காவிரி தண்ணீர்
பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம்
`நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்'
13-10-2002
காவிரி தண்ணீர் பிரச்சினையில், தமிழ்நாட்டுக்கு நீதி கோரி
ரஜினிகாந்த் சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் விட மறுப்பதால், காவிரி வறண்டு
கிடக்கிறது. இதுபற்றிய மத்திய அரசின் உத்தரவையும், நடுவர்
மன்றத்தின் தீர்ப்பையும் கர்நாடக அரசு ஏற்கவில்லை.
கர்நாடக அரசு, நீண்ட காலமாகவே இந்தப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.
உண்ணாவிரதம்
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு பதிலடி
கொடுக்கும் விதத்தில் கர்நாடகத்துக்கு நெய்வேலி அனல் மின்
நிலையத்தில் இருந்து மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி,
தமிழக நடிகர் - நடிகைகள் 2002-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பேரணி
நடத்தினார்கள். இந்தப் பேரணி நெய்வேலியில் நடந்தது.
இந்தப் பேரணியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை. அதற்குப்பதிலாக,
மறுநாளே தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை
வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதப்
போராட்டம், சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே
2002 அக்டோபர் 13-ந்தேதி நடைபெற்றது. உண்ணாவிரதத்துக்காக பெரிய மேடை
அமைக்கப்பட்டு, அதில் மெத்தை போடப்பட்டு இருந்தது.
காலை 6 மணிக்கு அங்கு வந்த ரஜினிகாந்த், 8 மணிக்கு உண்ணாவிரதத்தைத்
தொடங்கினார்.
ரஜினி, வெள்ளை நிறத்தில் பைஜாமாவும், குர்தாவும் அணிந்திருந்தார்.
மொட்டைத் தலையுடனும், சுத்தமாக சவரம் செய்யப்பட்ட முகத்துடனும்
காட்சி அளித்தார். சட்டையில் கறுப்பு `பேட்ஜ்' குத்தியிருந்தார்.
வாழ்த்து
உண்ணாவிரதம் இருந்த ரஜினிகாந்துக்கு நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட
ஏராளமான திரை உலக பிரமுகர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள்
பொன்னாடை, மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடன்
சிறிது நேரம் உண்ணாவிரத மேடையில் அமர்ந்து இருந்தனர்.
ரசிகர்களும் திரண்டு வந்து ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பழச்சாறு குடித்தார்
சரியாக மாலை 5 மணிக்கு "இப்போது ரஜினிகாந்த் உண்ணாவிரதத்தை
முடித்துக்கொள்வார்'' என்று அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடிகர்கள் சரத்குமாரும், நெப்போலியனும், நடிகை
ரேகாவின் மகள் அபிரைனாவின் கையில் ஆரஞ்சு பழச்சாறை கொடுத்து
ரஜினிகாந்திடம் கொடுக்கும்படி கூறினார்கள்.
சிறுமி அபிரைனா ரஜினிகாந்திடம் ஆரஞ்சு பழச்சாறை கொடுத்தார். அதை
ரஜினிகாந்த் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
அதன் பின்னர் மேடை முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள்
மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அவர் கூறியதாவது:-
நன்றி
"இங்கே வருகை தந்திருக்கும் என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களே! ரசிக
பெருமக்களே! திரை உலகைச் சேர்ந்த நண்பர்களே! உங்கள் அனைவருக்கும்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே வந்து என்னை வாழ்த்திய அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி.
பத்திரிகையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இவ்வளவு சிறப்பாக இந்த உண்ணாவிரதம் நடைபெற உதவிய காவல்துறைக்கு என்
பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்
உண்ணாவிரதத்துக்கு இந்த இடத்தை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி.
தென் இந்தியாவின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் கலைஞர் இங்கே
கட்டாயம் வாழ்த்த வருவேன் என்று கூறினார். நான்தான் வரவேண்டாம்
என்று கூறிவிட்டேன். அவர் வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருக்கிறார்.
டாக்டர் கலைஞருக்கும் என்னுடைய நன்றி.
வெற்றியா?
இந்த உண்ணாவிரதம் இங்கே நல்ல முறையில் நடந்து முடிந்து இருக்கிறது.
இந்தப் போராட்டம் வெற்றியா, தோல்வியா? என்பது கர்நாடகத்தின் கையில்
உள்ளது . சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது.
மத்திய அரசு என்ன செய்யுமோ, எப்படி செய்யுமோ தெரியாது. ஆனால்
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டே ஆகவேண்டும். இது
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. தண்ணீர் வந்தாகவேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தண்ணீர் கொடுக்கவேண்டும். இதை
வலியுறுத்தி அரசிடம் மனு கொடுக்க செல்கிறேன்.''
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
கோரிக்கை மனு
அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் காரில் ஏறி கிண்டியில் உள்ள கவர்னர்
மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு கவர்னர் இல்லாததால் அவரது செயலாளர் ஷீலா பிரியாவை சந்தித்து
கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு திரும்பிய ரஜினிகாந்த்,
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
"உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று
எதிர்பார்த்தீர்களா?'' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர்
கூறியதாவது:-
"நான் இந்த வரவேற்பை எதிர்பார்த்தேன். தமிழ் மக்களைப்பற்றித்
தெரியும். முதலில் என்ன நடந்தது அப்புறம் என்ன நடந்தது
என்பதையெல்லாம் மறந்துவிடலாம்'' என்று கூறிவிட்டு, முடிந்தது
முடிந்ததாகவே இருக்கட்டும் என்று குறிப்பிடும் வகையில் "கதம் கதம்''
என்றார்.
அடுத்தது என்ன?
அடுத்து என்ன திட்டம் என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
"பிரதமர் வந்ததும், தமிழ் திரை உலகத்தினருடன் சென்று பார்ப்பேன்.
கன்னட திரை உலக நண்பர்களையும் கூட்டிச்செல்ல முயற்சிப்பேன். இது
எல்லாம் தற்காலிகமான ஒன்றுதான்.
நதி இணைப்பு
முக்கியமாக கங்கை, காவிரி இணைப்புத் திட்டத்தை அமல்படுத்துவதன்
மூலம் இந்திய மக்களுக்கு ஒரு பொற்காலத்தை கொண்டு வரவேண்டும்.
கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 40-50
ஆண்டுகள் கூட இதற்கு ஆகலாம். பாரதியார் கூட இந்தத் திட்டத்தை
கூறியுள்ளார். இந்த திட்டத்தை அமல்படுத்தினால் அமெரிக்கா மாதிரி,
சுவிட்சர்லாந்து மாதிரி ஆகும். 30 ஆண்டு ஆனாலும் பரவாயில்லை.
ரூ.1 கோடி தருகிறேன்
அந்த கங்கா நதியை இணைக்க முடியாவிட்டால் குறைந்த பட்சம்
தென்னிந்திய நதிகளையாவது இணைக்க வேண்டும். எவ்வளவு பணம் என்று
கவலைப்படாதீர்கள். நாளைக்கே அறிவித்தால் நாளையே ரூ.1 கோடி தருகிறேன்!
எனது பாக்கெட்டில் இருந்து தருகிறேன்.
பணத்தைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்பட வேண்டாம். பணம் வேண்டும்
என்றால் மக்களிடம், எங்களிடம் விடுங்கள். பார்த்துக் கொள்கிறோம்.''
இவ்வாறு பதில் அளித்த ரஜினிகாந்த், "நன்றி வணக்கம்'' என்று
கூறிவிட்டு கவர்னர் மாளிகையில் இருந்து சக நடிகர்களுடன்
புறப்பட்டுச் சென்றார்.
>>> Part 106
|