சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை (17 ஏப்ரல் 2021 ) மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து 11 மணி அளவில் அவரை வட பழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விவேக்கின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
முன்னதாக விவேக் மருத்துவமனையில் இருந்தபோது, அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக ரஜினிகாந்த் ட்வீட் செய்தார்.
விவேக் இறந்த செய்தி அறிந்த ரஜினி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
திரைக்கலைஞர் என்பதைத்தாண்டி, சமூக ஆர்வலர் என்ற முகமும் விவேக்கிற்கு உண்டு. மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமுடன் ஏற்பட்ட நெருக்கம் அவரை மரம் நடுதலில் ஆர்வம்கொள்ளச் செய்தது. தமிழ்நாடு சந்திக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தார்.
கடைசி பேச்சிலும் சமூக அக்கறை… எந்த நேரமும் சமூக சிந்தனையிலே வாழ்ந்த நடிகர் விவேக்..!!.
முன்னதாக, நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசியதே அவருடைய கடைசி பேச்சாக அமைந்து விட்டது. அந்த நிகழ்வின் போது கூட அவர் சமூக நலன் பற்றியே பேசியதுதான் தற்போது அனைவரிடத்திலும் இன்னும் அவருக்கான மரியாதையை உயர்த்தியுள்ளது என்று கூறலாம்.
அவர் பேசியதாவது :- தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல், அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ஏன் செலுத்திக் கொண்டீர்கள் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்படும். அரசு மருத்துவமனையில்தான் ஏழை மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தடுப்பூசி குறித்து பலருக்குள் பல்வேறு கேள்விகள் உள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொண்டேன்.
தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா தொற்று பாதித்தாலும், உயிரிழப்பு ஏற்படாது. காப்பீடு எடுத்துக் கொண்டேன். என் பைக்குக்கு விபத்தே ஏற்படாது என்று சொல்ல முடியுமா..? காப்பீடு எடுத்தாலும் பைக்கை சரியாக ஓட்ட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் தான் இருக்க வேண்டும், எனக் கூறினார்.
தனது கடைசி செய்தியாளர் சந்திப்பில் கூட கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி..? தடுப்பூசியினால் எந்த பாதிப்பும் இல்லை என்ற விழிப்புணர்வையே அவர் ஏற்படுத்தியுள்ளார். அவரது இந்த கடைசி உரை தற்போது டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, திரைப்பட நகைச்சுவை என்பது தினசரி வாழ்வின் ஒரு அங்கம். தன்னுடைய மகிழ்ச்சி, துயரம், பிரச்சனைகள் அனைத்தையுமே திரைப்பட வசனங்களின் மூலமும் காட்சிகளின் மூலமும் வெளிப்படுத்தும் சமூகம் இது. அந்த வகையில் பார்க்கும்போது, விவேக் தொடர்ந்து தனது காட்சிகளின் மூலம் சிரிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார். மரணம் அவரை ஒருபோதும் தீண்டுவதில்லை.
|