தலைவர் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை வெளிக்காட்ட, தலைவரை அரசியலுக்கு அழைக்க அறவழி போராட்டத்தை நடத்தி இருக்கிறர்கள்.
பலர் இப்போராட்டம் வெற்றி பெறாது என்றே நினைத்தார்கள் ஆனால், நடந்ததோ வேறு.
ஒரு அறவழி போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் பாடமே எடுத்துள்ளார்கள்.
மன்ற தலைமை கூறியதால், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மன்ற பொறுப்பில் உள்ளவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்து விட்டார்கள்.
எனவே, தலைமையே இல்லாமல் ரசிகர்கள் மட்டுமே இணைந்து நடத்தி, மிகச்சிறப்பாக முடித்து விட்டார்கள்.
காவல்துறையிடம் அனுமதி வாங்கியது, கூட்டத்தை ஒழுங்கு செய்தது, மொபைல் கழிவறை வசதிகள், குப்பையை சுத்தம் செய்தல், மருத்துவச் சோதனை, முகக்கவசம், சேனிடைசர் என்று அனைத்துமே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள், பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
சரியா தவறா?
இந்நிகழ்வு சரியா தவறா என்று பேச வேண்டியதை விட, ஒரு பகுதி ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை அறவழியில் வெளிப்படுத்த எடுத்துக்கொண்ட வாய்ப்பாகக் கருதலாம்.
தலைவர் வரவில்லை என்று கூறியும் கூட்டம் நடத்துவது தலைவரை மதிக்கவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டியதில்லை.
தலைவரிடம் அன்பை வெளிப்படுத்துபவர்கள் பலர், அதில் இவர்கள் ஒரு பகுதி.
யாரும் தலைவருக்குப் பிரச்சனை வர வேண்டும் என்று நினைக்கப்போவதில்லை. அவரை அவமானப்படுத்தும் எண்ணமும் இல்லை.
தலைவரால் தங்களுக்கு நல்லது நடக்காதா! என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
தலைவர் வந்தால், இதெல்லாம் மாற்றம் பெறும், இதெல்லாம் நடக்கும் என்று காத்து இருப்பவர்கள், தங்களின் இன்னும் மிச்சம் இருக்கும் நம்பிக்கையை இதைப்போல வெளிப்படுத்துகிறார்கள்.
ரசிகர்களால் திடீர் என்று கூட்டப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற நிகழ்வுக்கு 10,000+ பேர் கூடுவது என்றால், சாதாரண விஷயமல்ல.
தலைவர் வந்தாலும் தலைப்புச் செய்தி, அவரது ரசிகர்கள் என்றாலும் தலைப்புச் செய்தி தான்.
இதில் இரண்டு மிகச்சிறந்த விஷயங்கள் உள்ளன.
1. தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, இந்நிகழ்வில் கலந்து கொள்ளாத மன்ற செயலாளர்கள், பொறுப்பில் உள்ளவர்கள்.
தலைமையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்கள், கட்டுகோப்பானவர்கள் என்பதை நிரூபித்தார்கள்.
2. இன்னொரு பகுதி ரசிகர்கள், தலைமையே இல்லையென்றாலும், தலைவர் கற்றுக்கொடுத்த ஒழுக்கத்தை, மேலாண்மையை, பண்பைக் கூட்டத்தில் காட்டி, ரசிகர்கள் அல்லாதவரை திகைக்க வைத்தார்கள்.
இரண்டுமே மிகச்சிறந்த விஷயங்கள். ரசிகர்களுக்குத் தலைவர் போல ஒருவர் கிடைக்க மாட்டார் அதே போலத் தலைவருக்குக் கிடைத்த ரசிகர்கள் போல வேறு யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்.
'என் ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தர வேண்டாம்' என்று தலைவர் கூறினார். அது உண்மையே!
-கிரி
|