ரஜினி -
கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில்
மகத்தான வெற்றிப்படம் "படையப்பா''
சென்னையில் 30 வாரம் ஓடியது
"முத்து'' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்க
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய "படையப்பா'' மகத்தான வெற்றிப்படமாக
அமைந்தது. சென்னையில் 210 நாட்கள் (30 வாரம்) ஓடி, வசூலில் சாதனை
புரிந்தது.
"முத்து'' படத்தை அடுத்து ரஜினி நடித்த படம் "அருணாச்சலம்.'' இதை
சுந்தர் சி.டைரக்ட் செய்தார்.
படையப்பா
இதற்குப்பிறகு ரஜினி நடித்த படம் "படையப்பா.''
1997 தமிழ்ப்புத்தாண்டுக்கு "அருணாச்சலம்'' வெளிவந்தது. அதற்கு
இரண்டு ஆண்டுகள் கழித்து, 1999 தமிழ்ப்புத்தாண்டுக்கு "படையப்பா''
வெளிவந்தது.
ரஜினியின் வெற்றி வரலாற்றில் வைர மகுடம் சூட்டிக்கொண்ட படம்
படையப்பா. தமிழ் சினிமா வரலாற்றில் அதுவரை இருந்த அத்தனை வசூல்
ரெக்கார்டையும் தகர்த்த படம் என்ற பெருமையும் இந்தப் படையப்பாவுக்கு
உண்டு.
ரஜினி, "அருணாசலா சினி கிரியேஷன்ஸ்'' என்ற பேனரில் சொந்தமாகத்
தயாரித்த படம் இது.
இந்தப் படத்துக்கு கதையும் ரஜினிதான். கதை இந்த மாதிரி இருக்க
வேண்டும் என்று அவரே யோசித்து உருவாக்கிய கதை. இதை டைரக்டர்
கே.எஸ்.ரவிக்குமாருடன் ஆலோசனை செய்து முழுக்கதையையும் உருவாக்கினார்.
அப்போது தமிழில் சற்று இடைவேளை விட்டிருந்த ரம்யா கிருஷ்ணனை
தேடிப்பிடித்து `நீலாம்பரி' என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார் ரஜினி.
ரஜினியின் அப்பாவாக, கவுரவ வேடத்தில் சிவாஜி நடித்தார்.
கதை
கோடீசுவர சிவாஜியை அவரது தம்பி குடும்பம் ஏமாற்றி சொத்துக்களை
பறித்துக்கொள்கிறது. வேதனை தாங்காமல் சிவாஜி உயிர் துறக்கிறார்.
சொத்துக்கள் போனதை விடவும் அப்பாவின் மரணம் மகன் படையப்பாவை (ரஜினி)
அதிகம் பாதிக்கிறது. வாழ்வில் உயர்ந்து காட்டி உறவினர்களுக்கு முன்
இமயமாக நிற்க விரும்புகிறார். அதற்காக கடினமாக உழைக்கிறார். உழைப்பு
கைகொடுக்க, கோடீஸ்வரர் ஆகிறார்.
படையப்பா மீது உறவுக்காரப்பெண் நீலாம்பரிக்கு (ரம்யாகிருஷ்ணன்) ஒரு
கண். அவளும் பணக்காரிதான். ஆனால் அவளது பிறவிக்குணமே, தான்
ஆசைப்பட்டதை அடைந்து விடவேண்டும் என்பதுதான். படையப்பா மீது
ஆசைப்பட்ட அவள், அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள்.
படையப்பாவுக்கோ நீலாம்பரியின் வீட்டு வேலைக்காரி வசந்துரா (சவுந்தர்யா)
மீது காதல். இது தெரியாமல், படையப்பா வீட்டுக்கு `மாப்பிள்ளை'
கேட்க தன் அப்பாவை (ராதாரவி) அனுப்புகிறாள், நீலாம்பரி.
ஆனால், நீலாம்பரியின் கண்ணெதிரிலேயே அவளது வேலைக்காரி
வசந்துராவுக்கு `பரிசம்' போடப்படுகிறது. திருமணமும் நடக்கிறது.
நீலாம்பரி சபதம்
தன்னை நிராகரித்து விட்டு தன் வீட்டு வேலைக்காரியை மணந்த படையப்பாவை
பழி வாங்க முடிவு செய்கிறாள், நீலாம்பரி. 18 ஆண்டுகளாக ஒரே
இருட்டறைக்குள் அடைந்து கொண்டு வெளியுலகுக்கே தெரியாமல் தன்னை
மறைத்துக் கொள்கிறாள்.
காலம் ஓடுகிறது. படையப்பாவின் மகள், நீலாம்பரியின் அண்ணன் மகனை
காதலிக்கும் விஷயம் நீலாம்பரியின் காதுக்கு சேருகிறது. படையப்பாவை
பழிவாங்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் வேறில்லை என்று எண்ணும் நீலாம்பரி,
இருட்டறை வாசத்தில் இருந்து வெளி வருகிறாள். படையப்பாவின் மகள்
காதலுக்கு தனது அண்ணன் மகன் மூலமே தடை ஏற்படுத்துகிறாள். இதனால்
மகளின் திருமணம் நடக்கவேண்டி படையப்பா தனது காலில் விழுவார் என்பது
அவள் எதிர்பார்ப்பு.
இதை எதிர்பார்த்த படையப்பா, தனது சாமர்த்தியத்தால் நீலாம்பரியின்
அண்ணன் மகனை தன் வசப்படுத்துகிறார். தன் மகள் மீது உண்மையிலேயே
அவனுக்கு காதல் இருப்பதையும், அத்தை நீலாம்பரியால் அது
தடுக்கப்பட்டதையும் புரிந்து கொண்டு காதல் ஜோடிகளை சேர்த்து
வைக்கிறார்.
இப்போதும் படையப்பாவால் தனக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக கருதும்
நீலாம்பரி, திருமணம் நடக்கும் இடத்துக்கே வந்து தன்னைத்தானே
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
"அதிகமா ஆசைப்பட்ட ஆம்பளையும், அதிகமா கோபப்பட்ட பொம்பளையும் நல்லா
வாழ்ந்ததா சரித்திரம் இல்லை'' என்று ரஜினி பேசும் வசனம் படத்தில்
பெரிய அளவில் பேசப்பட்டது.
ரஜினியுடன் சவுந்தர்யா பாடும் "சுத்தி சுத்தி வந்தீக'' பாட்டு காதல்
இளமை ராகம்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம் பெற்ற மற்ற பாடல்களான "என் பேரு
படையப்பா'', "வெற்றிக்கொடிகட்டு'', "மின்சாரக்கண்ணா'', "கிக்கு
ஏறுதே'' போன்ற பாடல்களும் ரசிகர்களை சொக்க வைத்தவை. `கிக்கு ஏறுதே'
பாடல் காட்சியில் ரஜினியுடன் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரும்
சேர்ந்து நடனமாடி கலக்கினார்.
"மன்னன்'' படத்தில் பணக்கார விஜயசாந்தியை சாதாரண ரஜினி எதிர்கொண்டு
ஜெயிப்பதாக கதை போகும். படையப்பா இதே பாணியில் வேறு களம். இரண்டுமே
வெற்றிக்களம்.
வெற்றி
"படையப்பா'' தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் மொத்தம் 123
தியேட்டர்களில் நூறு நாள் ஓடியது.
11 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியது.
சென்னையில் 210 நாட்களும், கோவையில் 275 நாட்களும் ஓடி சாதனை
படைத்தது.
>>> Part 103
|