`பாபா' படம் வாங்கி நஷ்டம் அடைந்த அதிபர்கள் அனைவருக்கும் கோடிக்கணக்கான பணம் திருப்பிக்கொடுத்தார்
"பாபா'' மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிக விலை கொடுத்து "பாபா'' படத்தை வாங்கினார்கள்.
பா.ம.க. எதிர்ப்பு
படம் வெளிவருவதற்கு முன்பே, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கும், ரஜினிக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்கும் ஸ்டைல்கள் மூலம், தமிழக இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாக்கிவிட்டார் என்று ரஜினி மீது ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதனால் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை நிலவி வந்தது.
2002 ஆகஸ்டு 15-ந்தேதி "பாபா'' படம் திரையிடப்பட்டது. அன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் படம் திரையிடப்பட இருந்த தியேட்டரின் திரை கிழிக்கப்பட்டது. படத்தின் `கட் அவுட்', பேனர் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. படப்பெட்டி கடத்திச் செல்லப்பட்டது.
விருத்தாசலத்தில், படத்தை திரையிட இருந்த தியேட்டரின் மானேஜர் கடத்தப்பட்டார். தமிழகம் முழுவதும், "பாபா'' படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பதற்றம் நிலவியது. போலீஸ் காவலுடன் படம் ஓடியது.
வட தமிழ்நாட்டில் பல இடங்களில் படம் திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
ரஜினி அறிக்கை
இதுபற்றிய தகவல்கள், ரஜினிக்குத் தெரிவிக்கப்பட்டன.
"உணர்ச்சிவசப்படாதீர்கள். அமைதியாக இருங்கள்'' என்று தன் ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்தார். "டாக்டர் ராமதாசை நீதிமன்றத்தில் சந்திப்பேன்'' என்றும் கூறியிருந்தார்.
ஜெயங்கொண்டத்தில், திரை கிழிக்கப்பட்ட தியேட்டர் அதிபருக்கு ரூ.1 லட்சம் கொடுத்ததுடன், புதிய படப்பெட்டி ஒன்றையும் ரஜினி அனுப்பி வைத்தார்.
பரபரப்பான சூழ்நிலையில் வெளியான "பாபா'' வழக்கமான ரஜினி படங்களைப் போல் அமையவில்லை. பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவும், ஆன்மீகம் அதிகமாகவும் இருந்தன. எனவே படம் பெரும்பாலோருக்கு ஏமாற்றத்தை அளித்தது.
தவிரவும், படம் ஒரே சமயத்தில் ஏராளமான தியேட்டர்களில் திரையிடப் பட்டதுடன், தினமும் நாலைந்து காட்சிகள் நடந்தன. இதனால், விரைவிலேயே கூட்டம் குறையத் தொடங்கியது.
என்றாலும் சென்னையில் படம் நூறு நாட்கள் ஓடியது.
திருப்பிக்கொடுத்தார்
தன் படத்தை வாங்கிய எவரும் நஷ்டம் அடையக்கூடாது என்று ரஜினி நினைத்தார்.
அதன்படி, `பாபா' படம் வாங்கி நஷ்டம் அடைந்த வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருக்கும் கோடிக்கணக்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது.
இந்த தகவலை `பாபா' படத்தின் வினியோகஸ்தர்களான ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், திருப்பூர் சுப்பிரமணியம், நாகராஜராஜா ஆகியோர் 27-9-2002 அன்று நிருபர்களிடம் தெரிவித்தனர்.
இதுபற்றி திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
"உலக சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகரும், தயாரிப்பாளரும் செய்திராத அளவுக்கு ரஜினிகாந்த் மிகவும் தாராள மனதுடன் நடந்து கொண்டு, நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார்.
திரை உலகில் உள்ள அனைவருக்கும் முன்னோடியாக அவர் நடந்து கொண்டார்.
ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், எங்களை அழைத்து, `பாபா' படம் வாங்கியவர்கள் ஒரு பைசாகூட நஷ்டம் அடையக்கூடாது. யார் - யாருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டதோ அதன்படி எல்லா பணத்தையும் திருப்பிக்கொடுத்து விடுங்கள். `பாபா' படத்தை விற்ற பணம் அப்படியே இருக்கிறது. அதில் இருந்து நான் ஒரு பைசா கூட தொடவில்லை'' என்றார்.
"முழு பணமும் திருப்பிக் கொடுக்கப் பட்டால்தான் எனக்கு தூக்கம் வரும். கொடுக்காவிட்டால் தூக்கம் வராது'' என்று கூறினார்.
110 தியேட்டர்கள்
அவர் சொன்னபடி 110 தியேட்டர் அதிபர்களுக்கும்,
10 வினியோகஸ்தர் களுக்கும் கோடிக்கணக்கில் பணம் திருப்பி தரப்பட்டுவிட்டது.''
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.
ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், பட அதிபர் ஜீ.வி., நாகராஜ் ராஜா, ஆல்பர்ட் தியேட்டர் மாரியப்பன், முன்னாள் `எம்.பி' அடைக்கலராஜின் மகனும், வினியோகஸ்தருமான பிரான்சிஸ், தியேட்டர் அதிபர்கள் ஜெயகுமார், கண்ணப்பன், ராஜாராம், பங்களா சீனு ஆகியோரும் பேசினார்கள்.
நாகராஜராஜா பேசும்போது, "உப்பிட்ட தமிழ் மண்ணை ஒருபோதும் ரஜினி மறக்கமாட்டார்'' என்றார்.
லாப - நஷ்டம்
ஒரு விநியோகஸ்தர் குறிப்பிடுகையில், "பாபா படத்துக்கு ரூ.20 கோடி வசூலாகியது. ரஜினிக்கு இது தோல்வி என்று கருதப்படுகிறது. ஆனால், விஜய் போன்ற இளம் நடிகர்கள் நடிக்கும் படங்கள் ரூ.20 கோடி வசூலித்தால், அது மகத்தான வெற்றிப்படமாக கருதப்படுகிறது'' என்று கூறினார்.
|