2002-ம் ஆண்டு முழுவதும் பாபா மயமாக இருந்தது
7th December 2008
ஒருவேளை கடவுள் மட்டும் இன்று கண்ணெதிரில் தோன்றினால் "பாபா படத்துக்கு ஒரு டிக்கெட் வேண்டும்" என்றுதான் முதல் கோரிக்கை வைப்பார்கள் தமிழ் மக்கள்! -தினமணி நாளிதழில், பாபா வெளியீட்டுக்கு முந்தைய வாரம் எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு தரப்பட்டிருந்த முன்னுரை இது!
சிவாஜிக்குக் கூட அவ்வளவு செய்திகள் வந்திருக்குமா தெரியவில்லை அவ்வளவு பரபரப்பு செய்திகள் சிறப்புக் கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனங்கள், எதிர் விமர்சனங்கள் என பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்.
தனது வியாபாரத்துக்கும் ரஜினி, விமர்சனத்துக்கும் ரஜினி, அறிவுஜீவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும் ரஜினி என ரஜினியை வைத்து எக்கச்சக்கமாய் சம்பாதித்து வரும் விகடன் குழும பத்திரிகைகள், பாபாவுக்கு மட்டும் 60-க்கும் மேற்பட்ட அட்டைப் பட சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டன. குமுதம் மட்டும் சளைக்குமா? அவர்களும் போட்டுத் தாக்கினார்கள்.
இத்தனைக்கும், ரஜினி தொடர்பான செய்திகளை வெளியிட சட்ட ரீதியான அனுமதி பெற வேண்டும் என லதா ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்த நேரம் அது.
எதிர்பார்ப்பு என்ற சொல்லுக்கு நிஜமான அர்த்தம் பாபா பட வெளியீட்டின்போது அருகிலிருந்து கவனித்தவர்களுக்குத்தான் புரியும். ஒரு பக்கம் பெருமை, மறுபக்கம் படபடப்பு. ரசிகர்களுக்கே இப்படியென்றால், சூப்பர் ஸ்டாருக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனால் அதை அவர் காட்டிக் கொள்ளவே இல்லை.
"தி வெயிட் ஈஸ் ஓவர்" என்ற வாசகத்தோடு, பாபா டிக்கெட்டுகளை நமக்கு ஒரு நாள் முன்பே அனுப்பி வைத்தார் ரஜினியின் பிஆர்ஓ நிகில்.
படத்தின் சிறப்புக் காட்சிகள் சத்யம் வளாகத்திலிருந்த 5 திரையரங்குகளிலும் ஒரு நாள் முன்பே விடியவிடிய திரையிடப்பட்டன. சென்னையின் மற்ற திரையரங்குகளிலும் சிறப்புக் காட்சிகளில் கூட்டம் திமிலோகப்பட்டது.
படம் முடிந்து வெளியில் வந்தபோது, உடன் வந்திருந்த சில நண்பர்கள், "என்னய்யா தலைவர் இப்படி ஏமாத்திட்டாரே?" என புலம்பத் தொடங்கிவிட்டனர். அதுவரை, "ஆஹா" சொல்ல வந்த விஷயத்தை நெத்தியடியா சொல்லிட்டார் தலைவர் என நம்பிக் கொண்டிருந்த நமக்கு பக்கென்றது.
அவர்களிடமிருந்து விடைபெற்று, மாண்டியத் சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, சில நிமிடங்கள் கண்ணை மூடி யோசித்த போது, இன்னொரு நண்பர் போன் செய்தார். அவரும் நம்மைப் போன்ற மனநிலையில்தான் இருந்தார்.
"தலைவர் எடுத்திருப்பது நல்ல படம்தான். இன்றில்லாவிட்டாலும், போகப் போக மக்கள் புரிந்து கொள்வார்கள். இப்போது கிடைக்காத பாராட்டும் புகழும் பின்னால் கிடைக்கலாம்.. நீ வேணும்னா பாரு?" என்று அமைதியாக, அழுத்தமாகக் கூறினார்.
அடுத்த நாளே தினமலர் ஒரு சர்வே நடத்தியது. அதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இந்தப் படம் அருமையாக இருப்பதாகவும், அரசியல் குறித்த ஒரு நல்ல செய்தியை ரஜினி தங்களுக்கு அதில் கூறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனாலும் பாபாவுக்கு எதிரான விஷமப் பிரச்சாரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது. படப்பெட்டிகள் சூறையாடல், தியேட்டருக்கு தீவைத்தல், திரைக் கிழிப்பு என அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டதை யாரும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.
வழக்கமாக ஒரு வாரம் கழித்து விமர்சனம் வெளியிடும் விகடன், அடுத்த நாளே மட்டமான விமர்சனம் எழுதி தங்கள் "நடுநிலை"யைக் காட்டியது.
இந்த நேரத்தில் இதை வெளியிடக் காரணம் இருக்கிறது. பாபாவைப் பற்றி இன்னும் கூட சிலர் "குரைத்து"க் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் பலவிதத்திலும் சிறப்பான படைப்பு என இன்றைக்கு பலரும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
குறிப்பாக கடந்த இரு மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாம் சந்திக்கும் நண்பர்கள், நடுநிலை விமர்சகர்கள் அனைவருமே பாபாவுக்கு நற்சான்று அளித்து வருகிறார்கள்.
சக பத்திரிகையாளர் நண்பர் ஒருவரின் மகன் (கல்லூரிக்குப் போகும் வயசு!) வாரம் ஒருமுறையாவது அந்தப் படத்தைப் போட்டுப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். இத்தனைக்கும் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து ஒரு வார இதழில் கட்டுரை எழுதியவர் அவர் (பெயர் வெளியிடுவது தர்மம் ஆகாது!)
அன்று பாபாவால் பெரும் நஷ்டம் என்ற பிரச்சாரம் எழுவதற்கு முன்பே, விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் அழைத்து அவர்கள் குறிப்பிட்ட நஷ்டத் தொகைக்கு மேல் ஒரு தொகையை ரஜினி கொடுத்தார்.
ஆனால் அவர்களே இன்று சொல்கிறார்கள், "பாபா தோல்விப் படமல்ல. எங்களுக்கு அந்தப் படத்தால் லாபம் கிடைத்தது உண்மைதான்" என்று. (இதுகுறித்து ஏற்கெனவே ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளோம்)
இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது அந்த மகாவதார் பாபாஜியின் விருப்பம் போலிருக்கிறது?
இந்தப் படம் குறித்த நடுநிலையாளர்கள் சிலரது இன்றைய பார்வைகளை நம்மால் முடிந்த அளவு தொகுத்திருக்கிறோம். கூடவே அதுபற்றி சூப்பர் ஸ்டாரின் கருத்தும். அது அடுத்த பதிவில்!
-ஷங்கர்
|