வணக்கம். உங்களுக்கு ரஜினியைப் பற்றி எப்படித் தெரிந்தது?
யசுதா : டோக்கியோவில், Nihon Skyway என்ற வீடியோ நிறுவனம் ஆசியத் திரைப்படங்களை ஜப்பானில் அறிமுகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதில் திரு. எடோக்கி (Edoki) என்பவர் முதல் தமிழ்ப்படமாக முத்துவை அறிமுகப்படுத்தினார். ஜப்பானியர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றாக ஓடியதால், பிறகு மணிரத்னத்தின் ரோஜா, இருவர், பம்பாய் மற்றும் ஷங்கரின் ஜீன்ஸ் ஆகிய படங்களையும் ஜப்பானிய சப்டைட்டிலுடன் வெளியிட்டது. ஆனால் அவை முத்து அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஸ்டைலால் ரஜினியும், கண்ணழகால் மீனாவும் பிரபலமாகி விட்டார்கள். ரஜினிக்கு Dancing Maharaja என்ற பட்டமும் கிடைத்தது.
ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் எண்ணம் எப்படி வந்தது?
யசுதா : முதலில் ஓஸகாவில் ரசிகர் மன்றம் இல்லை. டோக்கியோவில் இருந்தது. அதில் இரு விதமான ரசிகர்கள் இருந்தனர். ரஜினியின் காமெடியை ரசிப்பவர்களும், சண்டைக்காட்சிகளை ரசிப்பவர்களும் இருந்து வந்தார்கள். பின்னர் அவர்களுக்குள் காமெடி சிறந்ததா, ஆக்ஷன் சிறந்ததா என்ற கருத்து வேறுபாட்டில், இரண்டாகப் பிரிந்து விட்டார்கள். எஜமான் படத்தை வெளியிடும்போது, இரு பிரிவினருக்கும் மோதல் முற்றி, திரையரங்குகளிலும் வீடியோவிலும் ஒரே சமயத்தில் வெளியிட்டு, குழப்பம் ஏற்பட்டு விட்டது. இதனால் அம்மன்றம் கலைக்கப்பட்டு, ஓஸகாவில் என் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
ஓஸகாவில் ஆரம்பித்தபின் என்னென்ன விஷயங்கள் செய்தீர்கள்?
யசுதா : ஆரம்பித்தபின் 2000ம் ஆண்டு படையப்பாவை வெளியிட்டோம். அப்போது ரசிகர் மன்றத்தினர் அனைவரும் சேர்ந்து, ஒருநாள் வாடகைக்கு ரயிலை எடுத்து, அதற்கு ரஜினி ரயில் என்று பெயர் சூட்டி, ஓஸகாவிலிருந்து திரையரங்குவரை ஓட்டினோம். இதனால் ரஜினியின் புகழ் இன்னும் பலரைச் சென்றடைந்தது. ஜப்பான் தொலைக்காட்சிகளிலும் இந்நிகழ்ச்சி காட்டப்பட்டது.
ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
யசுதா : ஆமாம். மூன்று தடவைகள் சென்னை சென்றிருந்தாலும், ஒரேயொரு தடவைதான் சந்திக்க முடிந்தது. நேரில் சந்தித்தபோது கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரே பிரமிப்பாக இருந்தது. திரையில் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இவ்வளவு எளிமையாக இருந்ததைக் கண்டு வியந்துபோனோம். அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு, ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டோம். ரஜினி ரயில் தொடர்பான புகைப்படங்களைக் காட்டிவிட்டு, ரஜினியுடன் பேசவேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் படித்தோம் என்று சொன்னோம். அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு ஜப்பான் வாருங்கள் எனக் கூறிவிட்டுக் கிளம்பி விட்டோம். அப்போது பாமக பிரச்சினை இருந்ததால், அவராலும் அவ்வளவாக நேரம் செலவிட முடியவில்லை.
மீண்டும் சந்திக்க முயற்சி செய்தீர்களா?
யசுதா : சந்திரமுகி வெளியானபோது சென்னை சென்றிருந்தோம். ஆனால் சந்திக்க முடியவில்லை. சந்திரமுகியின் முதல்நாள் முதல்காட்சி பார்த்தோம். சென்னை ரசிகர்கள் அதை ஒரு திருவிழா போல் கொண்டாடியதைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டோம். ஜப்பானில் திரையரங்குகளில் படத்தில் வரும் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இருக்காது. மிகவும் அமைதியாகப் பார்ப்பார்கள். நகைச்சுவைக் காட்சிகளில் கூட அடுத்தவருக்குத் தொந்தரவாக இருக்குமே என்று, வாய்விட்டுச் சிரிக்க மாட்டார்கள். ஆனால், ரஜினி படத்தை ஆரவாரத்துடன் பார்க்க வேண்டும் என்று விரும்பி, ஓஸகா ரசிகர்களுக்காகத் தனிக்காட்சி திரையிட்டுக் கொண்டு, அரங்குக்குள் பட்டாசுகள் கூட வெடிப்பதுண்டு.
சுனாமியின்போதுகூட உங்கள் மன்றத்திலிருந்து உதவியதாக நண்பர் ரஜினிராம்கி மூலமாக அறிந்தேன். அதைப்பற்றிக் கூறுங்களேன்.
யசுதா : ஆமாம். உங்களுக்கே தெரியும். உலகிலேயே சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு ஜப்பான்தான். அதன் பாதிப்பை முழுமையாக உணர்ந்தவர்கள் நாங்கள். அதனால், இந்தியச் சகோதரர்கள் எத்தகைய பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்று முழுமையாக உணர்ந்து கொண்டோம். ரசிகர் மன்றத்தினர் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி, சுமார் 1 இலட்சம் யென் (35000 ரூபாய்) அளித்தோம். இந்திய அரசு வெளிநாட்டினரிடமிருந்து எந்த உதவியையும் பெற மறுத்ததால், சென்னைக் கிளை மன்றத்தின் மூலமாக இந்த நன்கொடையை அளித்தோம்.
தக்க நேரத்தில் உதவியதற்கு நன்றி. வேறு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
யசுதா : அடுத்து சிவாஜி திரைப்படம் வெளியாகும்போதும் சென்னை சென்று, முதல் நாள் முதல் காட்சி பார்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். இனிமேல் வெளியாகும் ரஜினி படங்களை அதேநாளில் ஜப்பானிலும் வெளியிட ஏற்பாடு செய்யுமாறு சென்னை செல்லும்போது விநியோகஸ்தர்களிடம் கேட்க இருக்கிறோம்.
தமிழில் ஓரளவுக்கு நன்றாகவே பேசுகிறீர்கள். நான் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?
யசுதா : ஆசியத் தன்னார்வ மையத்தின் கலாச்சாரப் பயிற்சிக்கூடத்தில் திரு. சுப்ரமணியம் அவர்களிடம்தான் கற்றுக் கொண்டேன். அந்த வகுப்புகள் முடிவடைந்தபிறகு, திரைப்படங்களில் வரும் பெயர்களை எழுத்துக்கூட்டிப் படித்து, வாசிக்கும் திறனை வளர்த்துக் கொண்டேன். சென்னையில் இருக்கும் திருமதி. கல்பனா அவர்கள் ஜப்பானிய மொழி மூலம் தமிழ் கற்க ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அதுவும் மிக உபயோகமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கே சந்தித்தவர்கள் பேசிய தமிழை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதால், சற்று சிரமமாக இருந்தது.
ஆமாம். சென்னையிலிருந்தபோது, முதன்முதலில் திருமதி கல்பனாவிடம்தான் நான் ஜப்பானிய மொழி பயின்றேன். தமிழ் மூலமாக ஜப்பானிய மொழி கற்கவும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள். தமிழ் தொடர்பாக வேறு என்னென்ன முயற்சிகள் செய்கிறீர்கள்?
யசுதா : கவிஞர் வைரமுத்து அவர்கள் ஓஸகா வந்திருந்தபோது, அவரைச் சந்தித்து உரையாடியது மறக்க முடியாதது. ரஜினிக்கு அவர் எழுதிய பாடல்களின் பொருளை விளக்கிக் கூறினார். பிறகு அவற்றை நினைவில் இருத்திக் கொள்ள மிகவும் எளிதாக இருந்தது. இந்தியா என்றால், மசாலா உணவுவகைகள்தான் என்று பெரும்பாலான ஜப்பானியர்கள் தவறாக எண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்கு மசாலாவைத் தவிரவும் தமிழ்நாட்டுக்கு நிறையச் சிறப்புகள் இருக்கின்றன என்று எடுத்துக்கூறி வருகிறோம்.
|