அது பிரபலமான படமல்ல. பாட்டும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. ரஜினிக்கான பாட்டுதான் ஆனால், விஜயகுமார்தான் படத்தின் ஹீரோ. ரஜினி, செகண்ட் ஹிரோதான். ஒரு சாதாரண பழிவாங்கும் கதை. கிளைமேக்ஸ்க்கு முன்னர், வில்லனுக்குச் சவால் விட்டு ரஜினி பாடுவதுபோல் பாடல் இது..
மை நேம் இஸ் நோபடி
ஹிஸ் நேம் இஸ் சம்படி
ஐ வாண்ட் தட் சம்படி
கண்ணதாசன் + எம்.எஸ். விஸ்வநாதன் கூட்டணியில், இப்படியொரு பாடல் வந்திருக்கிறது என்பதை யாரும் நம்பமாட்டார்கள். ரஜினிக்காக, வழக்கமான நடையிலிருந்து வேறுபட்டு, ஆங்கில வார்த்தைகளை பல்லவியில் சேர்த்து எழுதப்பட்ட பாடல். அப்போது, ரஜினி வில்லனாக, செகண்ட் ஹிரோவாக நடித்துக்கொண்டிருந்த காலம். ஆனாலும், ஸ்டைலுக்கு முக்கியத்துவம் தந்த அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல்களை நவீனமான அமைக்கவேண்டி இருந்தது.
முதலில், எம்.எஸ். விஸ்வநாதனே பாடுவதாக இருந்தது. பின்னர், கடைசி நேரத்தில்தான் எஸ்.பி.பியை அழைத்தார்கள். ஆக்ஷன் பாடல், ரஜினி டான்ஸ் என்றதும், தன்னுடைய குரலை மாற்றி, ஏற்ற இறக்கங்களோடு பாடி, ரஜினிக்கென்று ஒரு பார்முலாவை உருவாக்கினார், எஸ்பிபி. 1978-ல் உருவாக்கப்பட்ட அந்த பார்முலா, 40 ஆண்டுகளைக் கடந்தும், சும்மா கிழி வரை தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.
எஸ்பிபியும், ரஜினியைப் போலவே ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் அறிமுகமானவர். மிகக் குறுகிய காலத்தில் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் அடுத்தடுத்த பாடல்களைக் கொடுத்து, பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர். முதல் பத்து ஆண்டுகள், தென்னிந்திய சினிமாவில் கோலோச்சிய பின்னர் பாலிவுட்டிலும் பிரவேசித்து, அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டியவர். தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்று முத்திரை பதித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் எஸ்பிபியும் ஒரு முக்கியமான விரல்.
ரஜினிக்கான முதல் டூயட் பாடலைப் பாடியவர், எஸ்பிபி. இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலத்தின் வரிகளில், புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் இடம்பெற்ற விழியிலே மலர்ந்தது, உயிரிலே கலந்தது பாடல். அப்போது, ரஜினி வில்லனாக படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலம். டூயட் பாடல் தேவையில்லை என்று நினைத்து, படத்தை முடித்துவிட்டார்கள். படம் வெளியாவதற்கு முன்னர், ஒரு டூயட் பாடலை சேர்க்கலாம் என்று முடிவெடுத்து, ஒரே நாளில் எழுதி, இசையத்துவிட்டு, அவசர அவசரமாக ரஜினியை சித்தூருக்கு அழைத்துச்சென்று, இரண்டே நாளில் படமாக்கப்பட்ட பாடல்.
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
படுவேகமாகச் செல்லும் பல்லவி. அதைத்தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசை. பின்னர் மெதுவான நடையில் செல்லும் பாடல் வரிகள் முடிந்து, திரும்பவும் பல்லவிக்குச் செல்லும்போது, அதே வேகம். வயலின், கிடார், புல்லாங்குழல் என ஒவ்வொரு இசைக்கருவியும், பாடல் வரிகளில் அவ்வப்போது தலைகாட்டும்படியான இசைக்கோர்வை.
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே.
என்று, நடுவே இனிமையான இடைச்செருகல் முடிந்து, மெயின் பல்லவியில் இணையும் தருணம். இளையராஜா + எஸ்பிபி கூட்டணி ஒரு வலுவான இசைக்கூட்டணி என்பதை நிரூபித்தது. பாடல், மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இளையராஜா, எஸ்.பி. முத்துராமன், ரஜினி, பஞ்சு அருணாசலம் அனைவருக்கும், புவனா ஒரு கேள்விக்குறி ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம்.
தமிழில் மட்டுமல்ல, அதே மாதத்தில் வெளியான தெலுங்கு, கன்னட படங்களுக்கும் ரஜினிக்காக எஸ்பிபி பாடியிருந்தார். ரஜினிக்கான எஸ்பிபி பாடிய இரண்டாவது டூயட், தமிழ் அல்ல. தெலுங்கு! சிலகம்மா செப்பிந்தி படத்தின் குர்ரா டானுகோனி. எஸ்பிபிக்கு, தெலுங்கில் பெயர் வாங்கித்தந்த ஏராளமான பாடல்களில் இதுவும் ஒன்று. சிலகம்மா செப்பிந்திதான், பின்னாளில் தமிழில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு நிழல் நிஜமாகிறது என்னும் பெயரில் வெளியானது. எஸ்பிபி பாடிய அதே தெலுங்குப் பாடலை, பின்னாளில் தமிழிலும் பாடினார். அதுதான், கம்பன் ஏமாந்தான்..!
ரஜினிக்கான எஸ்பிபியின் மூன்றாவது டூயட் பாடலும், தமிழ் அல்ல. கன்னடப் படத்தில் இடம்பெற்றது. சகோதர சவால் என்னும் படத்தில் இடம்பெற்ற நல்லனி சவி, கன்னட சினிமாவின் மெகா மெலடி. இதே பாடலும் படமும், தெலுங்கிலும் உருவாக்கப்பட்டு, தெலுங்குப் பாடலையும் ரஜினிக்காக எஸ்பிபி பாடினார்.
தமிழில், ரஜினிக்காக ஏராளமான டூயட் பாடல்களை பாடியிருக்கிறார், எஸ்பிபி. அதையெல்லாம் ரஜினிக்காகவே பிரத்யேகமாகப் பாடியிருக்கிறார். ரஜினிக்கான ஸ்டைல், டூயட் பாடல்களிலும் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே, கவனமெடுத்துப் பாடிய பாடல்கள் அவை. நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாலும் பாடலை.. ரஜினிக்காக எஸ்பிபியை தவிர வேறு யாரும் பாடியிருக்க முடியாது. ரஜினி ஸ்டைலுக்கான அனைத்து அங்க அடையாளங்களையும் இந்தப் பாடலில் உணர முடியும்.
ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் இடம்பெற்ற கண்மணியே காதல் என்பது கற்பனையோ, அன்னை ஓர் ஆலயத்தில் இடபெற்ற நதியோரம், ஜானியின் இடபெற்ற ஸ்னோரீட்டா தொடங்கி, சமீப காலம் வரை ரஜினி படங்களின் டூயட் பாடல்கள் எஸ்பிபியால் பாடப்பட்டன.
என்னதான் டூயட் என்றாலும், ரஜினி பட அறிமுகப் பாடல்தான் எஸ்பிபிக்கு கிடைத்த பெரிய அடையாளம். 90-களில், தளபதியில் தொடங்கி, 2020 தர்பார் வரை, ரஜினி – எஸ்பிபி கூட்டணியின் வெற்றிக்கொடி இன்னும் பறந்துகொண்டிருக்கிறது. மலேசிய வாசுதேவனின் பொதுவாக எம்மனசு தங்கம், மனோவின் மலையாளக் கரையோரம் என்பதையெல்லாம் தாண்டி, ரஜினி அறிமுகப் பாடலில் எஸ்பிபி தனி முத்திரை பதித்தவர்.
80-களில், ரஜினிக்கான அறிமுகப் பாடலுக்கு பொருத்தமானவர் மலேசியா வாசுதேவன்தான் என்கிற நிலை 90-களில் மாறியது. எஸ்பிபி பாடல் இல்லாத ரஜினி அறிமுகமே இல்லையென்கிற நிலை, 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடருகிறது. 40 ஆயிரம் பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்பிபி, ரஜினிக்காகப் பாடிய பாடல்கள் 100-க்கும் குறைவானவையே. அவற்றில், அறிமுகப் பாடல் என்றால் 30 பாடல்களுக்குள்தான் இருக்கும். அத்தனையும், உலகெங்கும் உள்ள தமிழர்களால், ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.
80-கள் தொடங்கி, இன்றுவரை ரஜினி படம் வெளியாகும் திரையரங்குகளை திருவிழாக் களமாக தொடர்ந்து வைத்ததில் எஸ்பிபிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த வகையில், ரஜினியும் ரஜினி ரசிகர்களும், எஸ்பிபிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். எஸ்பிபியின் குரலை திரும்பத் திரும்ப கேட்டு, நினைவலைகளில் மூழ்வதுதான் அவருக்குச் செய்யப்படும் சிறப்பான அஞ்சலியாக இருக்கமுடியும்.
- ஜெ. ராம்கி
https://indrayaseithi.com
ரஜினியும் எஸ்.பி.பியும் - நெகிழும் ராம்கி
|