அண்ணாத்த' படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களாக எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீண்ட நாட்களாகவே இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன்தான் படப்பிடிப்புக்கு ரஜினி வருவார் என்றெல்லாம் தகவல் வெளியானது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று (டிசம்பர் 13) சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குத் தனி விமானத்தில் பயணித்தார் ரஜினி.
டிசம்பர் 15-ம் தேதி முதல்தான் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், இன்று (டிசம்பர் 14) முதலே 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டுள்ள படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று தொடங்கப்பட்டுள்ள படப்பிடிப்பில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினி முகக்கசவம் அணிந்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இன்னும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாத நிலையில், இந்தப் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'அண்ணாத்த' படப்பிடிப்பிலிருந்து டிசம்பர் 29-ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த். டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, மீண்டும் ஹைதராபாத் சென்று 'அண்ணாத்த' படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினி முடிவு செய்துள்ளார்.
ரஜினியின் புதிய கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி?
இதற்கு இடையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 9 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து நேற்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தேர்தல் ஆணையம் அறிவித்த கட்சிகள் மற்றும் சின்னங்கள் பட்டியல் வரிசையில் உள்ள 9 கட்சிகளில் 8-வது கட்சியாக “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது. எர்ணாவூர் பாலாஜி நகரை தலைமை இடமாக கொண்டு இந்த கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலில் அந்த கட்சியை பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் இருந்தது.
இன்று காலை ரஜினி பதிவு செய்துள்ள கட்சிதான் “மக்கள் சேவை கட்சி” என்றும் புதிய கட்சிக்கு தேர்தல் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் சின்னமாக “ஆட்டோ” தேர்வு செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. ரஜினி தரப்பில் “பாபாவின் முத்திரை” சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்றத்தினர் காத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றத்தினர் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
|