“திரு. கமல்ஹாசன் உடனான நட்பை சிலாகித்து பகிரும் நீங்கள் ஏன் திரு. ரஜினிகாந்த் உடனான நட்பை பகிருவதில்லை. அவரைப் பார்த்து நீங்கள் வியந்த ஒரு விஷயம், மற்றும் அவரை நினைக்கும் போது சட்டென்று உங்களின் நினைவுக்கு வரும் ஒரு விஷயம் பகிர முடியுமா?''
''ஒரு மேடையில 'நான் எந்த சினிமாவில் ஜெயிச்சிருக்கேன்னா, கமல்ஹாசன்ற மாபெரும் கலைஞன் இருக்கிற சினிமால ஜெயிச்சிக்கிறேன்றது எவ்ளவு பெரிய விஷயம்'னு ரஜினி சாரே புருவம் உயர்த்தி சொல்லியிருக்கிறார். ரஜினி சாரே ஆச்சர்யப்படுகிற மகா கலைஞன் கமல் சார். நானும் சினிமாவில் நடிக்கணும்னு வரும்போது கமல்சார்தான் ஆரம்ப பிம்பம். கமல்சாரைப் பற்றி பேசியிருக்கேன். ரஜினி சாரைபற்றி கவிதையே எழுதியிருக்கேன்.
*''விலக விலகப் புள்ளிதானே...*
*நீ மட்டும் எப்படி விஸ்வரூபம்.''*
'கிறுக்கல்கள்'ல நான் எழுதின இந்தக் கவிதையை எல்லோரும் காதல் கவிதை, காதலிக்காக எழுதியதுன்னு நினைச்சிக்கிட்டாங்க. ஆமாம், காதலிக்காக எழுதியதுதான். அந்தக் காதலியின் பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இரவு முழுக்க அவர் வீட்ல இருந்துட்டு மறுநாள் காலைல, வெளில பால் பாக்கெட்லாம் போட்டுட்டு இருந்த நேரத்துல அவரோட வண்டில வந்து ஆழ்வார்த்திருநகர்ல இருக்கிற என் வீட்ல டிராப் பண்றார். அவர் வந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. டிரைவரைவிட்டு என்னை டிராப் பண்ண சொல்லியிருக்கலாம். ஆனா, அவர் வந்தார். அவர் என்னை விட்டுட்டுப் போகும்போது நான் அந்தக் காரைப் பார்த்துட்டே இருக்கேன். கார், கொஞ்சம் கொஞ்சமா ஒரு புள்ளியா மறையுது. அப்பதான் அந்தக் கவிதையை நான் எழுதினேன். ஒரு பொருள், ஒரு கார்னு எல்லாமே புள்ளியா மறைஞ்சிடும். ஆனா, உன்னோட பெருந்தன்மை, அந்த உயரம், சூப்பர் ஸ்டார்ங்கிறது எவ்ளோ பெரிய விஷயம்.
இந்திய திரையுலமே மதிக்கிற ஒரு நடிகர். ஆனால், நடிகராகவே இல்லாமல் சக நடிகரை அல்லது நண்பனை ட்ரீட் பண்றவிதம் பெரிய விஷயம். அவர் மேடைகள்ல பேசுற விதம், தூய்மையான அந்த மனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கமல், அமிதாப், பாலசந்தர்னு அவர் அவர்களைப்பற்றி பேசுவது பிடிக்கும். இப்பக்கூட 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தோட இயக்குநர்கிட்ட பேசுன விதம், 'எனக்குக்கூட ஒரு கதை யோசிங்களேன்'னு சொன்னது ரொம்பப் பிடிக்கும். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தை பைக்ல மாறு வேஷத்துல போய் பார்த்துட்டு வந்து, நடுராத்திரில எனக்கு போன் பண்ணி, 'ரொம்பப் பிரமாதமா இருக்கு, இதை ஒரு புக்கா போடுங்க'ன்னு சொன்னார். அவர் சொன்னதுக்காகவே புக் போட்டேன். என் வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை எல்லாம் அவரோட பகிர்ந்திருக்கேன். முக்கியமா என்னோட திருமண செய்தி. அப்ப கிசுகிசு செய்திகள் வந்தபோது நான் அதையெல்லாம் பொய்ன்னு மறுப்பேன். அந்த கிசுகிசுவை மறைச்சிட்டே இருப்பேன். ஆனா, ரஜினி சார்கிட்டதான் முதன்முதலா போய் சொன்னேன். அப்ப அவர் பண்ண அட்வைஸ், அவர் லைஃபைப் பத்தி அவர் ஷேர் பண்ண விஷயங்கள், அப்ப நாங்க சேர்ந்து நடிக்கலாம்னு அவரே கதை சொன்னதுலாம் பெரிய விஷயம். அப்புறம் 'உள்ளே வெளியே' பார்த்துட்டு அவர் பாராட்டுனது 'நோ, நோ, பார்த்திபன்... இந்த ஸ்டைல்லாம் நீங்களும் பயங்கரமா பண்றீங்க. ஆனா, நோ... நீங்க பிஹைண்ட் தி ஸ்கிரீன்தான்'னு சொல்லிட்டு செல்லமா என்னை வேணாம்னு ஒதுக்கினாரு. அப்படின்னா அவர் ரொம்ப ரசிச்சாருன்னு அர்த்தம்.
இப்பக்கூட என்னோட பொண்ணு கீர்த்தனா திருமணத்துக்காக இன்விட்டேஷன் கொடுக்கப்போனப்போ, பணம் எடுக்கப்போனார். என்ன சார், பணம்லாம் வேணாம். நான் அதுக்கெல்லாம் தேவையான அளவுக்குப் பண்ணியிருக்கேன். குழந்தைகளைப் படிக்க வைக்கணும், அவங்களுக்கு என்ன தேவையோ அதை பண்ணணும், மினிமமா ஒரு வசதிக்குள்ள அவங்களை வெச்சிருக்கணும்னு ஒரு ஏற்பாட்டை பண்ணி வெச்சிருக்கேன்னு சொல்லி அவர்கிட்ட மறுத்தேன். ஆனா, அவர் இல்லைல்ல நான் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னார். என்னை மாதிரி கலைஞர்கள் ரிஸ்க் எடுத்து எடுத்து கஷ்டத்துக்குள்ளாகி இருக்கறவங்களைப் பத்தி அவருக்கு நல்லாவே தெரியும். அவருக்கு என்ன தெரியாதோ அதை தெரியாதுன்னே சொல்லுவார். சீக்கிரத்துல அவரை ஒரு சிறப்பான இடத்துல நாம பார்ப்போம்.''
நன்றி : விகடன்
|