2004 பாராளுமன்ற தேர்தல்:
பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு
2004 மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா
கூட்டணியை ரஜினிகாந்த் ஆதரித்தார். ஆனால், தனது ரசிகர்கள்
மனச்சாட்சியின்படி, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஓட்டளிக்கலாம்
என்று அறிவித்தார்.
பாராளுமன்றத்துக்கு இந்தியா முழுவதும் 2004 மே மாதம் தேர்தல்
நடந்தது. அப்போது வாஜ்பாய் (பாரதீய ஜனதா) பிரதமராக இருந்தார்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார்.
2 கூட்டணிகள்
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும்,
அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க,
வ.கம்னிஸ்டு, இ.கம்னிஸ்டு, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்
பெற்று இருந்தன.
(மூப்பனார் மறைவுக்குப்பின், "தமிழ் மாநில காங்கிரஸ்'',
காங்கிரசுடன் இணைந்து விட்டது.)
அ.தி.மு.க. கூட்டணியில், பாரதீய ஜனதா இடம் பெற்று இருந்தது.
ரஜினியின் மனமாற்றம்
இதற்குமுன், 1996 மே மாதத்தில் தமிழக சட்டசபைக்கும்,
பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்தபோது, தி.மு.க. கூட்டணியை ரஜினி
ஆதரித்தார்.
ஆனால் பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கும், ரஜினிக்கும் மோதல்
ஏற்பட்டது. "பாபா'' வெளியானபோது இந்த மோதல், உச்சகட்டத்தை அடைந்தது.
"பாபா'' படம் திரையிடப்பட்ட தியேட்டரில் திரையைக் கிழித்தல், பிலிம்
பெட்டிகளை கடத்தல் முதலிய செயல்களில் பாட்டாளி மக்கள் கட்சி
தொண்டர்கள் ஈடுபட்டதால் ரஜினிகாந்த் மனம் வருந்தினார்.
இதன் காரணமாக, 1996 பாராளுமன்ற தேர்தலின்போது, பாட்டாளி மக்கள்
கட்சி இடம் பெற்றிருந்த தி.மு.க. கூட்டணியை ரஜினிகாந்த்
ஆதரிக்கவில்லை. தான், பாரதீய ஜனதா கூட்டணியை ஆதரிக்கப்போவதாக
அறிவித்தார். தனது ரசிகர்கள் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 6
தொகுதிகளில் அதை எதிர்த்து பணியாற்ற வேண்டும் என்றும், மற்ற
தொகுதிகளில் அவரவர் மனச்சாட்சியின்படி ஓட்டுப்போடும்படியும் அறிக்கை
விடுத்தார்.
தி.மு.க. வெற்றி
இந்தத் தேர்தலில், 39 தொகுதிகளிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி
வெற்றி பெற்றது. மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப்
பிடித்தது.
மன்மோகன்சிங் பிரதமரானார்.
"ஆண்டவன் தீர்ப்பு''
தேர்தல் முடிவு குறித்து, ரஜினிகாந்த் சார்பாக, அகில இந்திய
ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்ற பொறுப்பாளர் க.சத்தியநாராயணா ஒரு
அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடெங்கும் அமோக வெற்றி பெற்ற தி.மு.க.
தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியினருக்கு ரஜினிகாந்த்
சார்பாகவும், மன்றங்களின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
அன்பார்ந்த ரசிகர்களே! பா.ம.க.வைப் பொறுத்தவரை, நமது அன்புத்தலைவர்
ரஜினிகாந்த் ஏற்கனவே கூறியதுபோல அவர்கள் ஜெயித்தால் நாம்
தோற்றுவிட்டோம் என்று அர்த்தம் இல்லை. இது, ஆண்டவன் அளித்த தீர்ப்பு.
பா.ம.க.வினர் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்த அன்பு
ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் சார்பாகவும், தலைமை மன்றத்தின்
சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
***
அமெரிக்காவில்
ரஜினிக்கு ஏற்பட்ட விசித்திர அனுபவம்!
மொட்டை அடித்தவருக்கு ரூ.4,000 கொடுத்தார்!
அமெரிக்காவில், ரஜினிகாந்த் "ஹேர் ஸ்டைல்'' செய்து கொள்ளப்போனார்.
அவருக்கு மொட்டை அடித்துவிட்டு, ரூ.4 ஆயிரம் வசூலித்துவிட்டார்கள்!
இந்தத் தகவலை ரஜினியே வெளியிட்டார்.
"பாட்ஷா'', "முத்து'' ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக,
ரஜினிக்கு "சினிமா எக்ஸ்பிரஸ்'' விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழா 1996 ஏப்ரல் 20-ந்தேதி சென்னையில் காமராஜர்
அரங்கில் நடந்தது. பரிசு பெறுவதற்காக மனைவியுடன் ரஜினி வந்தார்.
அப்போது மொட்டைத் தலையுடன் காணப்பட்டார்.
இதுபற்றி, விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:-
"இவர் ஏன் மொட்டை அடித்திருக்கிறார் என்று, என்னைப் பார்ப்பவர்கள்
எல்லாரும் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இது நானாக ஆசைப்பட்டு
அடித்துக்கொண்ட மொட்டை இல்லை. தானாக வந்த மொட்டை!
நியார்க்கில் தங்கியிருந்தேன். தங்கியிருந்தவன் சும்மா
இருக்கக்கூடாதா? பத்திரிகையைப் படித்தேன். `லேட்டஸ்ட் ஸ்டைலில் முடி
வெட்டிக்கொள்ள போன் பண்ணவும்' என்று அதில் ஒரு விளம்பரம்
வந்திருந்தது. `லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைல் என்கிறார்களே, வெட்டித்தான்
பார்ப்போமே' என்று எனக்கு ஆசை ஏற்பட்டது. படாதபாடு பட்டு அதில்
குறிப்பிட்டிருந்தபடி போன் பண்ணினேன். உடனே அப்பாயின்ட்மெண்ட்
கிடைக்கவில்லை.
இரண்டு மூன்று நாட்களாகக் கஷ்டப்பட்டு, முயற்சி செய்து, ஒருவழியாக
`அப்பாயின்ட்மெண்ட்' கிடைத்தது. போனேன்.
பெயர், ஊர் முதலிய விவரங்களையெல்லாம் கேட்டு எழுதிக்கொண்டார்கள்.
முதலில் என் தலைக்கு மசாஜ் செய்தார்கள். சும்மா சொல்லக்கூடாது.
மசாஜ் செய்ததும் கொஞ்சம் சுகமாக இருந்தது. பிறகு முடி
வெட்டிக்கொள்ளும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். முடி
வெட்டும்போது மசாஜ் செய்திருந்த சுகத்தில் அப்படியே தூங்கிவிட்டேன்.
திடீரென்று `கிர்'ரென்று சத்தம் வந்தது, பிளைட்டில் போகிற மாதிரி!
கண்களை திறந்து பார்த்தால் என் தலையில் இருந்த தலை முடியையெல்லாம்
காணோம்! (அரங்கத்தில் சிரிப்பு).
"இப்பொழுது பாருங்கள், உங்களது ஹேர் ஸ்டைல் எவ்வளவு சிறப்பாக
இருக்கிறது! நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் தெரியுமா?
இதுதான் நியார்க்கிலுள்ள லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல்'' என்றார்கள்!
நான் "பிரமாதம்! பிரமாதம்!'' என்றேன்.
"ஓகே! நூற்றி இருபது டாலர் கொடுங்கள்'' என்று கேட்டு வாங்கிக்
கொண்டார்கள். கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய்... மொட்டை அடித்ததற்கு!''
இவ்வாறு ரஜினி கூறியபோது எழுந்த சிரிப்பு அலை அடங்க, வெகு நேரம்
பிடித்தது.
>>> Part 107
|