ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்
18 November 2008
ரஜினிக்கு பாட்டு எழுதும்போது மட்டும் யாரும் சொல்லாமலே தானாக வந்து விழுகின்றன வார்த்தைகள். அதுதான் அவருக்குள்ள வசீகரம், சிறப்பு என்கிறார் கவிஞர் வைரமுத்து.
சென்னையில் லஷ்மன் ஸ்ருதியின் வித்தியாசமான இசை நிகழ்ச்சி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அந்தப் பாடல் பிறந்த விதம் போன்ற சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவற்றில் சிலவற்றை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோர் பாடி பரவசப்படுத்தினார்கள். ஒவ்வொரு பாடலையும் அவர்கள் பாடுவதற்கு முன்பாக, அந்த பாடல்களை எழுதிய சூழ்நிலையை கவிஞர் வைரமுத்து விவரிக்க, அதுவே ஒரு தனி அனுபவமாக அமைந்தது ரசிகர்களுக்கு.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம் பற்றி அவர் விளக்கியபோது, அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.
அவர் பேசியதிலிருந்து...
ரஜினி அவர்கள் நடித்த முத்து படத்துக்கு பாடல் எழுதுவதற்காக ரஜினிகாந்த், நான், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கேரளாவில் உள்ள கொச்சிக்கு சென்றிருந்தோம். அப்போது, ஏ.ஆர்.ரகுமான் ஒரு தனி அறைக்கு சென்றுவிட்டார். நான் பாடலுக்கு மெட்டு போடும் வரை என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறி அறைக் கதவையும் அடைத்துக் கொண்டார்.
ரஜினிகாந்தும், நானும் ஆன்மீகம், அரசியல் என்று எவ்வளவோ பேசினோம். அப்போது, மாவீரன் அலெக்சாண்டர் பற்றி ஒரு சம்பவத்தைச் சொன்னார் ரஜினி அவர்கள்.
உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் போரிட்டு வென்ற அலெக்சாண்டரே, தான் இறக்கும்போது தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியும்படி வைத்து, இவன் போகும்போது ஒன்றையும் கொண்டு போகவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தனது உதவியாளரிடம் கூறினாராம்.
இதை நண்பர் ரஜினி அவர்கள் சொன்னபோது, கேட்டு வைத்துக் கொண்டேன்.
அதை வைத்தே, முத்து படத்தில் வரும் "ஒருவன் ஒருவன் முதலாளி..." பாடலை எழுதினேன். அந்த பாடலின் இடையே "மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை.." என்று எழுதியது இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடத்தான்.
ரஜினிகாந்தின் சிறப்பே, யாரையும் அவர் நேரடியாக கட்டுப்படுத்துவதில்லை. நம்மையும் அறியாமல் அவர் சொல்வதைக் கேட்போம். அவரது வார்த்தக்கு அப்படி ஒரு வசீகரம் இருக்கிறது. எனக்கு இப்படித்தான் பாட்டு வேணும், இந்த மாதிரிதான் வரிகள் அமையணும் என்று அவர் யாருக்கும் கட்டளை போட்டதில்லை. அவருக்கு எழுதும்போது தானாகவே வந்து விழுகின்றன அத்தகைய வரிகள். அதுதான் அந்த உச்ச நட்சத்திரத்தின் சிறப்பு, என்றார் வைரமுத்து.
-சங்கநாதன்
|