ரஜினிகாந்த்
வாழ்க்கைப்பாதை
3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர்
`தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'
பெங்களூரில் இருந்து சென்னைக்குப்
புறப்பட்ட மெயில் ரெயிலில் ரஜினி உட்கார்ந்திருந்தார். ஜன்னல்
வழியாக தூரத்தில் தெரிந்த சூனிய வெளியை அவர் கண்கள் உற்று நோக்கிக்
கொண்டிருந்தன.
எதிர்கால சூப்பர் ஸ்டாரை ஏற்றிச் செல்கிறோம் என்று அறியாத அந்த
ரெயில், வெகுவேகமாக ஓடத்தொடங்கியது.
"நேரமாச்சு. தூங்கவேண்டும். விளக்கை அணையுங்கள் சார்!''
- அருகில் அமர்ந்திருந்தவர் குரல் எழுப்பினார்.
ரஜினி, விளக்கை அணைத்துவிட்டு படுத்தார். தூக்கம் வரவில்லை.
எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, அவர் தூக்கத்தை விரட்டிக்
கொண்டிருந்தது.
மறுநாள். பெங்களூர் மெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில்
வந்து நின்றது.
ஒருவித புத்துணர்ச்சியுடன் ரெயிலில் இருந்து இறங்கினார், ரஜினி. ஏதோ
பிறந்த ஊருக்கு வந்தது போன்ற உணர்வு. `இனிமேல் சென்னைதான் நம்ம
சொந்த ஊர்' என்று மனதில் எண்ணியவராய், சென்னை மண்ணில் காலடி
வைத்தார்.
அறையில் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களைச் சந்தித்து, நடந்ததைச்
சொன்னார். "சிவாஜி! கவலைப்படாதே. எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையோடு
இரு. கடவுள் கைவிடமாட்டார்'' என்று நண்பர்கள் ஆறுதல் கூறினார்கள்.
பாலசந்தர் அழைப்பு
நாட்கள் ஓடின. ஒரு நாள் மாலை ஐந்து மணி. ரஜினி கட்டிலில்
படுத்திருந்தார். `இன்னும் எத்தனை நாட்கள் இப்படி வேலை வெட்டி
இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பது' என்ற எண்ணம் மனதை வாட்டியது.
அப்போது, சத்தீஷ் என்ற நண்பர் ஓடிவந்தார்.
"சிவாஜி! பாலசந்தர் சார் ஆபீசில் இருந்து, அசோசியேட் டைரக்டர் சர்மா
வந்திருக்கிறார். பாலசந்தர் சார், உன்னை உடனே அழைத்து வரச்
சொன்னாராம்!'' என்றார், மகிச்சியுடன்.
ரஜினிகாந்த் துள்ளி எழுந்தார். அவருடைய சோர்வெல்லாம் பறந்துவிட்டது.
பாத்ரூமுக்கு ஓடினார். ஷேவ் செய்து கொண்டு, குளித்தார். அவசரம்
அவசரமாக டிரஸ் செய்து கொண்டு கார் முன் போய் நின்றார்.
சர்மா, ரஜினியை காரில் ஏற்றிக்கொண்டார்.
கார் `விர்' என்று கிளம்பியது.
அதன்பின் என்ன நடந்தது?
ரஜினியே சொல்கிறார்:
"கார் சுற்றி வளைத்து, ஒரு கட்டிடம் முன்னால் போய் நின்றது. அங்கே
`கலாகேந்திரா' என்ற போர்டு இருந்தது. இந்த பேனரை படங்களில்
பார்த்திருக்கிறேன்.
உள்ளே போனேன். ஹாலில் உட்காரச் சொன்னார்கள். சோபாவில் உட்கார்ந்தேன்.
அங்கு ஷோ கேசில், "அரங்கேற்றம்'', "அவள் ஒரு தொடர்கதை'', "இருகோடுகள்''
போன்ற படங்களின் வெற்றி விழா ஷீல்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
உள்ளே இருந்த ரூமில் இருந்து, பாலசந்தர் சார் சிரிக்கிற சப்தம்,
பேசுகிற சப்தம் அவ்வப்போது கேட்டது.
`காபி வேணுமா? டீ வேணுமா?' என்று கேட்டார்கள். சாப்பிடலாம் என்று
மனசுக்குள் தோன்றினாலும், `வேண்டாம்' என்று சொன்னேன்.
ஆனால், காபி கொண்டு வந்து வைத்தார்கள்.
அதே சமயத்தில் டைரக்டர் என்னை கூப்பிட்டார்.
காபியை தியாகம் செய்துவிட்டு உள்ளே போனேன்.
பாலசந்தர் சார் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இரு கை கூப்பி
வணங்கினேன். அவர் கை நீட்டி, என்னுடன் கை குலுக்கினார்.
"உட்காருங்கள்'' என்றார். நான் உட்காராமல் நின்று கொண்டே இருந்தேன்.
வற்புறுத்தி, உட்காரச் சொன்னார். நாற்காலியின் விளிம்பில்
உட்கார்ந்தேன்.
அவர் என்னைக் கூர்ந்து பார்த்தார்.
எனக்கு அப்போது தமிழும் சரியாகத் தெரியாது; ஆங்கிலமும் சரியாகத்
தெரியாது. எந்த மொழியில் பேசுவது என்று எனக்குக் குழப்பம்.
கொஞ்ச நேரம் ஓடியது.
`என்ன படிச்சிருக்கீங்க?' என்று பாலசந்தர் கேட்டார்.
`எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்!'' என்றேன்.
இது மாதிரி வேறு சில கேள்விகள் கேட்ட பின், `நான் இதுவரை உங்கள்
நடிப்பைப் பார்த்ததில்லை. ஏதாவது நடித்துக் காட்டுங்கள்!' என்றார்.
`எனக்குத் தமிழ் தெரியாதே!' என்றேன்.
`பரவாயில்லை. கன்னடத்தில் பண்ணுங்க!' என்றார்.
கிரீஷ்கர்னாட் எழுதிய "துக்ளக்'' நாடகத்தில் இருந்து ஒரு சீனை
நடித்துக் காட்டினேன்.
பாலசந்தர் சாருக்கு மிகுந்த சந்தோஷம். `ரொம்ப நல்லா இருக்கு' என்று
பாராட்டினார்.
`எங்கேயோ கொண்டு போவேன்!'
பிறகு பாலசந்தர் சார் சொன்னார்:
`இப்போது, அபூர்வ ராகங்கள்' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல் என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல்.
அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன்.
அடுத்து, `அவள் ஒரு தொடர்கதை' படத்தை தெலுங்கில் எடுத்துக்
கொண்டிருக்கிறேன். தமிழில் ஜெய்கணேஷ் நடித்த ரோல் உங்களுக்கு!''
- இவ்வாறு கூறிய பாலசந்தர், "உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?'' என்று
கேட்டார்.
எனக்கு அப்போது தெலுங்கில் சில வார்த்தைகள்தான் தெரியும். என்றாலும்
துணிந்து, "தெரியும்!'' என்றேன்.
பாலசந்தர் தொடர்ந்து, "மூன்றாவது ஒரு கதை இருக்கு. ("மூன்று
முடிச்சு''). அதில் ஆண்டி ஹீரோ ரோலை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று
இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் மட்டும் தமிழை நன்றாகக்
கற்றுக் கொண்டால், உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவேன்''
என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னார்.
அதைக்கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன். ஆகாயத்தில் பறப்பது போன்ற
உணர்ச்சி.
"சரி. நீங்கள் போகலாம். விலாசம், போன் நெம்பர் எல்லாம் கொடுத்து
விட்டுப் போங்கள். படப்பிடிப்பின்போது உங்களுக்கு சொல்லி
அனுப்புகிறேன்'' என்றார், பாலசந்தர்.
>>> Part
9
|