பல காலமாகக் காத்துக் கிடந்த ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் விதத்தில் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தது தெரிந்த கதை. கிருஷ்ணகிரியில் உள்ள தனது பூர்வீக கிராமத்தில் தம் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது அன்றைய சந்திப்பில் அவரே ஒப்புக்கொண்ட விஷயம். சூப்பர் ஸ்டாரின் பூர்வீகத்தைத் தேடிப் பயணமானோம்.
தமிழக சூப்பர்ஸ்டாரின் பூர்வீகம் என்ற எந்த பந்தாவும் காட்டாமல் பசுமையான பகுதிகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் ஓர் எளிய கிராமம் நாச்சிக்குப்பம். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பன பள்ளியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.தமிழ சினிமா உலகுக்கு ரஜினியை தந்து பெருமை தேடிக்கொண்ட பூமி... சுமார் 20 வீடுகளையும், இரண்டு கோயில்களையும் கொண்ட ஒரு அழகிய சிறிய கிராமம்.ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் இன்றளவும் நிறையப் பேர் அங்கு உள்ளனர் என்று கேள்விப்பட்டு அவர்களை காண அங்கு சென்றோம்.
நம் எதிரில் வந்த பர்வாபாய் என்ற வயதான பெண்மணியிடம் "ரஜினி வீடு எங்க இருக்கு" என்று கோட்டோம் . "யாரு ரஜினி வீடுங்களா, அதோ இடிஞ்சு போய் கிடக்கே அந்த மண் வீடுதான். அவக வீடு" என்று ஒரு வீட்டைக் காண்பித்தார்."ரஜினியோட அப்பா தொடக்கத்துல இங்கதான் வாழ்ந்தாரு.அவருக்குக் கல்யாணம் ஆன ஏழெட்டு வருஷம் கழிச்சு பெங்களூருக்குப் போய்ட்டாங்க. நானு, ரஜினி இன்னும் எங்க தோஸ்த்துங்கல்லாம் சேர்ந்து கண்ணாமூச்சியேல்லாம் விளையாடிருக்கோம். ஒரு முறை எங்க ஊரு கோயில் திருவிழாவுக்கு ரஜினி காலாண்டு லீவ்ல வந்திருந்தாரு. கோயில் திருவிழாவுல, நாங்க பாட்டு பாடி டான்ஸ் ஆடி தூள் கிளப்பிட்டோம். அப்பவே அவரு சூப்பரா நடிப்பாரு.விதவிதமாக ஸ்டைல் பண்ணுவாரு. அதெல்லாம் ஒரு காலம்.இப்ப எதுக்கு தம்பி அதெல்லாம் ஞாபகப்படுத்துறீங்க. அப்பவே ரஜினி கருப்பா இருந்தாலும் களையா இருப்பாரு.ரஜினியோட அண்ணன்,இங்க எப்ப வந்தாலும் எங்க வீட்ல ஒரு வாய் சாப்பிடாம போகமாட்டாரு, என்ன...ரஜினியத்தான் பாக்கமுடியல. அவர பாக்கணும்னா மெட்ராஸ்தான் போகனுமாமே?" என்று அப்பாவியாகக் கூறி முடித்தார் பர்வாபாய்.
ரஜினி வீட்டுக்கு அருகிலேயே அவரது சொந்தத் தாய் மாமா துக்காராம் வீடு இன்றும் இருக்கிறது. அவரது உறவினர் துளசிபாய் கூறும்போது, "எங்க பெரியப்பா துக்காராம் ரஜினிக்குச் சொந்தத் தாய்மாமாங்க. அவர் இருந்தவரை அவருதான் இந்த ஊரு பஞ்சாயத்துத் தலைவரு. ரஜினிக்கு அவரது தாய்மாமானா ரொம்ப இஷ்டம். சின்ன வயசுல ரஜினிக்கு அவரு நிறைய கத சொல்வாராம். மெட்ராஸ் போய் ரஜினி பெரிய நடிகர் ஆனதும், ஒரு தடவ தாய் மாமாவ கூப்பிட்டு கையால சாப்பாடு ஊட்டி, போட்டோவெல்லாம் புடிச்சி நிறைய உதவியெல்லாம் செஞ்சு அனுப்புனாரு. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி அவரு செத்துப்போயிட்டாரு.ரஜினி அப்ப ஏதோ ஷூட்டிங்ல இருந்ததால, அவங்க அண்ணனை மட்டும் அனுப்பி வச்சாரு" என்று துளசிபாய் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த ரஜினியின் நெருங்கிய உறவினருமான டெய்லர் மனோகர் ராவ் நம்மிடம் பேசினார்.
"ரஜினியை, கன்னடக்காரர், மராட்டியக்காரர்னு எல்லாரும் சொல்றாங்க. அவங்கள இங்க வந்து ரஜினி பொறந்த இந்த வீட்ட பாத்துட்டு போகச்சொல்லுங்க. இந்த ஊரு நம்ம தமிழ்நாட்ல உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்துலதான் இருக்கு. அதனால ரஜினியின் சுத்தமான தமிழ்நாட்டுக்காரர்தான்னு தெரிஞ்டுக்கட்டும்".
மங்கம்மா என்ற பெண், " ரஜினி இப்பவும் வருஷத்துக்கு ஒரு தடவ பக்கத்துல இருக்கிற அவுலநத்தம் சிவன்கோயிலுக்கு அப்பப்ப மாறு வேஷத்துல வந்து போயிட்டுத்தான் இருக்காரு. ஒரு தடவ நானே அவங்க அவரப் பாத்தேன். ரஜினி இந்த ஊர்ல பொறந்து என்ன பிரயோஜனம்? நிறையப் பேருக்கு எவ்வளவோ செய்யறாரு. ஆனா இந்த ஊருக்கு இப்பவரைக்கும் எதுவும் செய்யலை. இப்ப அவுரு கட்சி ஆரம்பிக்கப்பாரு, அரசியலுக்கு வரப்போறான்னு என்னென்னவோ சொல்றாங்க, அப்பவாவது ஏதாவது எங்க ஊருக்கு நல்லது செஞ்சா சரி" என்று கூறி முடித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சொந்த ஊரில் நாம் இருப்பதை கேள்விப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற செயலாளர் கார்த்திகேயன் அங்கு வந்து சேர்ந்தார். "எங்க தலைவர் ரஜினி பிறந்த வீடு இருக்குற இடத்திலேயே அவர் கையாலேயே திறந்து வைக்கப்போறோம். இப்ப தலைவரு 'எந்திரன்' பட ஷூட்டிங்ல் பிசியா இருக்கறதால கொஞ்ச நாள்கழிச்சு அவர நேர்ல சந்திக்சு அடிக்கல் நாட்ட அனுமதி வாங்கப் போறோம். ரஜினியின் பெற்றோரின் நினைவாக வரலாற்றில் இந்த நாச்சிக்குப்பம் மணிமண்டபமும் இடம் பெறனும் என்பதுதான் எங்க ஆசை.இதை கொஞ்ச நாளைக்கு முன்னாடி தலைவர் எங்க எல்லோரையும் சந்திச்சு பேசுனப்ப, நான் அவர்க்கிட்டவே கேட்டேன். அவரும் நல்ல யோசனைதான் செய்யலாம்னு சொல்லிட்டார்" என்றார் பூரிப்போடு.
எல்லாம் சரி.. ரஜினி தமிழனே அல்ல, தமிழ் நாட்டின் விரோதி என்றெல்லாம் மிகக் கடுமையான விமர்சனங்களை பல நேரங்களில் பலர் முன்வைத்து அவரைக் காயப்படுத்தியபோதும் இந்தப் பூர்விகம் விஷயத்தை ரஜினி வெளியிடவே இல்லை. இப்போது இந்தப் பின்னணியை வெளிப்படுத்தியதன் நோக்கம் என்ன என்பது புரியாமலேயே அந்தக் கிராமத்தைவிட்டு வெளியேறினோம்.
- (நன்றி:-தமிழக அரசியல் வார இதழ்)
- Courtesy : TamilCinema
|