மும்பை: ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் 2.0. சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மிக பிரமாண்டமாகவும், வண்ணமயமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவை பிரபல இந்திப் பட இயக்குநரும், 2.0-வை இந்தியில் வெளியிடும் உரிமை பெற்றவருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிட்டி வேடம், அக்ஷய் குமாரின் வில்லத் தோற்றம் போன்றவை முதல் தோற்ற படங்களாக வெளியிடப்பட்டன. அதையே ஒரு சின்ன டீசராக 3 டியில் காட்டினார்கள்.
பொதுவாக இந்தியாவில் தயாராகும் 3 டி படங்கள் சாதாரணமாக எடுக்கப்பட்டு, பின்னர் 3டி க்கு மாற்றப்படும். ஆனால் ரஜினியின் 2.0 மட்டும் முழுக்க முழுக்க 3டியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படி படமாகும் முதல் இந்தியப் படம் 2.0-தான் என்பதை மேடையில் அறிவித்தார்கள்.
இரண்டாம் பாகத்திலும் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். அதே டாக்டர் வசீகரன் ஒரு வேடம். அடுத்தது சிட்டி அப்க்ரேடட் வர்ஷன் 2.0. இது என்ன மாதிரி வேடம்? வில்லத்தனம் கலந்ததா? என்று கேட்டதற்கு ரஜினி அளித்த பதில்…
“2.0 ல் அக்ஷய் ஏற்ற பாத்திரம் மிகவும் பவர்புல்லானது. அந்த வேடத்தை ஏன் ஷங்கர் எனக்குத் தரவில்லை என்று தெரியவில்லை.
ஆனால் வில்லன் வேடங்கள் செய்வது எனக்குப் புதிதல்ல. பிடித்தமானதும் கூட. இந்தப் படத்தில் நான் வில்லன்தான். வில்லன் என்றால் இது ரியல் வில்லன்,” என்றார்.
அவரிடம் உங்கள் திரைப்படங்கள் வெளியாகும் நாள் மட்டும் எப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போல மாறிவிடுகிறது? என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ரஜினி, “அதற்குக் காரணம் எனது ரசிகர்கள்தான். அவர்கள்தான் என் ஒவ்வொரு பட வெளியீட்டையும் மிகப் பெரிய திருவிழா போல மாற்றுகிறார்கள்,” என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “2.0 அதில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவையே தலை நிமிர வைக்கும். இந்திய சினிமாவின் பெருமையாக நிற்கும். இதுவரை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்தியாவில் படங்கள் எடுக்கப்பட்டதில்லை. ஆனால் 2.0 ஹாலிவுட் படங்களுக்கு இணையாக நிச்சயம் திகழும்,” என்றார்.
உங்கள் வயதில் உங்களைப் போன்ற சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழக் கூடிய பாலிவுட் நடிகர் யார் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ் என்றார் ரஜினி.
முன்னதாக விழா நடந்த அரங்கம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்று ரஜினிக்கு வரவேற்பு அளித்தனர். அதனை கையசைத்தும், கும்பிட்டும் ஏற்றுக் கொண்டார் ரஜினி.
நேற்று நடந்த 2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… ஒரே நேரத்தில் மேடையிலும் நிகழ்ச்சி நடந்த அரங்கிலும் இரு ரஜினி காட்சி தந்ததுதான்.
மேடையில் நிஜ ரஜினி வந்து நிற்க, அரங்கின் நடு நாயகமாக பெரிய நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி சிட்டி ரஜினி செம ஸ்டைலாக அமர்ந்திருந்தார்.
இது எப்படி சாத்தியம்?
எல்லாம் ஹோலோகிராம் மாயம்.
நேற்று முன்தினமே ரஜினி மும்பைக்குப் போய்விட்டார் அல்லவா… அவரை சிட்டி கெட்டப்புக்கு மாற்றி அங்கே சில காட்சிகளைப் படமாக்கினார் இயக்குநர் ஷங்கர். அதை ஹோலோகிராம் செய்து, நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த கரண் ஜோஹர் கேள்விக்கு சிட்டி ரஜினி பதிலளிப்பது போல மாற்றியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அது அமைந்தது.
நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்தை மேடைக்கு வருமாறு கரண் ஜோஹர் அழைத்தார்.
ரஜினி வருவதற்காக மேடையில் ஒரு கதவு திறந்தது. திறந்த வேகத்தில் மூடிக் கொனண்டது. ரஜினி வரவில்லை. “ரஜினி சார், நீங்க எவ்வளவு ஸ்பீட்னு எனக்குத் தெரியும்… ஆனால் இந்த அளவு ஸ்பீட் ஏன்.. என்ன ஆச்சு?” என அவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சிட்டி நாற்காலியில் அமர்ந்தபடி ‘ஹலோ… ஐயாம் சிட்டி.. தி ரோபோட்…. ஸ்பீட் ஒன் டெராஹெட்ஸ், மெமரி ஒன் ஜெகாபைட்ஸ்…’ என கரணை அழைத்தார்.
கரண் ஆச்சர்யத்துடன், “ஓ… சிட்டி…”
சிட்டி: கண்ணா நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல வருவேன்…
கரண் புரியாமல் விழிக்க…
சிட்டி: நஹி சம்ஜானா…
கரண்: நஹி
சிட்டி: மே கப் ஆவோங்கா.. கைஸே ஆவோங்கா… கோஹி நஹி ஜான்தான்ஹூ… மஹத் ஜப் ஹே ஆவூங்கா.. சஹி வக்த் மே ஆவூங்கா… ஹாஹாஹா…
கரண்: சரி… உங்களத்தான் அக்குவேறு ஆணி வேறா பிரிச்சுப் போட்டுட்டாரே வசீகரன்.. இப்ப எப்படி?
சிட்டி: ஹாஹாஹா… என்னை யாராலும் அழிக்க முடியாது!
கரண்: ஆமா.. நீங்க உங்க பாஸ் காதலியை அபேஸ் பண்ணப் பாத்தீங்களே… அந்தக் கதை என்னாச்சு?
சிட்டி: அது ஒரு சோகக் கதை கரண். அவர் என்னை நண்பனாக்கிட்டாரு. யே தில் ஹை முஷ்கில் (இதயம் உடைஞ்சிப் போச்சு).
-இப்படிப் போனது அந்த உரையாடல்.
பாலிவுட்டின் கிங் யார் என்ற கேள்விக்கு ‘மிஸ்டர் அமிதாப் பச்சன்’ என்று சிட்டி ரஜினி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
பண ஒழிப்பு குறித்துக் கேட்டபோது, ‘நான் இந்த வார்த்தையை என் பாஸ் உச்சரிக்கக் கேட்டிருக்கேன்’ என்றார். ‘ஓ.. வசீகரன்?’ என்றபோது, தன் தலையில் தட்டியபடி (மொட்ட பாஸ் ஸ்டைல்) “நோ.. சிவாஜி தி பாஸ்” என்றார் சிட்டி.
இந்த கேள்வி பதிலுக்குப் பின் மேடைக்கு வந்த ரியல் ரஜினி, ‘கரண்.. ஏன் சிட்டிய தேவையில்லாம கேள்வி கேட்டு டிஸ்டர்ப் பண்றீங்க?’ என்றார் சிரிப்புடன். ஒரே நேரத்தில் சிட்டி ரஜினி, ரியல் ரஜினியை அரங்கில் பார்த்தது ரசிகர்களுக்கு இரட்டை இன்ப அதிர்ச்சியாக அமைந்தது!
யாஷ்ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவில் நடந்த இந்த விழாவில் கலந்து கொள்ள சல்மான்கானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ஆனாலும் அவர் விழா நடக்கும்போது வந்துவிட்டார். பார்வையாளர் பகுதியில் அமர்ந்து 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை கண்டு ரசித்தார்.
பின்னர்தான் அவர் வந்திருப்பது தெரிந்து மேடைக்கு அழைத்தனர். மைக்கைப் பிடித்த சல்மான்கான், “இந்த விழாவுக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. ஆனால் விழா நடப்பது தெரியும். ரஜினி சார் வந்திருப்பது தெரியும். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் வந்தேன். ரஜினி சார் மீது நான் அளவுகடந்த மரியாதை வைத்துள்ளேன். அதற்காகவே நான் வந்தேன்.
ஒரு முறை நானும் ரஜினி சாரும் ஒரு ஷூட்டிங்கில் இருந்தோம். அப்போது பாத்ரூமில் ரஜினி சார், சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிராக்டீஸ் பண்ணிக் கொண்டிருந்தார். ஏன் இங்கே செய்கிறீர்கள்? என்று நான் கேட்டதற்கு, வெளியே காற்று பலமாக அடிப்பதால், இங்கே பிராக்டீஸ் செய்கிறேன் என்றார். அது திறந்த வெளியில் நடந்த ஒரு நிகழ்ச்சி. உண்மையிலேயே ரஜினி ஒரே ஷாட்டில் சிகரெட்டை பிடிக்கிறாரா எனப் பார்க்க பின் பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். யெஸ்.. அவர் ஒரே ஷாட்டில் சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடித்தார்,” என நினைவு கூர்ந்தார்.
அடுத்து ரஜினியிடம் ஒரு கேள்வியை முன் வைத்தனர் செய்தியாளர்கள்.
‘அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த நீங்கள், எப்போது சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கப் போகிறீர்கள்?’
இதற்கு பதிலளிக்கும்போது, நிகழ்ச்சிக்கு வந்ததற்காக சல்மான் கானுக்கு நன்றி கூறிய ரஜினி, “சல்மான் கான் ஓகே சொன்னால் நாளையே கூட அவருடன் சேர்ந்து நடிக்க நான் தயார்,” என்றார்.
ரஜினியின் இந்த பதிலைக் கேட்டு கண் கலங்க சிரித்தார் சல்மான் கான்.
-என்வழி
2.0 First Look Launch Event Full Coverage video
|