ரஜினிகாந்த்
வாழ்க்கைப்பாதை
திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி
பெங்களூரில் பஸ்
கண்டக்டராக வேலை பார்த்த ரஜினிகாந்த், நீண்ட விடுமுறையில்
சென்னைக்கு வந்து, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, 2 ஆண்டுகள்
நடிப்புப் பயிற்சி பெற்றார்.
நடிப்பு, டைரக்ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை - வசனம்
எழுதுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதற்காக, முதன் முதலாக புனேயில்
"திரைப்படக் கல்லூரி''யை மத்திய அரசு தொடங்கியது.
அதேபோல், சென்னையில் "பிலிம் இன்ஸ்டிடிட்'' 1973-ல் தொடங்கப்பட்டது.
இதற்கு தலைவராக பி.நாகிரெட்டியும், நிர்வாகி (கரஸ்பான்டெண்ட்) ஆக
டி.வி.எஸ். ராஜவும் இருந்தனர். ராஜாராம்தாஸ் முதல்வராக இருந்தார்.
விளம்பரம்
இந்த பிலிம் `இன்ஸ்டிடிட்' விளம்பரம் ஒருநாள் பத்திரிகைகளில்
வெளியாயிற்று. நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு
முதலியவற்றில் பயிற்சி பெற, விண்ணப்பம் அனுப்பலாம் என்று அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை ரஜினி பார்த்தார். `நடிப்பு பயிற்சி பெற்றால்,
சினிமாவில் சுலபமாக நுழைந்து விடலாம்'' என்று நினைத்தார்.
விண்ணப்பம் அனுப்பினார்.
சில நாட்களில், நேர்காணலுக்கு வருமாறு கடிதம் வந்தது.
நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, சென்னைக்கு ரெயில் ஏறினார்.
குறிப்பிட்ட நேரத்தில், நேர்காணலுக்கு பிலிம் `இன்ஸ்டிடிட்'டுக்குச்
சென்றார். அங்கு சினிமா பற்றி பல கேள்விகள் கேட்டனர். கேள்விகளுக்கு
தன்னம்பிக்கையுடனும், புத்திசாலித்தனத்துடனும் பதில் சொன்னார்.
கேள்விகளை அவர் எதிர்கொண்ட முறை, ஸ்டைலாக பதில் சொன்ன விதம், தேர்வு
செய்யும் அதிகாரிகளைக் கவர்ந்தன. நடிப்பு பயிற்சி பெற ரஜினியை
அவர்கள் தேர்வு செய்தனர்.
ரஜினிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பெங்களூருக்கு திரும்பிச்
சென்றார். தந்தையிடமும், அண்ணன்களிடமும் விஷயத்தைச் சொன்னார்.
ரஜினி நடிப்புப் பயிற்சி பெறுவதில், தந்தைக்கு விருப்பம் இல்லை.
அண்ணன்கள் அரைகுறை மனதுடன் சம்மதித்தார்கள். "கண்டக்டர் வேலையை
விட்டு விடாதே! நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, நடிப்புப்
பயிற்சிக்கு போ!'' என்றார்கள்.
ரஜினியின் நண்பர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. "எதிர்காலத்தில்
பெரிய நடிகனாக வருவாய்!'' என்று வாழ்த்தினார்கள். ரெயில்
நிலையத்துக்குப் பெரும் திரளாக வந்து வழியனுப்பினார்கள்.
36 மாணவர்கள்
பிலிம் இன்ஸ்டிடிட்டில் நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக ரஜினி
உள்பட மொத்தம் 36 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 17 பேர் அமிஞ்சிக்கரையில் இருந்த அருண் ஓட்டலில் ரூம்
எடுத்து தங்கியிருந்தனர். (அருண் ஓட்டல் இடிக்கப்பட்டு இப்போது
அங்கு பிரமாண்டமான ஓட்டல் கட்டப்படுகிறது)
இவர்கள் தினமும் பஸ் மூலம் பிலிம் இன்ஸ்டிடிட்டுக்கு சென்று வருவது
வழக்கம்.
சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி வசனம் பேசவேண்டும்
என்றெல்லாம் அங்கு பயிற்சி அளித்தார்கள்.
உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை எல்லாம் அங்கு
போட்டுக்காட்டுவார்கள். சார்லஸ் லாப்டன், கிளார்க் கேபிள்,
மார்லன்பிராண்டோ, கிரிகிரிபெக் முதலான நடிகர்கள் நடித்த படங்களை
எல்லாம் ரஜினி பார்த்தார். நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து
கொண்டார்.
சினிமா உலகைச் சேர்ந்த நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், தொழில்
நுட்ப கலைஞர்கள் அடிக்கடி பிலிம் இன்ஸ்டிடிட்டுக்கு வந்து உரை
நிகழ்த்துவார்கள். பயிற்சி பெறுகிறவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு
பதில் அளிப்பார்கள். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள்.
பயிற்சி பெறுகிறவர்களை திரைப்படக் கல்லூரி நிர்வாகிகள் சினிமா
ஸ்டூடியோக்களுக்கு அழைத்துச்சென்று, அங்கு நடைபெறும்
படப்பிடிப்புகளை பார்க்கச் செய்வார்கள்.
காலம் வெகு வேகமாக ஓடியது. பயிற்சி முடிய இன்னும் 3 மாதங்களே பாக்கி.
அந்தக் காலக்கட்டம் பற்றி ரஜினி நினைவு கூறுகிறார்:-
"நாங்கள் 36 பேரும் பிலிம் சேம்பர் அலுவலகம், சபையர், புளு டைமண்ட்
தியேட்டர்கள், அமெரிக்க தூதரகம், சோவியத் கல்சுரல் சென்டர், டிரைவ்
இன் ஓட்டல்... இப்படி சுற்றிச் சுற்றி வந்தாலும், எங்களுக்கு ஒரு
தனி உலகம் இருந்தது. அதுதான் கனவு உலகம்!
சுவாரஸ்யமான வாழ்க்கை. வித்தியாசமான வாழ்க்கை. பொறுப்பு இருந்தும்
பொறுப்பில்லாதமாதிரியான போலி வாழ்க்கை. கனவு வாழ்க்கை. ஓ... அந்தக்
கனவில்தான் எத்தனை சுகம்!
காலை 10 மணிக்குக் கூடுகிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, "ஹலோ...
ஹாய்'' என்கிறோம். நகரில் ஓடும் சினிமாப் படங்களை எல்லாம்
பார்க்கிறோம். வீட்டில் இருந்து வரும் பணத்தை ஜாலியாக செலவு
பண்ணுகிறோம்.
காலம் போவது தெரியவில்லை. இதோ, படிப்பு முடியப்போகிறது!
வெகு தூரத்தில் ஒரு சொர்க்கம் தெரிகிறது. அந்த சொர்க்கம் ஏது?
அதுதான் சினிமா உலகம். அங்கே புகுந்துவிடவேண்டும்.
இன்னும் மூன்றே மாதம். படிப்பு முடிந்து விடும். அதன் பிறகு என்ன
செய்வது? எப்படி சினிமா உலகில் சான்ஸ் பிடிப்பது? எல்லோருடைய
முகத்திலும் எதிர்காலம் பற்றிய கவலை தெரிகிறது.
வீட்டில் சொன்னதைக் கேட்காமல் இன்ஸ்டிடிட்டில் சேர்ந்தோம். பயிற்சி
பெற்றோம். ஆனால் வேலைக்கு என்ன உத்திரவாதம்? மனம் குழம்புகிறது...''
- இப்படியெல்லாம் ரஜினி எண்ணினாலும், அவருடைய உள்மனதில்
தன்னம்பிக்கை சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. `வாழ்க்கையில்
வெற்றி பெறுவோம்' என்று அவருடைய இதயம் இடைவிடாமல்
கூறிக்கொண்டிருந்தது.
>>> Part
6
|