45 Years of Rajinism!
1975 ஆம் வருடம் இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத காலம். நாடு எமர்ஜென்சி இருளில் மூழ்கி கிடந்தது. அப்போது தான் இந்திய திரை வானில் ,மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து மின்னப் போகும் அந்த கருப்பு நட்சத்திரத்தின் சரித்திரம் தெற்கில் இருந்து துவங்குகிறது.
பாலசந்தர் அவர்களின் பல்கலைக் கழக வாசல் கதவைத் திறந்துக் கொண்டு பாண்டியன் என்ற ஒரு பழையக் கோட்டுக்கு சொந்தக்காரர் திரையில் வந்து நின்று இதோ இப்போது 45 ஆண்டுகள் ஓடி விட்டன.
ரஜினிகாந்த் என்ற நடிகனின் அறிமுகம் கொஞ்சம் அமைதியாக தான் இருந்தது. அதற்கு பின் வந்த அவர் வளர்ச்சி என்பது பொங்கி எழுந்த்து அருவியென பேரிரைச்சலோடு பலத் தடைக்கற்களை உருட்டி ஓடிய பெரும் நதியின் ஓட்டத்தை ஒத்தது.
70 களில் தனக்கு கொடுத்த வேடஙகளில் தன்னைப் அழுத்தமாய் பொருத்தி நடிகர் என்ற அங்கிகாரம் பெற கடுமையாக உழைத்தார் ரஜினி.. ஐந்து நிமிடமோ ஐமபது நிமிடமோ, திரையில் தோன்றும் போதெல்லாம், யார் இவர்? என்று தமிழ் சினிமா ரசிகர்களை வலுக்கட்டாயமாய் தன்னை உற்று கவனிக்க வைத்தார்.
எழுபதுகளின் இறுதி வரை பெரும் பாலும் கருப்பு வெள்ளைப் படஙகள் மட்டுமே வந்தக் காலக்கட்டம். அந்த படஙகளிலும் ரஜினியின் நடிப்பு வண்ணம் சேர்க்க தவறவில்லை.
அது வரைக்கும், தமிழ் சினிமா நடிகனுக்கு என்று வகுத்து வைக்கப்பட்டிருந்த அததனை இலக்கணங்களையும் தன்னுடைய திரை ஆளுமை மூலம் ஒவ்வொரு படத்திலும் மறுவிசாரணைக்கு உட்படுத்தினார் ரஜினி. வில்லன் பாத்திரம் என்றால் முகத்தில் கொடூரம், செயலில் பயங்கரம் என்று பார்த்து பழகியிருந்த மக்களுக்கு "எனக்கு காக்கா கடி பிடிக்காது" என்றவாறு படிய வாரிய தலையோடு வரும் பக்கத்து வீட்டுக்காரர் தோற்றத்தில் இருந்த "அவர்கள்" ராமனாதன் காட்டிய கொடூர திரை முகமும் சரி, ஊர் நடுவே மரத்ததியில் உட்கார்ந்து வம்பு பேசிய படி வில்லத்தனம் செய்த"பதினாறு வயதினிலே" பரட்டையும் சரி, ரொம்பவே புதிது.
அட இது எப்படி இருக்கு? என்று தமிழ்நாடே வியந்து ரசித்தது.
தமிழ் சினிமாவுக்கு ஆக சிறந்த வில்லன் கிடைத்து விட்டார் என்று விம்ர்சகர்களும் ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கையில் நடந்தது ஒரு திருப்பம்.
மூக்கையனாக முரட்டுக் கோபம் பொங்க கையில் சாட்டை எடுத்து "பைரவி" மூலம் நாயகனாக திரையில் எழுந்து நின்றார்.கருப்பு மின்னல் ரஜினிகாந்த்
அதனைத் தொடர்ந்து ரஜினி திரையில் நாயகனாக வெற்றிகரமாக முழு வேகத்தில் ஓட ஆரம்பித்தார். தொழில் தவிர வேறு சிந்தனையின்றி உழைத்த ரஜினி 78 ஆம் ஆண்டு மட்டும் இருபது படங்களில் நடித்தார். அந்த ஆண்டு தீபாவளிக்கும் மட்டும் ஒரே நாளில் ரஜினிக்கு மூன்று படங்கள் வெளியாகி சரித்திரம் படைத்தது.
ரஜினியின் அந்த அதீத உழைப்புக்கு அதற்கு அடுத்த ஆண்டே அவர் பெரும் விலை கொடுத்தார். உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தூக் கொள்ள வேண்டி வந்தது . அவர் நம்பும் இறையருளால் அந்த இக்கட்டில் இருந்து மீண்டும் திரைக்கு வந்தார்..
80களின் துவக்கமே ரஜினிக்கு அதிரடியாக அமைந்தது..பில்லா என்று பெரும் அவதாரம் எடுத்தார். அப்படம் ரஜினியின் நட்சத்திர அந்தஸ்த்தை பல மடங்கு உயர்த்தியது. அநியாயம் கண்டு சீறும் சிங்கமாய், தீங்கைப் பொறுக்காது வெடிக்கும் எரிமலையாய், கோபக்கார இளைஞன் பாத்திரங்கள் ஏற்று அதில் தன்னை அழுத்தமாய் அடையாளப்படுத்திக் கொண்டார் ரஜினி. முரட்டுக்காளை, தீ, ரங்கா, துடிக்கும் கரங்கள், காளி, என தன் சினிமா பயணத்தின் பாதையை வகுத்து கொண்ட ரஜினி எண்ணற்ற தமிழக இளைஞர்களின் நெஞ்சை தன் அதகளமான அதிரடி நடிப்பால் காந்தமாய் கவர்ந்திழுத்தார். சென்னை முதல் குமரி வரை ரஜினிக்கு பெரும் அளவில் ரசிகர் மன்றங்கள் பதிவு செய்யப்பட்டு செயல் பட ஆரம்பித்தன.
80களில் "ரஜினி படம்" என்ற ஒரு கட்டமைப்பு உருவாக ஆரம்பித்தது. பில்லா, முரட்டுக் காளை, பாயும் புலி, மூன்று முகம் என்று பிரமாண்டமாய் அந்த கட்டுமானம் வர்த்தகரீதியாகவும் பெருத்த வரவேற்பு பெற்று அசுரப் பலம் பெற்றது. ரஜினி ரசிகர்கள் என்று அடையாளத்தோடு ஒரு பெருங்கூட்டம் சேர்ந்து இருந்தது. அவர்கள் ரசனைக்கு முக்கியவத்துவம் கொடுக்கப் பட்டு படங்கல் வெளிவரத் துவங்கின. ரஜினி நடித்தாலே போதும் வியாபாரம் உறுதி என்ற நிலை உண்டானது. ரஜினி என்ற பெயர் தமிழ் சினிமா பெரும் முதலாளிகள் முதல் குக்கிராம டெண்ட் கொட்டகையில் சைக்கிள் டோக்கன் போடும் நபர் வரை கல்லாப் பெட்டியை நிறைக்கும் மந்திரமாக மாறிப் போனது.
இந்தக் காலக்கட்டத்தில் எஸ் பி முத்துராமன் - ரஜினி கூட்டணியை அவசியம் சொல்லியாக வேண்டும். ரஜினி படத்திற்கு என்று தனி இலக்கணங்கள் வகுத்து கொடுத்ததில். எஸ் பி எம்க்கு மிக முக்கியப் பங்கு உண்டு. இவர்கள் கூட்டணியில் இருபதிற்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன.
ரஜினியின் திரை வாழ்க்கையில் குறிப்பிட வேண்டிய படங்களில் தில்லு முல்லு முக்கியமானது. அதிரடி நாயகனாக வலம் வந்துக் கொண்டிருந்த ரஜினிக்கு முழு வீச்சில் அவரது குரு நாதர் பாலசந்தர் அமைத்துக் கொண்ட நகைச்சுவை தளம் தான் இந்தப் படம். ரஜினியின் நகைச்சுவை நடிப்பு மிகவும் கொண்டாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சில வருடங்கள் கழித்து, ரஜினியின் நகைச்சுவையையும் அதிரடி ஆக்ஷ்னையும் இணைத்து முடிச்சுப் போட்டு எடுத்த படம் தான் தம்பிக்கு எந்த ஊரு?. இயக்குனர் ராஜசேகர் அமைத்துக் கொடுத்த இந்தப் பாதையில் பின்னாளில் வந்த வேலைக்காரன்,மாப்பிள்ளை,ராஜாதி ராஜா போன்ற பல ரஜினி படங்கள் பயணித்தன. ரஜினிக்கு பெரும் அளவில் குடும்ப ரசிகர்களும் சேரத் துவங்கியிருந்தனர்.
80 களில் குதிரை வேகத்தில் ரஜினி ஓடினார், பத்தாண்டுகளில் சுமார் 80 படங்கள் நடித்து முடித்திருந்தார். இதில் கணிசமான இந்தி மொழி படங்களும் அடக்கம். ரஜினியின் வீச்சு தமிழ்க எல்லை தாண்டியும் விரிந்தது. ஏற்கனவே 70களில் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல வேற்று மொழிகளில் நடித்து இருந்தார் என்பது இவ்விடத்தில் குறிப்பிட தகுந்தது.
90களில் நுழையும் போது ரஜினி தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டார் என்பது அழுத்தம் திருத்தமாய் நிறுவப்பட்டிருந்தது.அது வரை திகட்ட திகட்ட தன் ரசிகர்களுக்கு திரை விருந்து படைத்து வந்த ரஜினி படங்களைக் கொஞ்சம் குறைத்து கொள்ள துவங்கினார்.பண்டிகை காலங்களில் மட்டுமே படங்கள் வந்தன.அது ரஜினி படம் வந்தாலே அந்த நாள் பண்டிகை நாள் என்று சொல்லும் அளவுக்கும் மாறியது,90களின் மத்தியில் ரஜினி படங்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஏங்கிப் போகும் அளவிற்கு பட வெளியீடுகளுக்கு இடைவெளி விட ஆரம்பித்து இருந்தார் ரஜினி. ஒவ்வொரு பட வெளியீடும் ஒரு பெரும் விழாவாக கொண்டாட்டங்கள் உச்சம் தொட்டன.ரஜினி என்பது தமிழகத்தின் கலாச்சார அடையாளமாகவும் மாறி போனது.
அப்போதைய நிலையில் வெளியான தளபதி , அண்ணாமலை, வீரா, பாட்ஷா, முத்து என ரஜினி படங்கள் வசூலிலும் சரி வரவேற்பிலும் சரி சிகரங்களைத் தொட்டன.குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பாட்ஷா ரஜினிப் படங்களில் தனி மகுடம் சூடியது. ரஜினியை தமிழ் வர்த்தக சினிமாவின் முடி சூடா சக்கரவர்த்தியாக அறிவித்தது. இன்றளவும் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி முக்கியத்துவம் பெற்ற படமாக இருந்து வருகிறது.
முத்து படம் ஜப்பானுக்கு ரஜினியை அறிமுகம் செய்து வைத்தது , ரஜினி ஜப்பானியர்களுக்கு தமிழையும் தமிழ் சினிமாவையும் அறிமுகம் செய்து வைத்தார்.
96 ரஜினிக்கு ஒரு முக்கியமான ஆண்டு, தமிழக அரசியலுக்கு சினிமா நட்சத்திர வருகை ஒன்றும் புதிது இல்லை என்றாலும் அது வரை தான் உண்டு தன் வேலை உண்டு தன் ஆன்மீகப் பயணம் உண்டு என்று அமைதியாக போய் கொண்டிருந்த ரஜினியை அரசியல் தொட்டுப் பார்த்தது ஒரு பெரும் ஆச்சரியம்.
அன்றைய ஆளும் அதிமுகவிற்கு எதிராக திமுகவுக்கு கூட்டணி அமைத்துக் கொடுத்து ஆதரவு தெரிவித்து தொலைக்காட்சி பிராச்சாரமும் செய்தார்.ரஜினி. அது முதல் பெருத்த அரசியல் எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாக ஆரம்பித்தார் சூப்பர் ஸ்டார். அந்த எதிர்ப்பார்ப்பு கால் நூற்றாண்டு தாண்டி தொடர்வது இன்னும் பெரிய ஆச்சரியம்.
திமுக ஆட்சிக்கு வந்தது. ரஜினி மீண்டும் தன் வழக்கமான வாழ்க்கைக்கே திரும்பினார். ஆனால் ரஜினியைத் தொட்ட அரசியலோ மீண்டும் மீண்டும் அவருக்கு பல வகையில் அழைப்பு வைத்துக் கொண்டே தான் இருந்தது. 96க்கு பிறகு வந்த அருணாச்சலம், படையப்பா படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அந்தப் படங்களின் பாடல்கள் வசனங்கள் எல்லாம் அரசியல் கண்ணாடி கொண்டு அலசி ஆராயப்பட்டன. ரஜினியோ எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் விலகியே இருந்தார். அவ்வப்போது வந்த அரசியல் பிரச்சனைகள் மென்மையாக கையாண்டு வந்தார்.
90 களில் ரஜினிக்கு என்று பாத்திரங்கள் படைக்கப்பட்டன. வேறு எந்த நடிகரையும் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதைகளில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு ரஜினி பிம்பத்தின் மகிமை தனித்துவம் பெற்று உயர்ந்து நின்றது. ரஜினிக்கு போட்டி ரஜினியின் முந்தைய படமே என்ற நிலை தான் 90களின் பிற்பகுதியில் நிலவியது.
புதிய நூற்றாண்டு ரஜினிக்கும் சரி அவர் ரசிகர்களுக்கும் சரி ஒரளவு சோதனைக் காலக் கட்டமாகவே இருந்தது. சினிமாவை விட்டு ரஜினி கொஞ்சம விலகியே இருந்தார் என்றே சொல்லலாம்.சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வந்த பாபா படம் போதிய வரவேற்பை பெறாதது மட்டும் இன்றி அரசியல் ரீதியாக் கடும் எதிர்ப்புக்களை வட மாவட்டங்களில் சந்தித்தது. பாபா ரஜினியின் சொந்த படம், படத்திற்கு கதையும் அவரே.
ரஜினி வழக்கம் போல் பதறாமல் சித்றாமல் தனியாகவே நின்று வந்த எதிர்ப்புகளை சமாளித்தார். பாபா பிரச்சனை முடிந்த கொஞ்ச காலத்தில் காவிரி பிரச்சனையில் ரஜினியின் பெயர் இழுக்கப்பட்டு அரசியல் சர்ச்சை கிளம்பியது. அதையும் ரஜினி தனியாளாகவே சந்தித்து தாண்டி வந்தார். 2002 சேப்பாக்கத்தில் தனியாளாக உண்ணாவிரதம் இருந்த ரஜினியின் பின்னால் திரண்ட மக்கள் வெள்ளம் ஆளும் எதிர்கட்சிகளை ரஜினியை மதிப்பிற்குரிய இடத்தில் வைத்து பார்க்கும் படி செய்தது.
இதற்கு பின் மீண்டும் சில காலம் சினிமா எதுவும் செய்யாமல் ர்ஜினி ஒதுங்கியே இருந்தார்.அந்த நேரத்தில் ரஜினியின் சகாப்தம் முடிந்தது என்று எழுதாத பேனாக்களின் எண்ணிக்கை வெகு குறைவு.. புதிய நூற்றாண்டில் சினிமா துறை முற்றிலும் மாறி கொண்டிருந்தது.. அடுத்த தலைமுறை நடிகர்கள் வரத் துவங்கினார்கள். கோடம்பாக்கத்தின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தங்களை தாங்களே அறிவிக்கப் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த நிலையில் ரஜினி மீண்டும் கேமரா முன் நின்றார்.
அப்போதைய சூழ்நிலையில் வந்த பி.வாசு இயக்கத்தில் வந்த சந்திரமுகி திரைப்படம் அது வரை வந்த ரஜினி படங்களில் இருந்து முற்றிலும் வேறுப்பட்டு இருந்தது. படத்தில் மிகவும் மாறுபட்ட ஒரு ரஜினியைப் பார்த்தனர் ரசிகர்கள். படம் மாபெரும் வெற்றி பெற்றது.. சந்திரமுகி மூன்று வருடங்கள் திரையரங்கில் ஓடி சாதனைப் படைத்தது. சூப்பர் ஸ்டார் சிம்மாசனம் தனக்கு மட்டுமே என்று தன் அம்பதைந்து வயதிலும் ரஜினி சந்திரமுகியின் அபார வெற்றி மூலம் தன் பழைய புதிய போட்டியாளர்களுக்கு உரக்கக் சொன்னார்.
அடுத்து என்ன செய்யப் போகிறார் ரஜினி என்ற கேள்வி எல்லாருக்கும் எழுந்தது. சில வருடங்களாய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்த இயக்குனர் ஷங்கர் ரஜினி கூட்டணி 2007ல் அமைந்தது. சிவாஜி வந்தது, சிவாஜி தமிழ் சினிமாவின் வர்த்தக முறையை மாற்றி அமைத்தது.படம் ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் வெளிவந்தது..அனைத்து திரைகளிலும் அசாத்திய ஓட்டம் ஓடி வசூலைக் குவித்தது. ரஜினியின் கொடி இன்னும் உயர பறந்தது.
சிவாஜிக்கு பிறகு மீண்டும் ஒரு முறை ஷங்கரோடு இணைந்தார் ரஜினி..ஹாலிவுட் தரத்திற்கு இணையாக ரஜினியின் பல பரிமாண நடிப்பில் எந்திரன் படம் கொடுத்தார் ஷங்கர்.. தமிழ் படங்களுக்கு உலகெங்கும் வியாபாரக் கதவுகள் திறந்தது. வியாபாரம் அதிர்ந்தது. ரஜினி என்ற பெயர் இந்திய திரை வானைத் தாண்டி உலக அளவிலும் கவனம் ஈர்த்தது.
அடுத்த தசம ஆண்டின் துவக்கமும் கடும் சோதனையாகவே ரஜினிக்கு துவங்கியது. ராணா என்ற சரித்திரப் படம் அறிவிக்கப்பட்டு அதன் துவக்க விழா அன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரசிகனின் கண்களைப் பனிக்க விட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு பறந்துப் போனார் ரஜினி. மீண்டும் மீண்டு வந்த ரஜினியை திரையில் காண இன்னொரு மூன்று ஆண்டுகள் காத்து இருந்தார்கள் ரசிகர்கள்.
ரஜினியின் அடுத்தப் படம் கோச்சடையான் ,நேரடி படமாக இல்லாமல், மோஷன் கேப்சர் என்ற முறையில் தயாரான படமாக வந்தது. அதைத் தொடர்ந்த லிங்காப் படமும் ரஜினிக்கு பிரச்ச்னைகளையே கொடுத்தன. 2014 ஆம் ஆண்டு ரஜினியின் சினிமா பயணத்தில் ஒரு வீழ்ச்சியின் காலமாகவே பார்க்கப்பட்டது,
அகவை அறுபதைக் கடந்த ரஜினி கபாலி படம் அறிவிக்கும் போது இருந்த எதிர்ப்பார்ப்பு குறைவு தான். ஆனால் அந்த படத்தின் ட்ரெயிலரில் ரசிகர்கள் பார்த்த ரஜினியால் மீண்டும் திரையரங்கள் திருவிழா கோலம் பூண்டன. எள்ளல், துள்ளல், கெத்து, என ரஜினி கபாலியில் ரசிகர்கர்களைக் கட்டி இழுத்து இருந்தார். கபாலி ரஜினிக்கு தமிழக சினிமா ரசிகர்கள் இன்னொரு முறை சூப்பர் ஸ்டார் நாற்காலியைப் பட்டயம் போட்டுக் கொடுத்தனர்.
எழுபது வயதை தொட்டு நிற்கும் நிலையில் ரஜினி நடித்து வெளிவந்த பேட்ட மற்றும் தர்பார் படங்களில் பழைய ரஜினியாக மீண்டும் திரையில் தோன்றினார். அவர் நடிக்க வந்து கிட்டத்தட்ட அறை நூற்றாண்டு நெருங்கி நிற்கும் ரஜினி என்னும் அந்த நித்திய இளைஞன் நம்மை மலைக்க வைக்கிறார்.
அவர் திரை ஆளுமை இன்றும் பலருக்கும் எட்ட முடியா சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது.மூன்று தலைமுறைகளை மகிழ்வித்த அந்த கலைஞன் இன்றும் தன் ஒட்டத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை , தான் ஓடும்.வேகத்திற்கு தமிழ் சினிமாவையும் பல உயரங்களுக்கு தன் தோளில் தூக்கி கொண்டு ஓடுகிறார் என்பது நிதர்சனம்.
தன் கலை வாழ்வின் நாற்பத்தைந்து வருடப் பயணத்தில் ரஜினி எவ்வளவோ செல்வம் சேர்த்து இருக்கிறார்.எத்தனையோ விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார். இருப்பினும் அவர் சம்பாதித்திருக்கும் பெரும் செல்வம் என்றூம் ரசிக கண்மணிகள் தான், அவருக்கு கிடைத்த மிக உயரிய விருது அவரது அன்பு ரசிகர்கள் அவரை அழைக்கும் தலைவா என்ற ஒற்றை சொல் தான் என்றால் அது மிகையாகாது. திராவிடம் உச்சம் பெற்று நின்ற காலக்கட்டங்களிலும் தன் ஆன்மீக அடையாளங்களை மறைக்காத ரஜினி அன்றும் இன்றும் மக்கள் மனத்தில் அவ்ருக்குப் பிடித்தமான இமயமலைப் போல் உயர்ந்து இருக்கிறார் மறுக்க முடியாத உண்மை
எத்தனையோ தடைகளையும் விமர்சனங்களையும் கடந்து உச்சம் தொட்டு நிற்கும் சூப்பர் ஸ்டாரைப் பார்த்து சொல்லத் தோன்றுவது ஒன்று தான்
"தலைவா நீ வீழ்வாய் என்று நினைத்தார்களோ..இல்லை நீ வாழ்வாய்...எம்மை என்றும் ஆள்வாய்"
- தேவ்
|