உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்று டுவிட்டரில் இன்று(ஏப்., 27) தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் களம் காண்பதாக அறிவித்து இருந்தார். ஆனால் கடந்தாண்டு அண்ணாத்த படப்பிடிப்பில் நடித்து வந்தபோது அங்கு படக்குழு சிலருக்கு கொரோனா பிரச்னை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதோடு, ரஜினிக்கு ரத்த அழுத்தம் பிரச்னையும் ஏற்பட்டது. அதுநாள் வரை அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி வந்த ரஜினி பின்பு தன் முடிவை மாற்றிக்கொண்டார். உடல்நிலையையும், கொரோனா பிரச்னையையும் காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என கூறினார்.
இதுதொடர்பாக அப்போது அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கடைசி சில வரிகளில் அவர் குறிப்பிட்ட விஷயம் முக்கியமானது. அதாவது, ‛‛இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை என தெரிவித்து இருந்தார்.
இப்போது இந்த வரிகளை சுட்டிக்காட்டி இன்று(ஏப்., 27) டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர் ரஜினி ரசிகர்கள். ரஜினி கூறிய விஷயம் தான் இப்போது நாட்டில் நடக்கிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால் நாடு என்ன நிலைமையில் தவித்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பல மாநிலங்களில் இந்நோய்க்கு ஆளானவர்களுக்கு மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் இன்று நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து தான் அப்போதே அப்படி ஒரு அறிக்கையை ரஜினி கொடுத்தார். நிஜமாகவே பல உயிர்களை ரஜினி காப்பாற்றி உள்ளார். உண்மையான சூப்பர் ஸ்டார் அவர் தான் என கூறி டுவிட்டரில், #அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டாக்கை ரசிகர்கள் வைரலாக்கினர். இந்த ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. ரஜினியின் ரசிகர்கள் இதை வரவேற்று கருத்து பதிவிட்டனர்.
|