`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்'
ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்
"யார் யாருக்கு எந்த சமயத்தில் உதவி செய்ய வேண்டுமோ, அதை சரியாக
செய்பவர் ரஜினி'' என்று பட அதிபர் கலைஞானம் கூறினார்.
பட உலகில், பாதிப்புக்கு உள்ளான 8 பேர்களுக்கு உதவுவதற்காக,
அவர்களையே பட முதலாளிகள் ஆக்கி, "அருணாச்சலம்'' என்ற படத்தை
ரஜினிகாந்த் தயாரித்தார்.
அந்த 8 பேர்களில் ஒருவர் கலைஞானம். ஆரம்ப காலத்தில் வில்லன்
வேடங்களில் நடித்து வந்த ரஜினியை, முதன் முதலாக "பைரவி'' படத்தில்
கதாநாயகனாக நடிக்க வைத்தவர்.
அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:-
சரியான நேரத்தில் உதவி
"சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி சொல்வதென்றால் அது மகாபாரதம் போல்
வளர்ந்து கொண்டே போகும். எனவே ஒரு சிறு துளியை மட்டும் சொல்ல
விரும்புகிறேன்.
"ராஜரிஷி'' என்ற படத்தை எடுத்து லட்சக்கணக்கில் நஷ்டப்பட்டுப்
போயிருந்த எனக்கு தனது "அருணாச்சலம்'' படத்தின் மூலம் உதவினார்.
இந்தப்படம் மூலம் அவரிடம் உதவி பெற்ற எட்டுப் பேரில் நானும் ஒருவன்.
யார் யாருக்கு எந்த சமயத்தில் உதவி செய்ய வேண்டுமோ அதனை சரியாகச்
செய்து வருகிறார். கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும் என்பார்கள்.
அது முற்றிலும் உண்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்
சின்னப்பதேவர். வாழ்ந்து கொண்டிருப்பவர் `சூப்பர் ஸ்டார்'
ரஜினிகாந்த்.
இறைவன் கொடுத்த வரம்
ஒருவரின் வளர்ச்சிக்கு யாரும் தடையாக இருக்க முடியாது. அதுமாதிரி
ஒருவருக்கு யாரும் வாழ்வு கொடுத்து விடவும் முடியாது. நடக்கப்போகும்
அனைத்துக்கும் இறைவனே காரணகர்த்தா. இதுவே என் நம்பிக்கை.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், என் மூலம் ரஜினிக்கு இறைவன் `ஹீரோ'
அந்தஸ்து கொடுத்தானே தவிர, அதற்குக் காரணம் நான் அல்ல. இதற்கு
இறைவன் மூலம் நான் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறேன்.
அவ்வளவுதான்.
"ஆறுபுஷ்பங்கள்'' படத்தில் ரஜினி இரண்டாவது ஹீரோவாக நடித்துக்
கொண்டிருந்தார். அந்தப் படத்துக்கு நான்தான் கதை வசனம். பழக
நேர்ந்த சில நாட்களிலேயே நண்பர்கள் ஆனோம். எந்தவொரு விஷயத்திலும்
அவரது உயர்ந்த சிந்தனை என்னை அவர் பக்கம் அதிகமாய் ஈர்த்தது. அவர்
ஒரு நல்ல நடிகராக வருவார் என்று நினைத்தேன். உலகமே கொண்டாடும்
சூப்பர் ஸ்டாராக வருவார் என்பதை நான் உள்பட யாருமே
எதிர்பார்க்கவில்லை. அவரின் நல்ல மனதுதான் அப்படியொரு இடத்தில்
அவரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
என் "பைரவி'' கதைக்கு ரஜினி பொருத்தமாக இருந்தார். எனவே
நாயகனாக்கினேன். படம் மட்டுமின்றி, ஹீரோவாக ரஜினியும் வென்றார்.
பைரவி படம் இன்றளவும் எனக்கு பேரும் புகழும் தந்து கொண்டிருக்கிறது.
மகிழ்ச்சிக்கு காரணம்
ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நேரத்தில் ஒருநாள் ஏவி.எம்.
ஸ்டூடியோவில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டோம். அன்புடன்
என்னை நலம் விசாரித்தவர், அடுத்து என்னிடம் கேட்ட கேள்விதான்
முக்கியமானது. "நீங்கள் எப்போதும் சந்தோஷமாக காணப்படுகிறீர்களே, அது
எப்படி?'' என்று கேட்டார்.
அவருக்கு நான் இப்படி பதில் சொன்னேன்: "ரெயில் பெட்டிகளில் ஒரு
வாசகம் எழுதியிருப்பதை நீங்களும் படித்திருப்பீர்கள். `லக்கேஜை
எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு சுகமாக இருக்கும் உங்கள்
பயணம்'' என்ற அந்த வாசகம் என் விஷயத்திலும் பொருந்தும். எல்லாப்
பிரச்சினைகளையும் நம் தலைமேல் தூக்கி சுமக்காமல் முடிந்த மட்டும்
குறைத்துக் கொண்டால் நாம் சந்தோஷமாக வாழமுடியும்'' என்றேன்.
இந்தப் பதிலுக்கு அவர் அமைதியாக இருந்தார். சிந்திக்கிறார் என்பதை
உணர முடிந்தது. இரண்டு நிமிட இடைவெளியில் மறுபடியும் பேசினார். "கலைஞானம்
சார்! நான் வளர வளர பெரும் புள்ளிகள் என்னை சூழ்ந்து கொண்டார்கள்.
இதனால் சிலரை என்னால் கவனிக்க முடியவில்லை'' என்று வேதனை கலந்த
குரலில் சொன்னார். அதன் உள்ளர்த்தம் எனக்குத்தான் தெரியும்.
நடந்துவந்த பாதையை மறக்காத ரஜினி, தான் நடந்து வந்த பாதையில்
இளைப்பாற உட்கார்ந்த கருங்கல்லைக் கூட நினைத்துப் பார்க்கிறார்.
இந்தக் குணம்தான் எதிர்ப்பட்ட அத்தனை சோதனைகளையும் தாண்டி அவரை
புகழின் சிகரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது.
ரஜினிகாந்த் நடிக்க வந்து 25-ம் ஆண்டு விழா கொண்டாடியபோது ரஜினியின்
மனைவி லதா, இயக்குனர் கே.பாலசந்தரையும், என்னையும் மறக்காமல் நினைவு
கூர்ந்து நன்றியைத் தெரிவித்தார். அதை எனக்குக் கிடைத்த சிறந்த
பரிசாக ஏற்று மகிழ்ச்சிப் பெருக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.''
இவ்வாறு கலைஞானம் கூறினார்.
("படையப்பா'' மகத்தான வெற்றி - நாளை)
ரஜினி `சுயதரிசனம்'
"புத்திசாலிகள்
மீது எனக்கு கோபமில்லை. ஆனால் வருத்தம் உண்டு. வெறும் படிப்பை
வைத்துக்கொண்டு, இப்படி வாழ்க்கையை வீணாக்குகிறார்களே என்று
வருத்தப்படுவேன். வெறும் புத்தகப்படிப்பு போதவே போதாது. அனுபவம்தான்
பெரிய படிப்பு.''
- ரஜினிகாந்த்.
>>> Part
102
|