ரஜினிகாந்த்
வாழ்க்கைப்பாதை
பாலசந்தருடன் முதல் சந்திப்பு
சென்னை நடிப்பு பயிற்சி கல்லூரியில், ரஜினியின் படிப்பு
முடிவடைவதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், அங்கு டைரக்டர்
கே.பாலசந்தர் வந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்
அளிக்கப்போகிறார் என்று அறிவித்தார்கள்.
அதைக் கேட்டதும் ரஜினிக்கு உற்சாகம் தாங்கவில்லை. பாலசந்தரின் "மேஜர்
சந்திரகாந்த்'' படத்தை பார்த்தது முதல், அவருடைய
பரமரசிகராகியிருந்தார். பாலசந்தர் படங்களை ஒன்று விடாமல்
பார்க்கலானார்.
பாலசந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று அறிந்தபோது தனக்கு ஏற்பட்ட
உணர்ச்சி பற்றி ரஜினி கூறுகிறார்:
பிரமிப்பு
"பாலசந்தரின் அரங்கேற்றத்தை பார்த்தபோது, சிரித்திருக்கிறேன்;
அழுதிருக்கிறேன்; உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன்; பிரமித்துப்
போயிருக்கிறேன்.
பிறகு "அவள் ஒரு தொடர்கதை'' படத்தை தொடர்ந்து 4 தடவை பார்த்தேன்.
அவர் போட்டோவை பத்திரிகையிலே பார்த்திருந்தேன். அவரைப்பற்றி நிறைய
கேள்விப்பட்டிருந்தேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்.
அப்போதுதான், பிலிம் இன்ஸ்டிட்டிட்டுக்கு வரப்போகிறார் என்ற தகவல்
வந்தது. எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரைச் சந்திக்கும்
நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
அந்த நாளும் வந்தது. பிரின்சிபால் ராஜாராம்தாஸ் வேகமாக வந்து, "பாலசந்தர்
சார் இருபது நிமிடம் உங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். இங்கே இருபது
நிமிடம்தான் இருப்பார். ஆகவே, நிறைய கேள்விகளைக் கேட்காதீர்கள்.
நல்ல கேள்விகளை மட்டும் கேளுங்கள்'' என்று கூறினார்.
எல்லோரும் ஆவலாக காத்திருந்தோம். இரண்டு பேர் வேகமாக வந்தார்கள்.
எங்கள் பிரின்சிபால்தான் பாஸ்ட் (வேகம்) என்றால், அதைவிட `பாஸ்ட்'
பாலசந்தர் சார்! எனக்கு வேகம்தான் பிடிக்கும் - சினிமாவிலும் சரி,
வாழ்க்கையிலும் சரி! எங்க அப்பா கொடுத்த பயிற்சி அப்படி!
பாலசந்தர் சார், பார்க்க சின்னப்பையன் மாதிரி இருந்தார். நான்
அவரைப் பார்த்து அசந்து போய்விட்டேன். என் கண்கள் மட்டும் அவரையே
பார்த்துக்கொண்டிருந்தன. மனம் அவர் படங்களை நினைத்துக்
கொண்டிருந்தது.
என் பெயரைக் கேட்டார். அது எனக்குக் கேட்கவில்லை. ஏனென்றால் என்
மனம் அங்கே இல்லையே! பிறகு சட்டென்று உணர்வு வந்தது. சிலிர்த்து
எழுந்து `சிவாஜிராவ்' என்றேன்.
அவர் மெல்ல சிரித்துக் கொண்டார்.
நான் கேட்ட கேள்வி
எல்லோரும் கேள்விகள் கேட்டார்கள். நானும், ஏதாவது கேட்கவேண்டும்
என்பதற்காக ஆங்கிலத்தில் என் ஸ்டைலில் வேகமாக ஒரு கேள்வி கேட்டேன்.
"ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள்
எதிர்பார்க்கிறீர்கள்?'' என்பதுதான் நான் கேட்ட கேள்விக்கு தமிழ்
அர்த்தம்.
நான் வேகமாகக் கேட்டதால், அவருக்குப் புரியவில்லை.
"சாரி. புரியவில்லை'' என்றார்.
நான் நிறுத்தி - நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
பாலசந்தர் சிரித்துக்கொண்டே, "நடிகன் வெளியே நடிக்கக்கூடாது''
என்றார்.
இந்தப் பதிலைக் கூறிவிட்டு, மீண்டும் என் பெயரைக் கேட்டார். "சிவாஜிராவ்''
என்று கூறினேன்.
20 நிமிடங்கள் முடிந்தன. பாலசந்தர் புறப்பட்டார். அவர் என்னை நோக்கி
கையை நீட்டினார். நானும் கை நீட்டினேன். அவர் கையில் என் கை! அவர்
கையில்தான் என்ன பிடிப்பு! அருகிலிருந்து பார்க்கும்போது எவ்வளவு
அழகாக இருக்கிறார்!
எங்கள் ஆசிரியர் திரு. கோபாலி அப்போது வந்தார். என்னை அவருக்கு
ரொம்பப் பிடிக்கும். "சார்! உங்கப்படம் என்றால் இவனுக்கு உயிர்.
அவள் ஒரு தொடர்கதையை 6 தடவை பார்த்திருக்கிறான்!'' என்று அவர்
பாலசந்தரிடம் கூறினார்.
பாலசந்தர் சிரித்தபடி, "உனக்கு தமிழ் தெரியுமா?'' என்று கேட்டார்.
"கொஞ்சம் கொஞ்சம் தெரியும்'' என்று தமிழில் சொன்னேன்.
"உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது!''
என்று பாலசந்தர் சார் சொன்னார்.
பிறகு, "நான் வருகிறேன்'' என்று விடைபெற்றுக்கொண்டார். கோபாலியுடன்
பேசிக்கொண்டே காருக்குச் சென்றார். "எம்.எஸ்.எல் 363'' எண் காரில்
ஏறி புறப்பட்டுச் சென்றார்.
அவர் போனதும் கோபாலி என்னிடம் வந்தார். "பாலசந்தர் சார் உன்னை
பார்க்க விரும்புகிறார்'' என்றார்.
எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. "பாலசந்தர் சார் எதற்காக என்னை
பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறதோ'' என்று மனம்
குறுகுறுத்தது.
பாலசந்தர் சாரின் அழைப்பு வரும் என்று ஆவலோடு நாட்களை எண்ணிக்
கொண்டிருந்தேன். 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அழைப்பு ஏதும்
வரவில்லை.
முன்பு இருந்த உற்சாகம் இப்போது இல்லை. எல்லோரும் சொல்கிற மாதிரி,
ஒரு பேச்சுக்காக அப்படி சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். அந்த
விஷயத்தை அத்துடன் மறக்க முயன்றேன்.''
இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
அவசர அழைப்பு
இந்த சமயத்தில் பெங்களூரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது.
"உடனே புறப்பட்டு வா!'' என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார்.
என்றைக்கும் இவ்வளவு அவசரமாக ரஜினியை அவர் அழைத்தது இல்லை. ஆகவே,
என்னவோ, ஏதோ என்று எண்ணியபடி, பிருந்தாவன் எக்ஸ் பிரசில்
பெங்களூருக்குப் புறப்பட்டார்.
>>> Part 7
|