Poornam
Vishwanathan
10 October 2008
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் வரிசையில் பூர்ணம் விஸ்வநாதன் நிச்சயம் ஒரு சகாப்தம். 100 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அனைத்துமே முக்கியமான படங்கள். பூர்ணம் விஸ்வநாதன் நடித்த முதல் படம் எதுவென்று சரியாக தெரியவில்லை. ஆனால் அவரை பெரிய அளவில் வெளிக்காட்டியது நினைத்தாலே இனிக்கும், டெயோட்டா கார்!
சவாலில் ஜெயித்து காரை கைப்பற்ற வேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம். தோற்றுப்போனால் சுண்டு விரலை தியாகம் செய்ய வேண்டியிருக்குமே என்கிற கவலை ஒரு பக்கம். குழப்பம் பிளஸ் பயத்துடன் சிகரெட்டை கையிலெடுக்கும்போது காமிரா பூர்ணத்தின் சிரிப்பை படம் பிடிக்கும். பகீர் சிரிப்பு. பாலசந்தர் படத்து கேரக்டர்களுக்கே உரிய பகீர் சிரிப்பு.
தில்லுமுல்லுவில் ஒரு காட்சி. பரீட்சையில் பாஸ் செய்துவிட்டு பெயிலாகிவிட்டதுபோல் நடிப்பார் ரஜினி. ஏமாந்து போய் ரஜினியை திட்டிவிட்டு பெரிய ஆளா வருவே என்பார். ரஜினியோடு நடித்த படங்களெல்லாம் பூர்ணத்திற்கு பெருமை சேர்த்தன. கடைசி வரை சிரித்துக்கொண்டே இருக்கும் நினைத்தாலே இனிக்கும் கேரக்டர் ரோல் முதல் பிள்ளை இழந்த சோகத்தை மறைத்துவிட்டு புலம்பும் பக்தராக வந்த ராகவேந்தரர் படம் வரை அனைத்துமே முக்கியமான பாத்திரங்கள்.
கட்டுப்பெட்டித்தனமான ஐயங்கார் பாத்திரத்திற்கு பூர்ணம் விஸ்வநாதனை விட பொருத்தமானவர்கள் யார்? ஐயங்கார் வீட்டுப்பையன் ராணுவத்தில் சேர்ந்து ஷீவை கூட கழட்டாமல் வீட்டுக்குள் நுழையும் காட்சியில் முகத்தில் கடுகடுப்பை காட்டுவதிலும் மகனை கறை சொல்லும் காட்சியிலும் பூர்ணம் ஜொலித்தார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் செய்யாத கொலைக்காக மாட்டிக்கொள்ளும் அப்பாவியாக வந்து இரக்கப்பட வைத்த உன் கண்ணில் நீர் வழிந்தால் படம் கூட பூர்ணத்திற்கு முக்கியமான ஒன்று.
பூர்ணம் தனது 18வது வயதில் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். புது தில்லியில் வாழ்ந்த காலத்தில் 1945 இல் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். 1947இல் அகில இந்திய வானொலியில் முதல் முதலாக தமிழில் இந்தியா விடுதலைப் பெற்ற செய்தியை படித்தவர் பூர்ணம் விஸ்வநாதன்தான். மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து சினிமாவுக்கு வந்தார். பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற நாடக குழுவை ஆரம்பித்து ஏராளமான நாடகங்களை மேடை ஏற்றினார். அந்த நாடகக் குழுவின் பெயராலேயே சாதாரண விஸ்வநாதனாக இருந்த அவர், பூர்ணம் விஸ்வநாதன் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. வருஷம் 16 படத்தில் பெரிய தாத்தாவாக நடிப்பதற்கு இவரைவிட்டால் வேறு பொருத்தமான ஆளில்லை என்று சிவாஜி கணேசனால் பாராட்டப்பட்டவர். இவரை மிக்ரி செய்யாத மிமிக்ரி கலைஞர்கள் தமிழ்நாட்டில் இல்லை.
எழுத்தாளர் சுஜாதா, பூர்ணம் விஸ்வநாதனுக்காகவே எழுதிய நாடகங்கள் பல. அதில் அன்புள்ள அப்பா, ஊஞ்சல், அப்பாவின் ஆஸ்டின் கார் ஆகியவை முக்கியமானவை. சுஜாதா எழுதிய நாடகங்கள் அனைத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவர் பூர்ணம் விஸ்வநாதன் மட்டுமே. பூர்ணம் மட்டும் நடிக்க மறுத்திருந்தால் நாடகங்களே எழுதியிருக்கமாட்டேன் என்று சுஜாதாவே ஒரு முறை கூறியிருக்கிறார்.
சென்ற வாரம் இதே நாளில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த பூர்ணம் விஸ்வநாதனின் இழப்பு தமிழ் சினிமாவுக்கும் தமிழ் நாடக மேடைக்கும் பெரிய இழப்பு என்றே சொல்லலாம். அன்னாரை இழந்த அவரது குடும்பத்தினருககு ரஜினிபேன்ஸ் சார்பாக ஆழ்ந்த வருத்தங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று ஆண்டவனை வேண்டுவோம்.
|