அண்ணாத்த 50வது நாள்: டெக்னீஷியன்களுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து நெகிழ்ந்த ரஜினி!
(Thursday, 23rd December 2021)
இந்த வருட தீபாவளிக்கு ரஜினியின் 'அண்ணாத்த' வெளியானது. இப்படத்தில் நடித்ததை எண்ணி எமோஷனலாகவே கனெக்ட் ஆன ரஜினி, சமீபத்தில் இயக்குநர் சிவாவின் வீட்டிற்கே சென்று தங்கச் சங்கிலி அணிவித்து மகிழ்ந்துள்ளார். அதன்பிறகு இன்று படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குக் கூப்பிட்டு அவர்களுக்கும் தங்கச்சங்கிலி அணிவித்துள்ளார்.
நேற்று காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி, இசையமைப்பாளர் டி.இமான், படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் மிலன், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சூப்பராயன், ஸ்டில்ஸ் சிற்றரசு, கதாசிரியர் ஆதிநாராயணா, சவுண்ட் இன்ஜினியர் உதயகுமார், கலரிஸ்ட் கே.எஸ்.ராஜசேகரன், கிராபிக்ஸ் டீம் லோர்வின் ஹரிஹர சுதன், உதவி இயக்குநர்கள் ராஜசேகர், திருமலை குமார், சந்துரு செந்தில் ஆகியோருக்குத் தங்கச் சங்கிலி அணிவித்துள்ளார். இந்தப் பாராட்டு நிகழ்வில் தொழில்நுட்ப கலைஞர்களிடம் மனம்திறந்தும் பேசியிருக்கிறார் ரஜினி.
அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 50 நாட்கள் ஆவதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பின் போது தான் சந்தித்த அனுபவங்களை ஹூட் ஆப்பில் ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது, "கடந்த முறை ஹுட் இயக்குநர் சிவா, அண்ணாத்த சம்பவம் நான் பணியாற்றிய இயக்குநர்களில் முக்கியமானவர்கள் என்றால் பழம்பெரும் இயக்குநர் டிஆர் ராம்மண்ணா அவர்கள் குப்பத்து ராஜா படத்தை இயக்கினார். அடுத்து திலோக்சந்தர் வணக்கத்துக்குரிய காதலி ரெண்டு பேரும் செட்டில் இருந்தால் செட்டே அமைதியா இருக்கும். யார்க்கிட்டேயும் பேச மாட்டாங்க.. கேமரா மேன் மற்றும் நடிகர்கள்கிட்ட மட்டும் என்ன ஷார்ட்டுன்னு சொல்வாங்க. ஓகே இல்லன்னா நோ.. அதை தவிர வேறு எதுவும் பேச மாட்டாங்க. மற்ற வேலையெல்லாம் தானா நடக்கும்.
அதே மாதிரி ஒரு இயக்குநரா நான் சிவாவை பார்த்தேன். ஒரு சேர் போட்டு உட்காந்திருப்பார். கேமராமேன் வெற்றி, ரெண்டு பேரும் ராமன் லக்ஷ்மன் மாதிரி. அவருக்கிட்ட ஷார்ட் சொல்லுவாங்க... ஆர்ட்டிஸ்ட்கிட்ட டயலாக் சொல்லுவாங்க.. ஓகேவா இல்லையான்னு சொல்வாங்க.. மற்ற வேலையெல்லாம் தானா நடக்கும். எல்லார் மேலேயும் அவ்ளோ அன்பு காட்டுறார். எல்லோரையும் பாசமாக பார்த்து கொள்கிறார். ஒரு ஃபேமி மாதிரி பாத்துக்குறாரு. அந்த படத்துல வரும் வசனங்கள் எல்லாமே அவர் குடும்பத்தில் நடப்பது. நல்ல மனிதர். ரொம்ப நாள் பழகிய மனிதர் போல் சிவா எனக்கு இந்த படத்தின் மூலம் ரொம்ப நெருக்கமாயிட்டார். நூறாண்டு காலம் அவரும் அவருடைய குடும்பமும் நல்லா இருக்கணும்.
அண்ணாத்த படம் டிசம்பர் 19 ஆம் தேதி 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கினோம். படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் போனது. அதன்பிறகு மார்ச் 2020 ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா வந்து விட்டது. கொரோனாவால் 9 மாதங்கள் கேப் விழுந்தது. 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. டிசம்பர் 14 ஷூட்டிங் தொடங்கியது. இதனால் எல்லாரும் மாஸ்க் போட்டுதான் வேலை செய்யணும். எல்லாருக்கும் கோவிட் டெஸ்ட் பண்ணிதான் செட்டுக்குள் விட்டார்கள்.
ஸ்ட்ரிக்ட்டா ஷூட்டிங் நடத்திட்டு இருந்தோம். அப்போ கீர்த்தி சுரேஷோட உதவியாளருக்கு கொரோனா வந்திருக்கு. என்ன தவறு நடந்துச்சுன்னா, அவருக்கு 5 நாளுக்கு முன்னாடியே கொரோனா வந்திருக்கு, யாருக்கும் தெரியல அவர் யார்க்கிட்டேயும் சொல்லல. எல்லாருக்கும் அதிர்ச்சி... ஷூட்டிங்ல ஆர்ட்டிஸ்ட்டுங்க மட்டும், ரிஹர்சல்ல கூட மாஸ்க் போடுறது.. டேக்ல மட்டும் மாஸ்க் எடுத்துட்டு மறுபடியும் மாஸ்க் போடுறது..
கீர்த்தி சுரேஷ்கிட்ட நான் நெருங்கி நடிச்சுருக்கேன்.. கிட்டேபோய் டயலாக்லாம் பேசியிருக்கேன்.. அப்போ கூடவே உதவியாளரும் இருந்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்து எல்லாரும் ஷாக் ஆயிட்டாங்க. இயக்குநருக்கும் அதிர்ச்சி. உடனே ஷூட்டிங்லாம் நிறுத்த சொல்லி, எல்லாருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க சொல்லி.. இது கலாநிதி மாறனுக்கும் தெரிஞ்சு அவரும் அப்செட் ஆகி.. ஷூட்டிங்க நிறுத்துங்கன்னு சொல்லிட்டாங்க.
கொரோனா டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் வந்தப்போவும் கூட டாக்டருங்க லங்ஸ்லாம் ஸ்கேன் பண்ணனும்னு சொன்னாங்க. ரெண்டு நாள் அங்கேயே அப்போலோவில் தங்கி.. அப்புறம்தான் வந்தோம்.. அதுக்கப்புறம் 3 மாதம் கழித்து மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிச்சு முடிச்சுதான் ஆகணும்னு சொல்லி ஷூட்டிங் போனோம். க்ளைமேக்ஸ் சீன்லலாம் 700, 800 பேர் இருந்தாங்க.. 18 நாள் நைட்ல ஷூட்டிங் போச்சு... 8 நாள் 800 பேருக்கும் கொரோனா டெஸ்ட் பண்ணணும்.. டெஸ்ட் முடிஞ்சு வந்தாங்கன்னா, ஷார்ட்ல மட்டும்தான் மாஸ்க் எடுக்கணும். ஷார்ட் முடிஞ்சதும் மாஸ்க் போடணும்..
எனக்கு மருத்துவர்கள் சொன்னது, கூட்டத்தில் போகக்கூடாது. அதிகம் கூட்டத்தில் யாரையும் தொடக்கூடாது என்று கூறிவிட்டார்கள். க்ளைமேக்ஸில் நான் மொட்டை மாடியில் இருந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எங்கே போறாங்கன்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்குற சீன் அது. 2 வருஷத்துக்கு முன்னாடியே இயக்குநர் அந்த காட்சியை முடிவு செய்து விட்டார். இது கொரோனாவுக்காக செய்யல ஆண்டவன் செயல்.
கஷ்டப்பட்டு ஷூட்டிங் முடிச்சோம். இரண்டாவது அலை ஆரம்பிச்சுடுச்சு. ஆந்திரா தெலுங்கானாவில் எல்லாம் உச்சத்துக்கு போயிடுச்சு.. ஏற்கனவே 2 வருஷம் ஆயிடுச்சு. திரும்பவும் நிறுத்தினா என்ன பண்றது... கரெக்ட்டா 2 நாள் ஷூட்டிங் இருக்கு... ரெண்டாவது நாள் காலையில் இருந்து தெலுங்கானா அரசு லாக்டவுன் அறிவிக்கிறது. அன்னைக்கு நைட்டுதான் ஷூட்டிங் முடியுது. ஆண்டவன் செயல் படம் நல்லப்படியா முடிஞ்சுது. படத்திற்கு ரிவ்வியூஸ் அவ்ளோ சாதகமா இல்லை.
படம் ரிலீஸ் ஆன பிறகு 3 நாட்கள் ஆனது இரவில் இருந்தே மழை பெய்ய தொடங்கி விட்டது. அதனால் மக்களால் தியேட்டருக்கு வர முடியவில்லை. இதுவே தீபாவளிக்கு முதல் நாள் மழை பெய்திருந்தால் என்ன செய்திருக்க முடியும். அண்ணாத்த படம் தோல்வி அடைஞ்சிருக்கும். இதுவும் ஆண்டவன் செயல்தான். கலாநிதி மாறன், டைரக்டர் சிவா அவர்களின் நல்ல மனதால் படம் நல்லா போச்சு.. மழை வராமல் இருந்திருந்தால் படம் இன்னும் நல்லா போயிருக்கும்.. இதையெல்லாம் பார்க்கும் பாஷா படத்தில் பேசிய டயலாக்தான் ஞாபகம் வருது.. ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்... ஆனா கெட்டவங்கள..." என்று கூறி தனது ட்ரேட்மார்க் சிரிப்புடன் முடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.