21 ஆயிரம்
அடியில் உருவான "படையப்பா''
2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா?
கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!
"படையப்பா'' படத்தை தயாரித்து முடித்தபோது, அதன் நீளம் 21 ஆயிரம்
அடியாக இருந்தது. "இரண்டு இடைவேளைகளுடன் படத்தை திரையிடலாமா?''
என்று ரஜினி யோசித்தார். இதுபற்றி கமலஹாசன் கருத்தையும்
கேட்டறிந்தார்.
முடிவில் நீளத்தைக் குறைத்து ஒரே இடைவேளையுடன் படம் ரிலீஸ்
செய்யப்பட்டது.
இந்த தகவலை, படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டார்.
பேட்டி
ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களான "முத்து'', "படையப்பா''
ஆகியவற்றை டைரக்ட் செய்த ரவிக்குமார் "படையப்பா'' தயாரிப்பின்போது
ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-
"முத்து வெற்றிப்படமாகி விட்டதால் "படையப்பா'' படத்தை இயக்கும்
வாய்ப்பு வந்தபோது, இதையும் வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற வேகம்
எனக்குள் ஏற்பட்டது.
`நீலாம்பரி' கேரக்டருக்கு, நடிகை ரம்யாகிருஷ்ணன் சரியாக இருப்பார்
என்பதை ரஜினிதான் சொன்னார்.
ஆனால் எங்கள் னிட்டிலோ, நீலாம்பரி கேரக்டரில் ரம்யாவை போட
யாருக்கும் இஷ்டமில்லை. என்றாலும் ரஜினி சாரின் விருப்பமே என்
விருப்பமாகவும் இருந்ததால், ரம்யா கிருஷ்ணனே நீலாம்பரி ஆனார். அந்த
கேரக்டருக்கு நன்றாகப் பொருந்தினார்.
குழந்தை பிறந்தது
படையப்பா படத்துக்கு, ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார்
கோவிலில் பூஜை போட ஏற்பாடு செய்தோம். ஆனால், பூஜைக்கு முந்தினநாள்
என் மகள் யஷ்வந்தி பிறந்தாள்!
மறுநாள் பூஜை முடிந்ததும் மைசூருக்கு படப்பிடிப்புக்காக
போய்விட்டோம். இதை மனதில் வைத்து, இப்போது யஷ்வந்தியை பார்த்தாலும்
ரஜினி "வாம்மா படையம்மா'' என்றுதான் கூப்பிடுவார்.
மைசூரில் முருகன் கோவில் செட் போட்டு, காட்சிகளை படம் பிடித்தோம்.
கோவிலுக்குள் வருகிற மாதிரியான காட்சிகளை ஏவி.எம்.மில் செட் போட்டு
எடுத்தோம். மற்றபடி முதல் ஷெட்லிலேயே படத்தின் கிளைமாக்ஸ்
காட்சிகளை எடுத்துவிட்டேன். சிவாஜி சார் இறந்து போகிற காட்சியும்
முதல் ஷெட்லிலேயே எடுத்துவிட்டேன்.
மைசூரில் கோவில் பின்னணியில் ரஜினி அல்லாத காட்சிகளை
எடுத்துக்கொண்டிருந்த போது, ரஜினி கோவில் படிக்கட்டில் உட்கார்ந்து
இருந்தார்."கடைசிப்படம்''
நான் மைக்கில் பேசி காட்சிக்கான தயார் நிலையில் இருந்தபோது, கோவில்
படிக்கட்டில் இருந்தபடி ரஜினி சார் உரத்த குரலில், "ரவிக்குமார்
சார்! இதுதான் என் கடைசிப்படம்'' என்றார்.
பதிலுக்கு நான், "ஏன், அரசியலுக்கு போறீங்களா?'' என்று கேட்டேன்.
அவரோ, "இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடணும். அப்படியானால்தான்
அடுத்த படத்தில் நடிப்பேன். இல்லேன்னா இந்தப் படத்தோட சரி'' என்றார்.
நான் விடவில்லை. "அதுக்கென்ன சார்! நான் `சிட்டி' ரைட்ஸ் (சென்னை
நகர உரிமை) வாங்கி `தேவி' குரூப்பில் "வெள்ளி விழா'' வரை
ஓட்டிட்டுப் போறேன்'' என்றேன்.
அவரும் விடாமல், "அப்படியெல்லாம் இல்லை. இந்தப்படம் வசூலில் `ரெக்கார்டு
பிரேக்' பண்ணணும். அப்படி நடந்தாத்தான் அடுத்த படத்தில் நடிக்கிறது
பற்றி யோசிப்பேன்'' என்றார்.
இத்தனையும் படப்பிடிப்பு குழுவினர் முன்னாலேயே நடக்கிறது. எனக்கோ "கோவில்
வாசலில் இருந்து இப்படி வெளிப்படையாக பேசுகிறாரே'' என்ற கவலை.
இந்தப்படம் இவரது எதிர்பார்ப்பையும் தாண்டி நீண்ட நாள் ஓடவேண்டும்
என்ற எண்ணம் எனக்குள் தீவிரமானது.
படையப்பா ரிலீசானபோது, அதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும்
தகர்த்து, `ரெக்கார்டு பிரேக்' செய்தது. பல வருஷம் கழித்து வந்த "சந்திரமுகி''தான்
"படையப்பா'' வசூல் ரெக்கார்டை முறியடித்து இருக்கிறது. அதுகூட எல்லா
இடங்களிலும் அல்ல.
படம் பார்த்த முதல்-அமைச்சர் கலைஞர், படம் முடிந்து வெளியே வந்ததும்
மகிழ்ச்சி முகமாய் ரஜினியை பார்த்து "படையப்பா! அனைத்து
சாதனைகளையும் உடையப்பா'' என்று வாழ்த்தினார். அந்த வாழ்த்தும்
பலித்துவிட்டது.
2 இடைவேளை
படத்தை எடுத்து முடித்த நேரத்தில் ஒரு சிக்கல். படம் மொத்தம் 21
ரீல் வருது. 21 ரீலையும் பார்த்த ரஜினி சார் என்னிடம், "நல்லா
இருக்கு. ஆனா 21 ரீல் வந்திருக்கு. எப்படி குறைக்கப் போறீங்க?''
என்று கேட்டார்.
"என்னால் முடிந்த வரை குறைக்கிறேன்'' என்று சொன்னேன். அப்படி
இப்படியாக 2 ஆயிரம் அடியை குறைத்தேன். இப்ப 19 ரீல் ஆச்சு. ரஜினி
சாரிடம் சொன்னேன். அவர் "19 ரீல் படம்னா இரண்டு இடைவேளை
விட்டால்தானே சரியாக இருக்கும்?'' என்று கேட்டார்.
ராஜ்கபூர் நடித்த "சங்கம்'', "மேரா நாம் ஜோக்கர்'' ஆகிய படங்களுக்கு
2 இடைவேளை வைத்தார்கள். அது மாதிரி தமிழில் "படையப்பா''வுக்கும்
செய்யலாமா என்று ரஜினி சார் யோசித்தார். இதுபற்றி, தனது ஆப்த நண்பர்
கமல் சாரிடமும் யோசனை
கேட்டார்."எக்காரணம் கொண்டும் இரண்டு இடைவேளை வைக்காதீர்கள். அது
சரியாக இருக்காது. நீளத்தை குறைக்கும் பொறுப்பை டைரக்டரிடம் விட்டு
விடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார்'' என்று கமல் கூறினார்.
இதுபற்றி ரஜினி தீவிரமாக சிந்தித்தார். "குறைந்த பட்சம்
5 ரீலாவது குறைத்தால்தான் சரியாக இருக்கும். ஆனால், எல்லா சீனும்
முக்கியமானவை. உங்களால் 5 ரீல் குறைக்க முடியுமா?'' என்று என்னிடம்
கேட்டார்.
"குறைக்கிறேன் சார் என்று அவரிடம் சொல்லி விட்டேனே தவிர,
காட்சிகளின் வீரியம் குறையாமல், கதையின் விறுவிறுப்புக்கு பங்கம்
நேராமல் 5 ரீல்களை குறைப்பது என்பது எனக்கு பெரும் சவாலாகவே
இருந்தது. என்றாலும் 4 நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக உட்கார்ந்து
14 ஆயிரத்து 500 அடியாக படத்தை குறைத்தேன். அதன்பின் படத்தை
பார்த்தபோது காட்சிகள் குறைக்கப்பட்டது தெரியாமல், படம்
விறுவிறுப்பாக இருந்தது.
பேசாமல் போன ரஜினி
முதல் பிரதி தயாரானதும், ஏவி.எம். ஏசி தியேட்டரில் படம் பார்த்தோம்.
ரஜினி சார் சில நண்பர்களுடன் வந்திருந்தார். என்னுடன் சில
நண்பர்களும் வந்திருந்தார்கள். படம் முடிந்ததும் ரஜினி சார் ஒரு
வார்த்தை கூட சொல்லாமல் என்னிடம் கைகொடுத்து விட்டுப் போய்விட்டார்.
படம் பற்றி எதுவும் சொல்லாமல் போனதால் எனக்கு இரவு முழுக்க தூக்கம்
இல்லை.
ஆனால் மறுநாள் காலையில் நேரில் வரச்சொல்லி போன் செய்தார். அவரை
சந்தித்தபோது "நேற்று படம் முடிந்ததும் உங்ககிட்ட எதுவும் சொல்லாமல்
போய்விட்டேன். நம்ம இரண்டு பேர் சைடிலும் வந்தவங்க மத்தியில் நான்
"படம் சூப்பர்''னு சொல்லிட்டா, அவங்களும் அதையே சொல்லிடுவாங்க.
நமக்கு படம் பற்றிய அவங்களோட உண்மையான கருத்து கிடைக்காது. என்
நண்பர்கள் "படம் நல்லா இருக்கு. ஆனால் இதுக்கு எதுக்கு "படையப்பா''ன்னு
பேரு? நீலாம்பரின்னே வெச்சிருக்கலாமே'' என்று சொன்னாங்க. எனக்கு
படம் ரொம்ப பிடிச்சிருக்கு. 14 ரீலா குறைத்த பிறகும், குறைத்த
மாதிரி தெரியாமல் `விறுவிறு'வென்று போகுது. உடனே `ரீரிக்கார்டிங்'
ஆரம்பிக்கச் சொல்லிடுங்க'' என்றார்.
ரஜினி சார் கணிப்பும், என் கணிப்பும் ஒரே மாதிரி இருந்ததை
ரசிகர்களும் உறுதி செய்தார்கள். அவர்களும் எங்கள் உணர்வுகளை
பிரதிபலித்ததால் படையப்பா சாதனை படைத்தது.''
இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.
>>> Part 104
|