Interviews
Zee TV (2018)
Jaya TV Interview by Vivek (2014)
K. Balachander Interview 2010
Fans Meet 2008
Vikatan 2005
Kumudam 2005
Kumudam 2004
Ananda Vikatan 1997
Doordarshan- 1995
Kumudam 1995
Film Fare 1993
Ananda Vikatan 1993
Thina Thanthi 1993
Balakumaran Interview in 1991
Chat with Vijayashanthi in 1991
Vannathirai 1989
Kalki 1989
Vikatan 1985 & 1987
K. Balachander
Raj Bagathoor
About Tamilians
Spiritual
Bloodstone
Thoughts
Rajini & Rajini
Media 1984
Chat with Sivakumar
Chat with Mrs Latha
Vikatan 1981
Saavi 1981
Pesum Padam 1978
Bommai1977

  Join Us



Subscription

 Subscribe in a reader

Exclusive Interviews

Superstar Rajinikanth Interview in Ananda Vikantan (1985 & 1987)

“பத்தோடு பதினொண்ணா இருக்கமாட்டேன்...” 

போயஸ் கார்டனில் ரஜினி வீடு. எப்போதும் வாசலில் ரசிகர்கள் கூட்டம். பகல் ஒரு மணிக்குப் போனபோது, வாசலில் ஒரு வேன் நிறைய ரசிகர்கள் வந்திறங்கினார்கள். இறங்கியவர்களில் ‘மெஜாரிட்டி’ பெண்கள். சிலரின் கையில் குழந்தைகள். அவர்களை வாசலில் வந்து வரவேற்றார்கள் ரஜினியின் உதவியாளர்கள். எல்லோரும் வீட்டுக்குள் வந்து பயபக்தியோடு உட்கார்ந்தார்கள். 

அடுத்த ஐந்தாவது நிமிடம் ‘லிம்கா’, ‘கேம்ப கோலா’ ட்ரேயில் வந்திறங்கியது. வந்தவர்கள் முகமெல்லாம் மலர்ந்துவிட்டது. “சார் இப்ப வந்துடுவார்” என்று பி.ஏ. சொன்னதுதான் தாமதம். வேனில் அழைத்து வந்திருந்த போட்டோகிராபரை அவசரப்படுத்தினார்கள். வந்தவர்களை வரிசையாக நிற்கச் சொன்னார்கள் ரஜினியின் உதவியாளர்கள், ரஜினியுடன் போட்டோ எடுத்துக்கொள்ள!

கதவு திறக்கப்பட்டது. சிவப்பு நிற ஸ்க்ரீன், காற்றில் மெதுவாக அசைந்தது. சிரித்த முகத்தோடு, கலைந்த முடியோடு, ப்ரௌன் கலர் கார்ட்ராய், அதே நிறச் சட்டையுடன் ‘தரிசனம்’ தந்தார் ரஜினிகாந்த்.

ஒவ்வொருவராக ரஜினியுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்கள். காலில் விழுந்து ஆசி பெற்றார்கள். போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவரையும் பெயர், ஊர், பயணம் எப்படியிருந்தது என்றெல்லாம் அன்போடு விசாரித்தார் ரஜினி.

ரசிகர்களுக்கு ‘தரிசனம்’ தந்து முடித்த பின், வீட்டுக்குள் திரும்பிப்போனார். “சார் வரச் சொல்றார்” என்று நம்மை உள்ளே அழைத்துப் போனார் பி.ஏ. உள்ளே ஹால் ஒரு மினி ராகவேந்திரர் சந்நிதானமாகக் காட்சியளித்தது. வலது பக்கமுள்ள ரஜினியின் ‘டிஸ்கஷன்’ ரூமுக்குள் சுவருக்குப் பதிலாக பிரமாண்டமான கண்ணாடியும் வால் போஸ்டர்களும்தான் இருந்தன.

சிறிது நேரத்தில் ரஜினி வந்தார். பேச்சுக்கு நடுவே மனைவியை அழைத்தார். ‘‘நம்ம கடையில லேட்டஸ்ட்டா சில காட்டன் ஸாரீஸ் வந்ததே, அதெல்லாம் இருக்கா?” என்றார். “நாலைஞ்சுதான் இருக்கும்” என்றார் லதா ரஜினி. “வெளியில எத்தனை லேடீஸ் இருப்பாங்க?” என்றார் ரஜினி. “பத்து, பதினைஞ்சு பேராவது இருப்பாங்க” - லதா.

“எல்லாருக்கும் புடவை குடுக்க முடிஞ்சா குடு. இல்லேன்னா, எல்லாருக்கும் பணமா குடுத்துடு... சில பேருக்குப் புடவை, சில பேருக்குப் பணம்னு குடுக்காதே” என்று சொல்லிவிட்டு நம்மிடம், “ஒரே சமயத்தில் பத்து, பதினைஞ்சு சுமங்கலிங்க நம்ம வீட்டுக்கு வர்றாங்க. அவங்களை வெறும் வெத்தலைபாக்கு கொடுத்து அனுப்பக் கூடாது பாருங்க” என்றார்.

அரசியல் விஷயத்தை ஆரம்பித்தோம். “எனக்கு இந்த அரசியல்வாதிகளைப் பிடிக்கலை சார்” என்றார் ரஜினி. “ஏன் அப்படி?” - இது நாம். “எல்லாருக்குமே சுயநலம். போதாக்குறைக்கு இவங்களுக்குள்ளேயே கோஷ்டிச் சண்டை. இதுல மக்களைப் பத்தி நினைக்க யாருக்கு டயமிருக்கு? ‘கல்ச்சர்’ இருக்கிறவங்களை நாம ‘எலெக்ட்’ பண்றதில்லைங்கிறதுதான் இதுக்குக் காரணம். ஒவ்வொரு சமயம் படிச்சவங்களுக்குத்தான் ஓட்டுன்னு சட்டம் கொண்டுவரணும்னு தோணுது. ஆனா, இப்படிச் சண்டை போடுற பல அரசியல்வாதிங்க ரொம்பப் படிச்சவங்கதானாமே?” என்று அலுத்துக்கொண்டார் ரஜினி.

“நீங்க அரசியல்ல குதிப்பீங்களா?”

சிறிது நேரம் யோசித்துவிட்டு, “நோ” என்றார்.

“நீங்க சொல்ற பதில்ல ஒரு ‘கன்விக்‌ஷன்’ இல்லையே?”

“இப்படியெல்லாம் சொல்லி என்னை வம்புல மாட்டாதீங்க. நிச்சயமா சொல்றேன், எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லதான்.”

“அப்ப அரசியல் விவகாரம் எதுவுமே தெரியாதா?”

“ஏன் தெரியாது... அன்னைக்கு வந்த நியூஸை நைட் படுக்கப் போகும்போது கண்டிப்பா படிப்பேன்.”

“நீங்க தேர்தல் பிரசாரம் பண்ணப்போறதா பேச்சு வந்ததே?”

“அதெல்லாம் சும்மா. வேறு ஏதாவது பேசலாமே...”

“இப்ப மத்த நடிகர்களுக்கு அரசியல்ல கிடைச்சிருக்கிற அங்கீகாரம் உங்களை ‘இன்ஸ்பையர்’ பண்ணலையா?”

“அதைப் பத்தி யோசிக்கலை. இப்போதைக்கு அரசியல்ல குதிக்கிற எண்ணமில்லை. பட், அப்படி இறங்கினா, பத்தோடு பதினொண்ணா இருக்க மாட்டேன். அது மட்டும் நிச்சயம்.” 

20-02-85

 


"அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்...” 

“நீங்கள் காங்கிரஸில் சேர்ந்துவிட்டீர்கள் என்று உங்களைப் பற்றி செய்தி?’’ 

(தன் ஸ்டைல் சிரிப்புடன்) “யார் உங்களுக்குச் சொன்னது? நீங்கள் சொல்வது எனக்கே நியூஸ்! அரசியலில் குதிப்பதாக இருந்தால், ரகசியமாகச் செய்யவேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் அரசியலில் குதித்தால் பாயும் புலியைப் போலத்தான் - with a very big Bang - நுழைவேன். ஆனால், அதற்கு இப்போது எந்தத் தேவையுமே ஏற்படவில்லை.’’ 

“ராஜேஷ்கன்னா, பிரேம்நசீர் போன்றவர்கள் ஏற்கெனவே காங்கிரஸில் சேர்ந்து மேற்கு வங்காளம், கேரளா தேர்தலில் பிரசாரத்துக்குப் போய்விட்டார்கள். அதைப் போல உங்களையும் மேலிடத்து பிரஷர் மூலம் கட்சியில் சேரவைத்து, வருங்காலத் தேர்தலுக்கு உங்களைப் பயன்படுத்தினால்..?”

“என்னை எந்த பிரஷரும் மிரட்டலும் பணிய வைக்கவே முடியாது. நான் யார் பின்னாலும் போகவும் மாட்டேன்.”

“அப்படித்தான் பிரேம்நசீரும் சொன்னார். இப்போது என்னாயிற்று?”

“அவர், பிரேம்நசீர், நான்... ரஜினிகாந்த்.”

“பணம் சேர்ந்த பிறகு அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பயந்துதானே ஆகவேண்டும்?”

“நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்கத் தெரிந்த எனக்கு, அதை நேர்மையாகக் காப்பாற்றவும் தெரியும். நேர்மையாக நாம் இருக்கும்போது, யாருக்கும் எதற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை.”

“அரசியலில் குதிக்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களுக்கென்று ஏராளமான ரசிகர் மன்றங்கள்... அவர்களுக்காகத் தினமும் காலையில் வீட்டு வாசலில் நீங்கள் தரும் தரிசனம்... நன்கொடை... ஏழைகளுக்காகப் பாடுபடுவதை உயர்த்திக்காட்டும் படக் காட்சிகள்... இவையெல்லாம் எதற்காக?”

“ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மன்றங்களெல்லாம் பல ஊர்களிலுள்ள ரசிகர்கள் அவர்களாகவே உருவாக்கிக்கொள்வது. மன்றங்களை நான் ஆதரிப்பதுமில்லை, தடுப்பதுமில்லை. நான் வேண்டாமென்று சொன்னாலும் அவர்கள் அதைச் செய்யத்தான் போகிறார்கள். அப்படி மன்றம் அமைத்து என்னிடம் வருபவர்களிடம், ‘உங்கள் சொந்த வேலையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். குடும்பத்தை நன்கு கவனியுங்கள்’ என்று ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து சொல்லி வருகிறேன். 

காலையில் ரசிகர்களைச் சந்திக்கிறேன். கடவுள் தன் பக்தன்  முன்தோன்றி அருள்பாலிக்கிற நினைப்பில் இதை நான் செய்வதில்லை... பல ஊர்களிலிருந்து என்னை ஆவலோடு பார்க்க வருகிறார்கள். அந்த அன்புக்குக் கட்டுப்பட்டுத்தான் காலையில் அவர்களைப் பார்க்கிறேன். உதவி, நன்கொடை என்று சொன்னீர்கள். இது வசதி உள்ளவன், இல்லாதவனுக்குக் கொடுக்கிற மிகச் சாதாரண பரோபகாரச் சிந்தனைதான். படத்தில் ஏழைகளைக் காப்பாற்றுவது, மசாலா சினிமாவின் ஃபார்முலா. அது ஒரு வகையான ஹீரோயிஸம். ஸோ, நீங்க சொன்ன இந்தக் காரியங்களுக்கெல்லாம் எந்தவித மோட்டிவ்வும் கிடையாது.”

“தமிழகத்தில் இப்போது நிலவுகிற அரசியல் சூழ்நிலை, நாட்டு நிலைமையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?”

“ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களுடைய அறியாமையை முழுமையாகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நம் ஜனநாயக அமைப்பு முறையே ஏமாற்று வித்தை. எல்லாருக்கும் உணவு, உடை, வீடு, சமத்துவம், சகோதரத்துவம் என்று எழுத்தில்தான் இருக்கிறது. நடைமுறைக்கு உதவாத அந்த எழுத்துக்குப் பெயர் அரசியல் சட்டம். அதைப் போய்ப் புனிதம் என்று வேறு சொல்றோம். வேடிக்கைதான். 

ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாதவன்கூட தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை வரவேண்டும். ஏழை தேர்தலில் நிற்க முடியுமா? ஒரு எம்.எல்.ஏ. சட்டசபையில் நுழையவேண்டுமானால், ஐந்து லட்ச ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். அவ்வளவு செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்றவரின் பொதுவாழ்வில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா? ஒரு சாதாரண ப்யூன் வேலைக்கு ஆள் எடுக்கும்போதுகூட அவரது கல்வித்தகுதி என்னவென்று கேட்கிறோம். ஆளப்போகிறவர்களுடைய தகுதியைப் பற்றி நாம் கவலைப்படுவதேயில்லை. அதனால்தான் பதவிக்கு வருகிறவர்கள் நம் வாழ்க்கைத்தரத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.”

“குடிசைப்பகுதி மக்களுக்காக நடிகை ஷபானா ஆஸ்மி பம்பாயில் ஊர்வலம் போனார். அதே மாதிரி தமிழ் மக்கள் பிரச்னைகளுக்காக பேரணி நடத்துவீர்களா?”

“காலம் என்னை எப்படிக் கட்டாயப்படுத்துமோ, எனக்குத் தெரியாது.”

“நீங்கள் திட்டமே போடாமல் காலக் கட்டாயத்துக்குக் காத்திருப்பேன் என்று சொல்வது நியாயமா?”

“நான் திட்டமே போடவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா?”

- சுதாங்கன்

படம்: ‘சுபா’ ரவிசங்கர்

18-03-87

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View