிறக்கத்துடன் தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
அதே படத்தில் முதலிரவு முடிந்து மறுநாள் காலையில் உணவருந்தும்போது ரஜினிக்கும் ஜெயலட்சுமிக்கும் நடக்கும் சம்பாஷணைகளில் அத்தனை அழகியல்.
"சும்மா சொல்லக்கூடாது அழகாத்தான்டீ இருக்க" என்று சொல்லும்போதும் சரி, கழுத்தில் இருக்கும் காயங்களைச் சுட்டிக் காட்டி 'என்னடி இது' என்று குறும்பாகக் கேட்கும்போதும் சரி ரஜினியின் மற்றுமொரு முகம் வெளிவரும்.
இதன்பிறகு காதலை தூக்கிச்சுமக்கும் ஒரு ஜனரஞ்சகமான கதாப்பாத்திரத்தை ரஜினிக்கு ஜானி(1980) திரைப்படத்தில் மஹேந்திரன் தூக்கிக் கொடுத்தார்.
அந்தப் படத்தில் ஸ்ரீதேவி தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியில் ரஜினி ஆரம்பத்தில் காதலை ஏற்க தயங்கி, சிறிது எழுந்து நடந்த பிறகு அருகில் வந்து திருமணம் செய்வதாக ஒத்துக்கொள்வார்.
அந்தக் காட்சியின் இறுதியில் "என்ன பத்தி அது இதுன்னு ஏதேதோ தப்பா நினைச்சுட்டு, ஏன் அப்டிலாம் பேசிட்டீங்க" என்று கேட்டதும் ஸ்ரீதேவி குழந்தைத்தனமாக "நான் அப்டித்தான் பேசுவேன்" என்பார்.
"ஏன் ஏன் ஏன்" என்று கேட்கும் ரஜினியின் பக்கம் ஸ்ரீதேவி திரும்பியதும் இருவரும் சிரிக்கத்தொடங்குவார்கள். பின்னால் படத்தின் ஜீவனான பியானோ ஒலிக்கத்தொடங்கும்.
ஒரு காதல் மலர்வதை அதன் முதல் படியை இருவரும் சிரித்துக்கொள்வது போலக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் ரஜினி தனது முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கும்சமயம் அவருக்கான காதல் சாம்ராஜ்யம் திறந்து கொண்டிருந்தது. வெறும் முத்தங்களும், கட்டிப்பிடித்தலும் தான் ரொமான்ஸ் என்று கருதப்பட்ட சினிமாவில் அந்தப் புன்னகையும் இசையும் காதலை சிலிர்க்க வைத்தது.
இந்த வெற்றிகளுக்குப்பின் அவரை ஒரு முழு ஜாலி பாயாகக் களமிறக்கிய திரைப்படம் "தில்லு முள்ளு(1981)" 'ராகங்கள் பதினாறு' பாடல் முழுவதும் அவர் காட்டும் முகப் பாவனைகளும் உடல் மொழிகளும் இன்றுவரை பிரம்மிக்க வைத்துக்கொண்டு தான் இருக்கிறது.
இந்திரனும் நான் தான் சந்திரனும் நான் தான் என்று தெரியப்படுத்தும் காட்சியில் "என்னடி.. அடிச்சு ஓஞ்சுட்டியா.. மீசை வச்ச ஆம்பள டி. அடிச்ச கையாலயே மீசையை எடு. எட்றீ" என்று அதட்டியதும் ஒட்டு மீசையைப் பிய்த்து எடுப்பார் மாதவி.
அப்பொழுது புருவத்தை உயர்த்தி ரஜினி பார்க்கும் குறும்பு பார்வையும் சரி, கட்டியணைக்க அழைத்து மாதவி ஓடிவரும்போது ஒதுங்கிக்கொள்ளும் அழகும் சரி - ரஜினியின் காதல் ஸ்டைல் அது.
அதையே தான் கபாலி படத்தில் படுக்கை விரிப்பை ராதிகா சரி செய்ததும் அதைச் சிரித்துக்கொண்டே களைத்து விடுவார்
இப்படித் தொடர்ந்து தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடனான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ்களை அத்தனை அழகாகவே வடிவமைத்துக்கொண்டார். இன்று வரையில் ஒரு காதலன் தனது காதலியை எண்ணி ஒரு சோலோ பாடலில் மெய்மறக்க செய்ய முடியுமென்றால் அது "காதலின் தீபமொன்று" பாடலாகத்தான் இருக்க முடியும்.
கைகளைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தலையைச் சிலுப்பியவாறே சவுக்கு மர காட்டில் காதல் விதைக்கும் அந்தப் பாடலில் "மயக்கமென்ன காதல் வாழ்க" என்று சொல்லும் ரஜினியில், அவர் கட்டமைக்க நினைத்த காதல் பிம்பம் வாழத்தொடங்கியிருக்கும்.
"கை கொடுக்கும் கை" திரைப்படத்தில் "தாழம்பூவே வாசம் வீசு" பாடலில் கண்பார்வையற்ற ரேவதியை பாடல் முழுவதும்தன்னோடு தோளோடு தோள் சேர்த்து அணைத்துக்கொண்டே நடந்து வருவார்.
அந்த அரவணைப்பில் தெரிவது தான் காதல். அதைவிடக் காதலை எப்படி வெளிப்படுத்திவிட முடியும்.
தளபதி படத்தில் "போ பண்ணிக்கோ, யார் வேணாம் சொன்னா, போ " என்று துரத்தும்போது ஒரு காதலின் முறிவையும் தன்னால் காட்ட முடியும், கண்ணீரில் தேக்கிவைக்க முடியென்று நிரூபித்திருப்பார்.
இப்படிச் சின்னச் சின்ன அழகியல்களைக் காதலில் சேர்த்து ரஜினி கொடுத்துக்கொன்டே தான் இருக்கிறார்.
இன்னும் நிறைய இருக்கிறது சொல்வதற்கும் ரசிப்பதற்கும் இவரிடமிருந்து. "மாய நதி" பாடல் போதாதா என்ன இந்தக் காதல் மன்னனை ரசித்துக்கொள்ள.
"வாஞ்சை தரவா" என்று கைகளைப் பிடித்துக்கொள்ளும்போது ஒரு நொடி நெஞ்சம் கசிந்திருக்கும்., குமுதவல்லி இல்லாத வீட்டில் அவர் இருப்பது போன்ற ப்ரம்மைகளில் சுற்றி வரும்போது ஒரு சிரி சிரித்து அவளைத் தேடுவது போலத் தொடங்கி இறுதியில் ஓய்ந்து வந்து அமரும் வரை அவர் காட்டும் காதல் ஏக்கங்கள் காதலின் தீபம் ஏற்றும் கணங்கள்.
இங்கு ரசனையென்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. ரஜினியும் அப்படிபட்டவர் தான்.
இது அனைத்துமே ஒரு ரசிகனென்ற கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டவை. நிச்சயம் பலருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த மனிதனும் அவரது முகமும் இன்றுவரை மாறாதிருக்கிறது. கமல் சொல்வதுபோல, ரஜினியை "சார்ந்தோருக்கு" ரஜினி என்றுமே ஒரு காதல் மன்னன் தான்.
இதைக்கேட்டால் ஏளனமாகவும் சிரிப்பாகவும் ஏன் கோபமாகவும் கூட இருக்கலாம். அந்தச் சார்ந்தோர்கள் நாங்களாக ரசிகர்களாக இருந்து கொள்கிறோம். நன்றி.
- திருமணிகுமார் அரோக்கியமணி
Courtesy : https://twitter.com/thiru_Arock
|