வேட்டையன் வெற்றிக் கொண்டாட்டம்.. தன் கையால் பிரியாணி பரிமாறிய ஞானவேல் மற்றும் ரித்திகா சிங்
(Monday, 21st October 2024)
த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 திரையரங்கில் வெளியாகியது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
போலி என்கவுண்டர்களுக்கு பின் இருக்கும் அரசியலை மிக விரிவாக இப்படத்தை பேசியுள்ளார் இயக்குநர் ஞானவேல். அதே நேரம் ரசிகர்களை திருபதி படுத்தும் வகையிலும் படம் கமர்ஷியல் அம்சங்களையும் வைத்துள்ளது. ரஜினி மாதிரியான ஒரு பெரிய சூப்பர்ஸ்டாரை வைத்து இந்த மாதிரி சமூக அக்கறையுள்ள ஒரு கதையை பேசியிருப்பதற்காக இயக்குநர் ஞானவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ரஜினி மட்டுமில்லாமல் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஞானவேல், ரித்திகா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய இயக்குநர் ஞானவேல், "இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம் நன்றி அறிவித்தல் தான். நம்பிக்கையில் தான் இது தொடங்கியது. நன்றியில் தான் இது முடிய வேண்டும். என்மீது நம்பிக்கை வைத்து ஜெய்பீம் படத்துக்கு பிறகு கன்டென்ட் உள்ள படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்துடனும், ஈடுபாடுடனும் என்னை முதலில் இந்த படத்துக்கு அழைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி. அவர் இல்லை என்றால் இந்த பயணம் இல்லை.
இத்தனை பேர் எனக்கு சாத்தியமில்லை. ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இதுபோன்ற கருத்துள்ள ஒரு படம் பண்ண தனி தைரியம் வேண்டும். அந்த தைரியம் தான் அவரை சூப்பர் ஸ்டாராக வைத்துள்ளது. இந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இதில், நடித்த அமிதாப் பச்சன் தொடங்கி அனைவரும் கதையை நம்பி வந்தனர். முடிந்த அளவு குழுவாக இணைந்து நியாயப்படுத்தியுள்ளோம். படைப்பு சுதந்திரத்துடன் ஒரு படம் வெளியே வருவது முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். இதன் நிறை குறைகளுக்கு நான் பொறுப்பு.
எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இது உண்மையாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது மகிழ்ச்சி. மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாவுக்கும் நன்றி" என்று பேசினார்.
சக்சஸ் மீட் முடிந்தவுடன் இந்த படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு இயக்குனர் தா.சே. ஞானவேல் மற்றும் நடிகர், நடிகைகள் பிரியாணி பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
300க்கும் மேற்பட்ட பெண் Auto ஓட்டுநர்கள் சேர்ந்து கொண்டாடிய வேட்டையன் திருவிழா ....