நாம இப்போ என்ன படம் பார்க்கப்போறோம் தெரியுமா என மிர்ச்சி அஜய் கேட்க....
'கபாலி..... நெருப்புடா' என சத்யம் திரையரங்கே கோரசாக ஒலித்தது. சினிமா ஒரு விஷுவல் மீடியம். ஆனா, பார்வை சவால் கொண்டவங்களுக்கு அது கிடையாதா? கலை எல்லாத்துக்கும் போய் சேரணும் தானே... என பார்வை சவால் கொண்டவர்களுக்காக ஸ்பெஷலாக கபாலி கடந்த சனிக்கிழமை (20.8.16) திரையானது.
ஒவ்வொரு காட்சியின் பின்னணியையும் கேட்பவர்களுக்குப் புரியும் படி வசனத்தால் கூறி குரல் கொடுத்திருந்தது மிர்ச்சி செந்தில். உதாரணமாக, கபாலியை முதல் காட்சியில் காட்டும் போது...
"கபாலி சிறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். இப்போது எழுந்து சிறைக்கு வெளியே செல்கிறார். வெளியே சென்றவர் அப்படியே பின்னால் வந்து மேலே இருக்கும் சிறைக் கம்பியைப் பிடித்து புல் அப்ஸ் எடுக்கிறார்" என படம் முழுவதும் ஒரு குரல் மூலம் எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவு செய்திருந்தார்கள்.
இன்னொரு காட்சியில், உலகம் ஒருவனுக்கா பாடலில் டைகர் (ஹரிகிருஷ்ணன்) ரஜினியை ஆட சொல்லும் போது....
கூட்டத்தில் ஒருவர் கபாலியை ஆட சொல்கிறார், அங்கிருந்தவர் அவனை அடிக்கிறார். கபாலி அவரை தடுத்து, தன் கையை ஸ்டைலாக உயர்த்தி ஆடத்தொடங்குகிறார்.
தன்ஷிகா ரஜினியை அப்பா என அழைக்கும் காட்சியில்,
யோகி கபாலியைப் பார்த்து துப்பாக்கியை தூக்கிப் போடுகிறார். அதை ஸ்டைலாகப் பிடிக்கிறார் கபாலி. யோகி எதிரிகளை சுட்டுக்கொண்டிருக்க... கபாலி அவளைப் பார்த்தவாரு இருக்கிறார். யோகி கபாலி கையைப் பிடித்து அங்கிருந்து அழைத்து வெளியே செல்கிறார் என ஒவ்வொரு காட்சியிலும் படத்தை பாதிக்காகதவாரு கொடுக்கப்பட்டிருக்கும் வர்ணனைகளால் கபாலியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அனைவரும்.
இதில் இன்னொரு ஸ்பெஷல், பார்வை சவால் கொண்டவர்களுடன் இணைந்து, கண்ணை கருப்பு மறைப்பை கொண்டு மறைத்து மற்றவர்களும் பார்த்து இந்த புது அனுபவத்தை பெற்றுக் கொண்டது தான்.
ரேடியோ மிர்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்த இந்த முயற்சியை ஆதரித்து பல அமைப்புகளும் இதில் கலந்து கொண்டு, சினிமா அனுபவத்தை அனைவருக்குமானதாக மாற்றினார்கள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு, "இந்த முயற்சி எல்லா சினிமாக்களிலும் இடம் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என தெரிவித்தார். படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் கலையரசன், லிங்கேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Courtesy : vikatan
|