 |
ரசிகரா அல்லது தொண்டரா? |
(Tuesday, 30th September 2008) |
 நீங்கள் ரஜினியின் ரசிகரா ? அல்லது ரஜினி என்னும் தலைவருக்கு தொண்டரா? இன்றைய நிலையில் ரஜினியை அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மத்தியில் உள்ள சுயபரிசோதனை கேள்வி.
இதில் என்ன பெரிய வித்தியாசம் என்கிறீர்களா? நியாயமான கேள்வி. தலைவர் ஏன் பொது வாழ்வில் தயக்கம் காட்டுகிறார் என்று புரிந்து கொள்ள முயற்சிப்போம். அதில்தான் கேள்விக்கான விடை பிறக்கும்.
பல வருடங்களாக தலைவரை புரிந்து, அவர் வழி நடப்பவர்கள், அவரது தனி மனித வாழ்க்கையை நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். பொது வாழ்வில் ஒருவர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்புகளையும் நன்றாக புரிந்து இருப்பார்கள்.
# அவர் ஆடம்பரமில்லாத சாதாரண வாழ்க்கை வாழ்பவர்
# ஒருவர் தனது குடும்பத்தை கவனித்துக்கொண்டால், நாடும் சமூகமும் நன்றாக இருக்கும் என்று நம்புபவர்.
# தற்போதைய தேர்தல் அரசியயலில் நம்பிக்கையில்லாதவர். அரசியல் அமைப்பு முழுமையாக மாற வேண்டும் என்ற கருத்துடையவர்
# மற்றவர்களை குறை சொல்லாதவர்.மற்றவர்களின் தவறுகளை தன்னுடைய தவறாகவே எடுத்துக்கொண்டு நிலைமையை சீராக்க முயற்சி செய்பவர்.
இந்த வரிசை இன்னும் நீளமாக தொடரும்.. ஆமாம் . அதனால் தான் அவர் பொதுவாழ்க்கைக்கு வர வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறோம் என்கிறீர்களா?. மேலே படியுங்கள்.
தலைவருக்கு சினிமா வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும் நன்றாக தெரியும்.அவரை சுற்றியிருப்பவர்கள், அவரால் முழு அமைப்பையும் மாற்ற முடியும் என்று உசுப்பேற்றலாம். ஆனால் அவருக்கு, இது மந்திரத்தால் மாற்றக்கூடியதல்ல என்ற உண்மை புரிந்துள்ளது.
உதாரணமாக ஊழலையும் கருப்புப் பணத்தையும் முன்று மணி நேர சினிமாவில் ஓழிப்பது போல் நிஜத்தில் ஒழிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
மற்ற சில அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் மாற்றி விடுவேன் என்று கூறுவது போல் அவரால் சொல்ல முடியாது. அது அத்தனை சுலபமானதல்ல. தான் தனி நபராக எதையும் மாற்ற முடியாது என்ற உண்மையை நமது தலைவர் நன்றாக உணர்ந்துள்ளார்.
பிரதமர் டாக்டர் .மன்மோகன் சிங் அவர்களுடன் மேடையில் , தலைவரின் பதிலை நினைவு படுத்தி பாருங்கள். தன்னை வழி நடத்தும் ஆண்டவனின் கட்டளை எதுவோ அதன் படி நடப்பேன் என்று தான் சொன்னார்.
இப்போது அவருக்கு ஆண்டவர் உத்தரவு கொடுத்து விட்டாரா?. நான் எதிர்மறையாளன் இல்லை. ஆனால் நிஜ வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்பவன்.
அவருடைய கேள்விகளுக்கு இன்று பதில் இருக்கிறதா?. இன்னமும் அவர் தனி நபராக அனைத்தையும் மாற்ற முடியாது தானே? அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புவர்கள் அவருக்கு துணையாக இருக்கும் அளவிற்கு மாறி உள்ளார்களா?
நான் எந்த ஒரு ரசிகரையோ, ரசிகர் மன்ற நிர்வாகியையோ குறைவாக மதிப்பிடவில்லை.எனக்கு ரசிகர்களை A, B, C centres என தரம் பிரிப்பதில் என்றுமே உடன்பாடு கிடையாது. இது, திரைப்பட நிர்வாகஸ்தர்கள், மக்களின் பொருளாதார, சமுக வாழ்வியல் முறைகளை அடிப்படையாக கொண்டு பிரித்தது.
காமராஜர், அண்ணா, கக்கன் போன்றோர்கள், சமூகத்தின் அடிதட்டு மக்களை சார்ந்தவர்கள் தான்,. அவர்களின் பொது வாழ்க்கை பங்களிப்பு அள்விடமுடியாதது. அவர்களின் தொலை நோக்கு பார்வையும், காந்திஜி, சத்தியமூர்த்தி, பெரியார் ஆகியோருடன் கற்றுக் கொண்டதும் அவர்களின் சாதனைகளுக்கு அடி கோலின.அவர்களை போன்ற சிந்தனை உடைய சமுக பார்வை உள்ள ரஜினி ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த ரசிகர்கள், தங்களின் சமுக பார்வை மற்றும் முதிர்ச்சியை அவர்களின் செயல்பாடுகளில் மற்றும் நடவடிக்கைகளில் தெரியப்படுத்துகிறார்களா?. நிச்சயம் இல்லை. பெரும்பான்மையான ரசிகர்கள் இன்னும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். ரஜினியின் பெயரால் தொண்டு செய்பவர்களாக உயரவில்லை.
ஓரு நல்ல தொண்டன், தன்னுடைய தலைவனின் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும் நன்றாக தெரிந்து இருப்பான். யாருடைய தூண்டுதல் இல்லாமலேயே, முன் நடவடிக்கை எடுத்து, குருவின் கனவை நிறைவேற்றுவான்
ரசிகர்கள், நிறைய நற்பணி செய்கிறார்கள், ரத்த தானம் செய்கிறார்கள். தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதும் உண்மைதான். இவை அனைத்துமே பெரிதும் பாராட்டப் பட வேண்டும். மாற்று கருத்து இல்லை.சமயோசிதமாக நெருக்கடியான சூழ் நிலைகளில் முன் நடவடிக்கைகள் எடுக்கும் ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள்
முன் நடவடிக்கை ( pro active) மற்றும் பின் நடவடிக்கை ( re active) போன்றவற்றில் நம்மவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா ?
ஊர்ப் பெரியவர் ஒருவர், வந்து கொண்டிருக்கும் வெள்ள ஆபத்தை சொல்கிறார். வடிகால் திறந்து கடலுக்கு தண்ணீர் சென்று கொண்டிக்கிறது. ஆனால், நீர் வரத்து அதிகமாக இருப்பதால், கரை உடையும் அபாயம் இருப்பதாக சொல்கிறார். என்ன செய்ய வேண்டும் என்று விவரிக்கிறார்.
முன்று கிலோமீட்டர் நீளம் கொண்ட கரையை குழுக்களாக பிரித்து கண்காணிக்க முடிவு செய்யப்படுகிறது. அனைத்து ஆண்களும் தங்களால் முடிந்த பொருள்களுடன் விரைகிறார்கள். மணல் மூட்டைகள் நிரப்பப்டுகிறது, விடியும் வரை கண்காணிப்பு தொடர்ந்தது. காலையில் நீர் மட்டமும் குறைந்தது.
பெரியவர்களின் முன் நடவடிக்கையினால் ஊர் பேராபத்தில் இருந்து தப்பியது. இல்லையென்றால், மறு நாள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆறுதல் சொல்ல தான் வந்திருப்பார்கள்.
தற்போதைய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்வதிலேயே நேரத்தை செலவிடுகிறார்கள். அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை என்ற கூக்குரல் தான் கேட்கிறதே தவிர, என்ன செய்யலாம் என்ற முன் நடவடிக்கை எதுவும் இல்லை. அரசு உதவி யில்லாமலேயே, மக்கள் துணையுடன் முன் நடவடிக்கை மூலம் எவ்வளவோ நல்லது செய்ய முடியும்.
மணல் கொள்ளை என்று அனைத்து எதிர் கட்சிகளுமே சத்தம் போடுகிறார்கள். கொள்ளை நடக்கும் இடத்தை விட்டு விட்டு, மீடியாவில், பொதுக்கூட்டங்களில் ஏன் கூக்குரலிடுகிறார்கள். எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுக்கு விலக்கல்ல. உள்ளாட்சிகளின் காரணமே, உள்ளுர் மக்களுக்கு அதிகாரம் கொடுத்து, இப்படி பட்ட கொள்ளைகள் நட்க்காமல் தடுப்பற்கு தான். ஆனால், உள்ளாட்சியிலும், அரசியல் வாதிகளின் கைகளில் முடங்கி போய் உள்ளது.
அதனால் தான், தலைவர், அடிமட்டத்தில் இருந்து மாற்றம் வேண்டும் என்கிறார். நாம் முன் நடவடிக்கை (Pro active) முலம் , பொது வாழ்வில் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் அடி மட்டத்திலுருந்த மாறுதல்கள் செய்யமுடியுமா?.
தலைவரின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் மன வலிமை மற்றும் செயல் திறன் உள்ளதா?. ஆம் என்றால் அவற்றை தலைவரின் சந்திப்பு போது அவரிடம் வெளிப்படுத்துங்கள். அது மிகவும் முக்கியம்.
அன்புடன் தினகர்
|
|
|
 |