தலைவர் படம் ரிலீஸ் என்றாலே உற்சாகம் பற்றிக் கொள்வது இயற்கை தான். சிங்கப்பூரிலும் ஒரு சில வாரங்களுக்கு முன்பிருந்தே ரசிகர்கள் தயாராகிவிடுவார்கள். இம்முறை, "கபாலி"க்கு வைத்ததைப் போல பெரிய கட்-அவுட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. தியேட்டர் சார்பாக "பிளெக்ஸ்" மட்டுமே வைக்கப்படும் என்று தெரிந்ததால், நம் rajinifans.com நிர்வாகிகள் களத்தில் இறங்கினர்.
ரிலீசுக்கு 4-5 நாட்களே இருந்த சமயத்தில், தியேட்டரில் 5 அடி அளவில் ஒரு சிறிய கட்-அவுட்டிற்கு அனுமதி கிடைத்த உற்சாகத்துடன், சிங்கப்பூரில் "Hi - Tech Images Pte Ltd" வைத்து நடத்தும் திரு.இளையராஜாவை நாடியது நம் குழு. விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் நமக்கிருந்த அதே உற்சாகம் அவருக்கும் பற்றிக் கொண்டது. காரணம்? அகிலமெல்லாம் பரந்து விரிந்திருக்கும் தலைவரின் அன்பு சாம்ராஜ்யத்தில் அவரும் நம்மைப் போல் ஒருவர்! இந்தியாவில் இருந்த போது ரசிகர் மன்றத்தில் இருந்து செயல் பட்டிருக்கிறார். ஒரே மணி நேரத்தில் கட்-அவுட்டை டிசைன் செய்து கொடுத்தார் இளையராஜா. நாட்கள் குறைவாக இருந்ததால், அவரிடம் செவ்வாய்க்கிழமையே கட்-அவுட்டை டெலிவரி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டு (புதன் கிழமை இரவு சிறப்புக் காட்சி என்பதால்) அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியது நம் குழு.
நாம் கடந்த சில வருடங்களாகவே, லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள Rex (இப்போது Carnival Cinemas) தியேட்டரில் தான் நமது கொண்டாட்டங்கள் நடைபெறும். இது, சிங்கப்பூர் ரசிகர்களுக்கு சென்னையில் உள்ள காசி/ஆல்பர்ட்-க்கு இணையானது. பொதுவாக, சிங்கப்பூரில் கெடுபிடி அதிகம். நம் ஊரைப்போல், கட்-அவுட் வைப்பது, அதற்கு மாலை போடுவது என எதை செய்யவேண்டுமென்றாலும் முன்னதாகவே அனுமதி வாங்கியாக வேண்டும். முதலில் தியேட்டர் உரிமையாளரிடம், பின்பு போலீசிடம். இது குறித்து தியேட்டர் நிர்வாகத்திடம் பேசிய போது, இதற்கு முன்னால் நடந்த சில படங்களின் வெளியீட்டின் போது நடந்த சில அசம்பாவிதங்களில் தியேட்டருக்கு சேதாரங்கள் ஏற்பட்டதாகவும், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளிவருகிறது என்றால், போலீசுக்கே அது தலைவலியாக இருப்பதாகவும் கூறினர். தலைவரின் ரசிகர்கள் எப்போதுமே இப்படிப்பட்ட ரகளைகளில் ஈடுபட்டதில்லை என்று தெரிந்தாலும், இதையெல்லாம் போலீசுக்கு சொல்லி புரியவைக்க முடியாதே என்றும் குறைபட்டுக் கொண்டனர்.
நினைவுப் பரிசு!
எப்போதுமே, தலைவரின் முதல் நாள், முதல் காட்சி கொண்டாட்டங்களுக்கு Rex தியேட்டர் நிர்வாகம் நமக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்குவார்கள். அவர்களுக்கு நாமும் ஒரு நினைவுப் பரிசை கொடுப்பது வழக்கம். இம்முறை, அந்த நினைவுப்பரிசு நல்ல பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து, Mi Power Bank (10000mAh) கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதில், தலைவரின் படம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதியதால், அதற்கான வேலையில் இறங்கியது நம் குழு!
கட்-அவுட் ரெடி!
சொன்னபடி, செவ்வாய்க்கிழமை அன்று இரவு கட்-அவுட் வந்து இறங்கியது! அதற்கு முன்னதாகவே நம் குழு அங்கு வந்து காத்திருந்தனர். கட்-அவுட் வந்து இறங்கிய அடுத்த நிமிடமே, அங்கு வந்திருந்த ஒரு சிலர், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்!
காலாவில் நடித்திருக்கும் சிங்கப்பூர் சுகன்யா!
நாம் வைத்திருந்த கட்-அவுட்டின் அருகில், தலைவரின் ரசிகர்களுக்கே உரிய உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார் காலாவில் தலைவரின் மருமகளாக நடித்திருந்த சுகன்யா! நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
அவரிடம் நாம் கேட்ட முதல் கேள்வி என்னவாக இருந்திருக்கும்? Of Course, படம் எப்படி இருக்கிறது என்பது தான்! அப்போது அவர் முழு படத்தையும் பார்க்கவில்லை என்றும், ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சிறப்புக் காட்சியை பார்க்கப் போவதாகவும் தெரிவித்தார். ஆனால், டப்பிங்-ன் போது பார்த்தது, படப்பிடிப்பில் பார்த்தது என்று பார்த்திருந்த படியால், நம்மிடம் ஒன்றை மட்டும் கூறினார்... "இந்த படம் உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், தலைவரின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்த்து பிரமிக்க வைக்கும். தலைவரின் mass என்ன என்பதை உணர வைக்கும்" என்றார். நமக்கு இது போதாதா? அன்று இரவெல்லாம் துக்கம் போச்சு! என்னதான் அவர் தலைவருடன் படத்தில் நடித்திருந்தாலும், நம்மைப் போன்ற ஒரு தீவிர ரசிகரின் மனநிலையுடனேயே இருந்தார்! அப்போது தான் அவர் சிறு வயதிலிருந்தே தலைவரின் தீவிர ரசிகை என்பதை அறிந்தோம். அவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு விடைபெற்றோம்.
காலான்னா கருப்பு!
கபாலியின் போது, தலைவரைப்போலவே கோட்டு சூட்டு என்று ரெடியான நம் குழு இப்போது காலாவிற்காக தலைவரைப் போலவே கருப்பு வேட்டி சட்டையில் தயாராக முனைந்தது! கருப்பு வேட்டி, சட்டை எல்லாம் வாங்கிக்கொண்டு, கட்-அவுட்டிற்காக மாலை ஆர்டர் செய்து விட்டு, மறு நாள் தலைவர் தரிசனத்திற்காக தயாரானது நம் குழு!
தலைவர் தரிசனத்திற்கு முன் தெய்வ தரிசனம்!
நமக்குரிய டிக்கெட்டுகளை தயார் செய்து கொண்டு, தியேட்டருக்கு செல்லும் முன் கோவிலுக்கு சென்று தலைவர் பெயரில் அர்ச்சனை செய்ய புறப்பட்டது நம் குழு ! எப்போதுமே தலைவர் படம் ரிலீசுக்கு முன்பும், அவர் பிறந்தநாளுக்கும் அர்ச்சனை செய்வது வழக்கம் தான். இம்முறை, 4 கோவில்களில் சாமி தரிசனம் செய்து அர்ச்சனை செய்யப்பட்டது. தியேட்டருக்கு செல்லும் வழியில் மாலையை வாங்கிக்கொண்டு தியேட்டருக்கு விரைந்தது குழு.
சில மணித்துளிகளில்....!
10 மணி சிறப்புக் காட்சிக்கு 8 மணிக்கே நாங்கள் சென்றிருந்தாலும், டிக்கெட்டிற்காக ரசிகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதற்காகவே, சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்துமே விற்றுத் தீர்ந்துவிட்டது என்ற அறிவிப்புப் பலகையை வைத்திருந்தார்கள். கபாலியின் போது சிறப்புக் காட்சி டிக்கெட்டுகள் ஆன்லைனில் கொடுக்கப்படவில்லை என்பதால், கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது. இம்முறை ஆன்லைனில் முன்னதாகவே பதிவை ஆரம்பித்தபடியால், கூட்டம் கட்டிற்குள் இருந்தது.
ரசிகர்கள் 9 மணி அளவில் சிறிது அதிகமாகக் கூடியதும், நம் குழு கட்-அவுட்டிற்கு மாலை அணிவித்து, தலைவருக்கு "ஜே" கோஷம் எழுப்பியதும், அரங்கிற்குள் நுழைவதற்குக் காத்திருந்த மக்கள் அனைவருக்கும் அந்த உற்சாகம் பற்றிக் கொண்டது! நம் குழுவுடன் அனைவரும் சேர்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி, அந்த இடத்தையே களை கட்டச்செய்தனர்!
சொன்னபடியே நடிகை சுகன்யாவும் படம் பார்க்க வந்திருந்தார்... அவர், rajinifans.com காக ஒரு சிறிய பேட்டியையும் கொடுத்திருந்தார் என்பது நினைவிருக்கும்.
காலா!
சென்னை தியேட்டர்களுக்கு நிகரான அதே உற்சாகம், விசில் சத்தம் விண்ணப் பிளக்க ரசிகர்கள் கைத்தட்டல் அரங்கை அதிரவைக்க, "சூப்பர் ஸ்டார்" என்ற எழுத்துக்கள் திரையில் தோன்றியபோது கட்டுக்கடங்காமல் கரைபுரண்டோடிய அட்ரினலினை (adrenaline) ஒவ்வொரு நாடி நரம்பிலும் உணர்ந்த தருணம் அது! முதல் நாள் முதல் காட்சியில் இப்படியொரு பெண்கள் கூட்டத்தை வேறு எந்த ஹீரோ படத்திற்கும் பார்க்க முடியாது! அதுதான் தலைவரின் சிறப்பு!
நினைவுப்பரிசு வழங்குதல் !
நாம் முன்னே சொன்னபடி, நம் கொண்டாட்டங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிய தியேட்டர் உரிமையாளர், தியேட்டர் ஊழியர்கள், கட்-அவுட் செய்து கொடுத்த இளையராஜா என்று அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நமக்காக நேரம் ஒதுக்கி பேட்டியளித்த நடிகை சுகன்யாவிற்கும் rajinifans.com சார்பாக அன்புப்பரிசு வழங்கப்பட்டது!
ரெக்ஸ் Golden Mile அரங்கில் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
படத்திற்கான நுழைவுக்கட்டணம் 35 வெள்ளி.
அதில் 10 வெள்ளி Wish a Smile Foundation அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.