ரஜினிகாந்த்
வாழ்க்கைப் பயணம்
படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார்
கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார்
தந்தையின் விருப்பப்படி கல்லூரியில்
சேர்ந்த ரஜினிகாந்த், படிக்கப் பிடிக்காமல் வேலை தேடி சென்னைக்கு
ஓடிவந்தார். பல கஷ்டங்களை அனுபவித்தார். கிடைத்த சம்பளத்தில் சினிமா
பார்த்து விட்டு, பட்டினி கிடந்தார்.
பெங்களூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து
முடித்தபோது ரஜினிக்கு வயது 16. அரும்பு மீசை வளரத் தொடங்கிய பருவம்.
"சும்மா ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், பையன் கெட்டுப்போய் விடுவான்.
கல்லூரியில் சேர்ந்து படிக்கட்டும்'' என்று, ரஜினியின் தந்தை முடிவு
செய்தார்.
தந்தையின் வற்புறுத்தல் காரணமாக, வேறு வழியின்றி கல்லூரியில் "பி.யு.சி''
வகுப்பில் சேர்ந்தார், ரஜினி. சில மாதங்கள்தான் படித்தார். படிப்பு
வேம்பாய்க் கசந்தது. கல்லூரியில் சம்பளம் கட்டுவதற்காகக் கொடுத்த
200 ரூபாயை எடுத்துக்கொண்டு, சென்னைக்கு ரெயில் ஏறிவிட்டார்.
இந்தக் காலக்கட்டத்தில், ரஜினி சினிமாப் படங்கள் பார்ப்பது உண்டு
என்றாலும், சினிமாவில் நடிக்கும் ஆசை வரவில்லை. ஏதாவது வேலை தேடலாம்
என்ற எண்ணத்தில்தான் சென்னைக்கு வந்தார்.
ஆனால், பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்கவில்லை. பணம் கரையக்
கரைய, பயம் ஏற்பட்டது. கடைசியில் ஒரு தச்சுப் பட்டறையில் வேலைக்குச்
சேர்ந்தார்.
அங்கு போதிய வருமானமும் இல்லை; வேலையும் பிடிக்கவில்லை. எனவே,
பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார்.
மீண்டும் சென்னை
பெங்களூரில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சில
நாட்கள்தான் வேலை பார்த்தார். அதன்பின் வேலை பிடிக்காமல் மீண்டும்
சென்னைக்கு வந்தார்.
சென்னையில் வேலை தேடி அலைந்தார். அப்போது மிட்லண்ட் தியேட்டரில்
கே.பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த "எதிர்நீச்சல்'' படம்
ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தை போய்ப்பார்த்தார்.
மறுநாள், ஒரு கட்டிட காண்டிராக்டரிடம் சித்தாள் வேலை கிடைத்தது.
அங்கு கிடைக்கும் சம்பளத்தில் நிறைய சினிமா படங்கள் பார்த்தார்.
சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.
குணச்சித்திர வேடங்களில் சிவாஜியின் நடிப்பையும், வீரதீரச் செயல்கள்
நிறைந்த காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடிப்பையும் கண்டு பிரமித்தார்.
கையில் கிடைக்கும் காசில் சினிமா பார்த்துவிட்டு, பல நாள் பட்டினி
கிடந்திருக்கிறார்.
ஒருநாள் இப்படி சினிமா பார்த்துவிட்டு, "எல்.ஐ.சி'' கட்டிடத்தின்
முன், பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கினார். இரவில் ரோந்து
சுற்றிய போலீசார், சந்தேகக் கேசில் அவரைப் பிடித்து "லாக்-அப்''பில்
வைத்துவிட்டனர். மறுநாள் காலை விசாரணை நடத்தியதில், அவர் நிரபராதி
என்று தெரிந்தது. உடனடியாக விட்டுவிட்டனர்.
போதிய வருமானம் இல்லை. பசி - பட்டினியுடன் எத்தனை நாள் காலம்
தள்ளமுடியும்? மீண்டும் பெங்களூருக்குத் திரும்ப முடிவு செய்தார்,
ரஜினி.
டிக்கெட் வாங்கக்கூட கையில் பணம் இல்லை. `வருவது வரட்டும்' என்று
தீர்மானித்து, பெங்களூர் ரெயிலில் ஏறி, பெஞ்சுக்கு அடியில்
படுத்துக்கொண்டார்.
நல்லவேளையாக டிக்கெட் பரிசோதகர் எவரும் வரவில்லை. மறுநாள் காலை
பத்திரமாக பெங்களூர் போய்ச் சேர்ந்தார்.
வீட்டுக்குப் போனபோது, யாரும் அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.
சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டு ஓடியதால், கோபமாக இருந்தார்கள்.
`ஏதாவது வேலை பார்த்தால்தான் இனி மரியாதை கிடைக்கும்' என்று
தீர்மானித்த ரஜினி, ஒரு தச்சுப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார்.
சில நாட்கள் கழித்து, ஒரு ஒர்க்ஷாப்பில் சேர்ந்தார்.
அந்த வேலையும் பிடிக்கவில்லை. ஒரு அரிசி மண்டியில் உள்ள லாரி
ஷெட்டுக்கு போனார். அங்கு வேலை கிடைத்தது. அதாவது மூட்டை தூக்கும்
வேலை! அரிசியைச் சுமந்து, லாரியில் ஏற்றவேண்டும். 60 மூட்டையைத்
தூக்கினால் 2 ரூபாய் கூலி.
ரஜினிகாந்த் 180 மூட்டைகளை தூக்கிப்போட்டு, ஒரு நாளைக்கு 6 ரூபாய்
சம்பாதித்து விடுவார்.
ரஜினி மீது அவர் அண்ணி தாய்ப்பாசம் வைத்திருந்தார். இரவில் நேரம்
கழித்து வந்தாலும், அவருக்கு சாப்பாடு போட்டு விட்டுத்தான்
தூங்கப்போவார்.
அண்ணன் விழித்திருந்தால், ரஜினிக்கு `அர்ச்சனை' கிடைக்கும்!
>>> Part 4
|