தமிழ்நாட்டைச் சேர்ந்தவரின் மென்பொருள் சேவை நிறுவனமான ஃபிரஸ்வொர்க்ஸ் தனது பங்குகளை விற்கும் திட்டத்திற்கு உலகப் பிரபலமான ரஜினியின் அடைமொழி “சூப்பர் ஸ்டார்” என பெயரிட்டுள்ளது. இந்தச் செய்தி தான் கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் எங்கள் தலைவன் ரஜினி என அவரின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி விட்டனர். 2010ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் என்பவரும் ஷான் கிருஷ்ணசாமி என்பவரும் சென்னையில் ஃபிரஸ்டெஸ்க் என்ற மென்பொருள் சேவை நிறுவனத்தை தொடங்கினர்.
குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியடைந்த இந்நிறுவனத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதனால் நிறுவனத்தின் வளர்ச்சியை கருதி, ஃபிரஸ்வொர்க்ஸ் என்று பெயரை மாற்றி அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்கு சென்றது. 2018ஆம் ஆண்டு முதல் அங்கே தனது சேவையைத் தொடங்கி நடத்தி வருகிறது. தற்போது இந்நிறுவனம அமெரிக்க பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை மூலம் (Freshworks IPO) நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. பங்குகள் திரட்டும் புதிய திட்டத்திற்கு அந்நிறுவனம் சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை அதன் நிறுவனர் மாத்ருபூதமே விளக்கியுள்ளார்.
அப்போது பேசிய அவர், தான் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது பணியாளர்களை ரஜினிகாந்தின் புது படம் வெளியாகும் நேரத்தில் ஒரு திரையரங்கின் அனைத்து டிக்கெட்களையும் வாங்கி பணியாளர்களை மகிழ்விப்பது வழக்கம் எனத் தெரிவித்துள்ளார். கோச்சடையான், லிங்கா, கபாலி உள்ளிட்ட பல படங்களுக்கு கிரீஷ் பெரிய திரையரங்குகளில் முதல்நாள் முதல் ஷோ டிக்கெட்டுகளை முழுவதையும் தனது பணியாளர்களுக்காக வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது நிறுவனத்தின் வெற்றிக்கு தான் ரஜினி ரசிகராக இருந்ததுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார் கிரீஷ். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அவர், தனது ஐபிஓ கோடுக்கு 'புராஜெக்ட் சூப்பர்ஸ்டார்' என்று பெயர் சூட்டியுள்ளார்.
|