ரஜினிகாந்த்
வாழ்க்கைப்பாதை
கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''
நடிப்பு பயிற்சி பெற்றும்
நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் கண்டக்டர் வேலையில்
சேரும் எண்ணத்துடன் பெங்களூருக்கு ரெயிலில் ஏறினார், ரஜினி.
ரெயிலில், ரஜினியின் எதிரே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். "உங்களை
எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கே'' என்றார், அவர்.
ரஜினி சிரித்துக்கொண்டாரே தவிர, பதில் சொல்லவில்லை.
பெரியவர் சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு, ஏதோ
நினைவுக்கு வந்தவராக, "நீங்கள் கண்டக்டர்தானே! ஜெய்நகர் பஸ்சில்
பார்த்திருக்கிறேன்'' என்றார்.
"ஆமாம்'' என்றார், ரஜினி.
பெரியவர் தொடர்ந்து சொன்னார்:
"என் மூத்த பையன் பி.எஸ்.சி. முதல் வகுப்பில் பாஸ் செய்தவன். நான்கு
வருடமாக வேலைக்கு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. கடைசியில், பஸ்
கண்டக்டர் வேலைக்கு மனு போட்டோம். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால்,
வேலை வாங்கித் தருவதாக ஒரு பெரிய அதிகாரி கூறியிருக்கிறார். அந்த
வேலை நல்லபடியாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, திருப்பதிக்குச்
சென்று வெங்கடாசலபதியிடம் வேண்டிக்கொண்டு இப்போது ஊருக்குத்
திரும்பிக் கொண்டிருக்கிறேன்.''
பெரியவர் இப்படிக் கூறியதைக் கேட்டு, ரஜினிக்கு ஆச்சரியம்
தாங்கவில்லை.
`பி.எஸ்.சி. படித்த பட்டதாரிக்கு கண்டக்டர் வேலை கிடைக்க வேண்டும்
என்று இவ்வளவு தூரம் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வேலையை
மிகச் சாதாரணமானதாக நினைத்துக் கொண்டிருந்தோமே! கண்டக்டர் வேலை
எவ்வளவு பெரிய வேலை!' என்று நினைத்தார்.
"நல்ல வேளையாக கண்டக்டர் வேலையை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து
கண்டக்டர் வேலை பார்த்து, பிழைத்துக் கொள்ளலாம்'' என்று மகிழ்ச்சி
அடைந்தார்.
ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். ஆனந்தமாக புகை விட்டார்.
ரெயில் பெங்களூர் போய்ச் சேர்ந்தது.
ரெயிலில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், வீட்டுக்குப் போவதற்காக
36-ம் நெம்பர் பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கண்டக்டராக இருந்தவர் புட்ராஜ். ரஜினியின் நண்பர். இருவரும்
ஒரே நேரத்தில்தான் கண்டக்டர் வேலையில் சேர்ந்தார்கள்.
ரஜினியைப் பார்த்த அவர் வியப்பும், திகைப்பும் அடைந்தார். "என்ன
சிவாஜி! எப்போது பெங்களூருக்கு வந்தாய்?'' என்று விசாரித்தார்.
"இப்போதுதான் ரெயிலில் இருந்து இறங்கினேன். வீட்டுக்குத்தான்
போய்க்கொண்டிருக்கிறேன்'' என்று ரஜினி பதிலளித்தார்.
"நடிப்பு பயிற்சி எல்லாம் எப்படி இருக்கிறது?''
"பயிற்சி எல்லாம் முடிந்து விட்டது. இதுவரை பட வாய்ப்பு எதுவும்
வரவில்லை.''
"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?'' என்று தயக்கத்துடன் புட்ராஜ்
கேட்டார்.
"என்ன விஷயம்? ஒன்றும் தெரியாதே!'' என்று ரஜினி கூறினார்.
புட்ராஜ் கொஞ்ச நேரம் பேசவில்லை. பிறகு மனதைத் திடப்படுத்திக்கொண்டு,
"போன வாரம் 12 கண்டக்டர்களை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள். அதில்
நீயும் ஒண்ணு. இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்ததால்,
மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்'' என்றார்.
அந்த பஸ் மட்டுமல்ல, உலகமே திசை மாறி சுழல்வது போல இருந்தது,
ரஜினிக்கு.
"கவலைப்படாதே. நீ பெற்ற நடிப்பு பயிற்சி, உன்னை கைவிட்டு விடாது''
என்று ஆறுதல் கூறினார், புட்ராஜ்.
சோர்வுடன் வீட்டுக்குச் சென்றார், ரஜினி.
டிஸ்மிஸ் ஆன செய்தியை சொல்வதற்காகத்தான் அவசரமாக
அழைத்திருக்கிறார்கள் என்பதை ரஜினி தெரிந்து கொண்டார்.
அன்று இருந்த மன நிலை பற்றி ரஜினி எழுதியிருப்பதாவது:-
"நடிப்பு பயிற்சி முடிந்ததும், பட அதிபர்கள் என்னை ஒப்பந்தம் செய்ய
கி வரிசையில் நிற்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது
பலிக்கவில்லை.
கண்டக்டர் வேலை பார்க்கலாம் என்று ஊர் திரும்பினால், அந்த வேலையும்
போய்விட்டது. ரொம்பவும் சோர்ந்து போய்விட்டேன், வாழ்க்கையில் முதல்
தடவையாக.
பஸ் டெப்போவுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை பரிதாபமாகப்
பார்த்தார்கள். பத்து குண்டுகள் பாய்ந்தாலும் தைரியமாகத் தாங்கிக்
கொள்வேன். ஆனால் பரிதாபத்தோடு பார்க்கிற ஒரு பார்வையைக்கூட என்னால்
தாங்கிக்கொள்ள முடியாது.
முன்பெல்லாம் என்னை புகழ்ந்து பேசியவர்கள் இப்போது, "நடிகனாகவேண்டும்
என்று மெட்ராஸ் போனான். இவன் மூஞ்சிக்கு நடிகனாக முடியுமா? யார் -
யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கணும்!'' என்று என் காதுபடவே
பேசினார்கள்.
அப்போதே நான் முடிவு செய்தேன். `நம்மிடம் இருக்கும் ஒரே ஆஸ்தி -
தன்மானம். மீண்டும் சென்னைக்குத் திரும்பவேண்டும். நடிகனாகாமல்
பெங்களூருக்குத் திரும்பக்கூடாது!' என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.
அன்று இரவே சென்னைக்கு ரெயில் ஏறினேன்.''
இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
>>> Part 8
|