ரஜினிகாந்த்
வாழ்க்கைப்பாதை
"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு
ரஜினிகாந்த் நடித்த முதல் படமான "அபூர்வ
ராகங்கள்'' படப்பிடிப்பு, அவருடைய அதிர்ஷ்ட நாளான வியாழக்கிழமை
அன்று நடந்தது.
3 படங்களில் நடிக்க வைக்கப் போவதாக டைரக்டர் கே.பாலசந்தர் கூறியதால்
மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்ற ரஜினிகாந்த், நேராக
டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்றார். அவரிடம் 20 ரூபாய்
இருந்தது.
ஓட்டலில் இருந்த நண்பர்களிடம் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் ஆனந்தக்
கூத்தாடினார்கள். எல்லோருக்கும் சுவிட், மசாலா தோசை, காபி வாங்கிக்
கொடுத்தார்.
`தமிழ் கற்றுக் கொண்டால், உங்களை எங்கோ கொண்டுபோய் விட்டு விடுவேன்'
என்று பாலசந்தர் சொன்னது, ரஜினியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
அன்று முதல், தமிழ் படிக்க ஆரம்பித்தார். தமிழ்ப் பத்திரிகைகளில்
வரும் செய்திகள், கதைகளை எல்லாம் படித்தார். ஒவ்வொரு வார்த்தையையும்
எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து
கொண்டார்.
ஒருநாள் - ஞாயிற்றுக்கிழமை. கலாகேந்திரா அலுவலகத்தில் இருந்து
ரஜினிக்கு போன் வந்தது.
"அபூர்வ ராகங்கள் படத்தின் ஷூட்டிங் நாளைக்கு நடக்கிறது. உங்கள்
சம்பந்தப்பட்ட காட்சிகளை பாலசந்தர் எடுக்கப்போகிறார்.
ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.
ரஜினிக்கு ஏக சந்தோஷம். இருந்தாலும் ஒரு நெருடல். அவருக்கு
வியாழக்கிழமைதான் அதிர்ஷ்ட நாள். முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம்
வியாழக்கிழமைகளில்தான் நடந்து வந்திருக்கின்றன. `முதல் நாள்
படப்பிடிப்பு வியாழக்கிழமை இருக்கக் கூடாதா?' என்று எண்ணினார்.
ஆனால், படப்பிடிப்புக்காக முதல் முதலாக அழைப்பவர்களிடம் இதையெல்லாம்
கூறமுடியுமா?
எனவே, அவர்கள் சொன்னபடியே திங்கட்கிழமை ஸ்டூடியோவுக்குப் போனார்.
ஆனால், அன்று அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை. மறுநாளும் போனார்.
அன்றும், அதற்கு அடுத்த நாளும் கூட படப்பிடிப்பு இல்லை.
கடைசியில், வியாழக்கிழமையன்று அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப்
படமாக்கினார், பாலசந்தர்.
தான் விரும்பியபடியே, முதல் நாள் ஷூட்டிங் தானாகவே வியாழக்கிழமை
நடந்ததில், ரஜினிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
முதலில் படமாக்கப்பட்ட காட்சி:
ஒரு பெரிய பங்களா. அதற்கு ஒரு பெரிய கதவு. அதைத் திறந்துகொண்டு,
தாடி-மீசையுடன் உள்ளே நுழைகிறார், ரஜினி.
"பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்!'' என்று கமலஹாசனிடம்
கூறுகிறார்.
ரஜினி பேசிய முதல் வசனம் இதுதான்.
படப்பிடிப்புக்கு முன், இந்த வசனத்தை சுமார் ஆயிரம் தடவை பேசிப்
பேசி ஒத்திகை பார்த்திருந்தார்!
முதல் நாள் அனுபவம் பற்றி ரஜினி கூறியிருப்பதாவது:-
`என் முகம் எல்லாம் கம் தடவி, தாடியை ஒட்ட வைத்திருந்தார்கள்.
சிரிக்கவும் முடியாது. அழவும் முடியாது.
சுமார் 20 கிலோ எடையுள்ள கோட்டை அணிந்திருந்தேன். அதைத் துவைத்து
எத்தனை வருடம் இருக்குமோ தெரியவில்லை! ஒரே வியர்வை நாற்றம். தாங்க
முடியாத அரிப்பு!
"கிளாப்!'' என்று கத்தினார், டைரக்டர் சார்.
கிளாப் அடிக்கும் உதவி டைரக்டர் வெள்ளைக்காரன் மாதிரி இருப்பார்.
அதனால் அவரை `ஜப்பான்' என்று எல்லோரும் செல்லமாக கூப்பிடுவார்கள்.
ஜப்பான் என் முன்னால் கிளாப் அடித்து விட்டு ஓடினார். எனக்கு ஒரே
பதற்றம். எப்படியோ டயலாக்கை சொல்லிவிட்டேன். உண்மையில் உளறினேன்
என்பதுதான் பொருந்தும்.
நான் கமலைப் பார்த்துத்தான் இந்த வசனத்தைச் சொன்னேன். ஆனால், சற்று
தூரத்தில் நின்று கொண்டிருந்த பாலசந்தர் சார்தான் என் கண்ணுக்குத்
தெரிந்தார்.
நான் கேமராவைக் கண்டோ, அங்கிருந்த கூட்டத்தைக் கண்டோ பயப்படவில்லை.
என் பயம் எல்லாம் பாலசந்தர் சார் கிட்டதான். அவருடைய பர்சனாலிட்டி,
ஜென்டில்னஸ், அவருடைய அப்பியரன்ஸ் எல்லாம் சேர்ந்து, அவரிடம் எனக்கு
ஒருவித பயத்தை ஏற்படுத்தி இருந்தன.
பாலசந்தர் சாரைப் பார்த்தேன். நான் அவ்வளவு சரியா செய்யவில்லை
என்பதை, அவர் முகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.
அருகே இருந்த சுவர் பக்கம் ஓடினேன். ஒரு சிகரெட்டை எடுத்து, சுருள்
சுருளாகப் புகை விட்டேன்.
"சிவாஜி!'' என்று குரல் கேட்டது. நான் ஓடிப்போய் கேமரா முன்
நின்றேன். என் சம்பந்தப்பட்ட அடுத்த காட்சியை படமாக்கினார்,
பாலசந்தர் சார்.
மேலேயிருந்து கமல் என்னிடம் ஓடிவருகிறார். "என்ன சொன்னீங்க?'' என்று
கேட்கிறார்.
"நான் பைரவியோட புருஷன்'' என்று மீண்டும் சொல்கிறேன்.
கமல் என்னை இழுத்து மோட்டார் பைக்கில் உட்கார வைத்து, பைக்கை
கேட்டுக்கு வெளியே ஓட்டிச் செல்கிறார்.
இந்தக்காட்சி படமாக்கப்பட்டபோது, கமல் நடிப்பைப் பார்த்து நான்
பிரமித்துப் போய்விட்டேன். `நாம் இப்படி ஆவது எப்போது?' என்று
நினைத்தேன்.
இதே படத்துக்காக, நாகேஷ் சாரோடு ஒரு சீனில் நடித்தேன்.
அந்தக் காட்சி படமாக்கப்பட்டதும், நாகேஷ் என்னிடம் வந்தார். `உங்களுக்கு
நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்று கூறியபடி என் முதுகைத் தட்டிக்
கொடுத்துவிட்டுப் போனார்.
அவர் கூறிய வார்த்தை அப்போது மட்டும் அல்ல, இப்போதுகூட டானிக்தான்!''
இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
>>> Part 10
|