சரித்திர சாதனை
படைக்கும்
"சந்திரமுகி'' உருவானது எப்படி?
டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்
ரஜினிகாந்த் நடித்த "சந்திரமுகி'' வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது.
2005 ஏப்ரல் 14-ந்தேதி திரையிடப்பட்ட இந்தப்படம் 700 நாட்களைத்
தாண்டி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்பட உலகின் வசூல்
சாதனைகளை எல்லாம் முறியடித்துவிட்டது.
சந்திரமுகி, சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு. ரஜினியுடன் பிரபு, ஜோதிகா,
நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சாதனை படத்தை
இயக்கியவர் பி.வாசு.
இவர் ஏற்கனவே ரஜினியின் "பணக்காரன்'', "மன்னன்'', "உழைப்பாளி''
ஆகிய படங்களை இயக்கியவர்.
கதையின் கதை
"சந்திரமுகி'' படத்தின் கதை உருவானதிலும், அது படமானதிலும், அதை
வாசு டைரக்ட் செய்ததிலும் பெரிய கதையே அடங்கியிருக்கிறது.
அதுபற்றி வாசு கூறியதாவது:-
"சிவாஜி பிலிம்சுக்காக ரஜினி சாரை ஏற்கனவே "மன்னன்'' படத்திற்காக
இயக்கினேன். அது வெள்ளி விழா படமாக அமைந்தது. அதே சிவாஜி
பிலிம்சுக்காக மீண்டும் ரஜினியை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது, அளவிட
முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
"மன்னன்'' படத்தில் ரஜினி சாரை இயக்கிய பிறகு, எந்தக் கதையென்றாலும்
அதை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அடுத்து வந்த "அண்ணாமலை'', "பாட்ஷா'',
"படையப்பா'' படங்களின் கதைவரை, என்னிடம் சொல்லி எனது
கருத்துக்களையும்
கேட்டுக்கொள்வார்.கதைகளை காட்சி ரீதியாக அவர் சொல்லும் போதே படம்
பார்த்த `பீலிங்' ஏற்பட்டு விடும். இந்த கதைப் பட்டியலில் `பாபா'
படத்தின் கதை பற்றி மட்டும் என்னிடம் அவர் பேசவில்லை.
கதை பற்றிய எனது கருத்துக்களை கூறும்போது அதை தனது கையில் இருக்கும்
குறிப்பேட்டில் எழுதிக்கொள்வார். அதுமாதிரி படம் முடிந்து
"பிரிவி'' காட்சி பார்க்கவும் என்னை அழைப்பார். படம் பார்த்து
முடிந்ததும் படம் பற்றி எதுவும் சொல்லாமல் போனால்கூட, அவரே
வீட்டுக்கு போன் பண்ணி விடுவார். பொதுவாகவே, மனதில் பட்டதை
பளிச்சென்று சொல்லி விடுபவர்களிடம் அவருக்கு பிரியமும் அதிகம்.
நம்பிக்கையும் அதிகம். இப்படி அவரது நம்பிக்கைக்குரிய இடத்தில்
நானும் இருந்தேன் என்பதில் இன்றளவும் எனக்குப் பெருமை.
விமானத்தில் சந்திப்பு
"பாபா'' படம் வெளியான பிறகு, புதிய படம் எதையும் ரஜினி
ஒப்புக்கொள்ளாமல் இருந்த நேரம். விமானத்தில் நாங்கள் தற்செயலாக
சந்தித்துக் கொண்டோம். அப்போது நான் கன்னடத்தில் "ஆப்த மித்ரா''
என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பை முடித்துவிட்டு,
பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது,
அதே விமானத்தில் ரஜினி சாரும் வர, நலம் விசாரித்துக் கொண்டோம்.
பிறகு அவரிடம், "என்ன சார்! புதிய படம் பற்றி எந்த அறிவிப்பும்
வரவில்லையே?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர், "பாட்ஷா'', "படையப்பா'' படத்துக்குப்பிறகு இனிமே
புதுசா என்ன படம் பண்ணிட முடியும்? அதிருக்கட்டும். நீங்க இப்ப
என்ன படம் பண்றீங்க? என்று கேட்டார்.
நான் அவரிடம், கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனை வைத்து `ஆப்த மித்ரா'
என்ற கன்னடப் படத்தை இயக்கி வருவது பற்றி தெரிவித்தேன். அப்போதும்
கூட கதை பற்றி அவரிடம் சொல்லவில்லை.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற "மணிச்சித்ரதாழ்''
படம்தான், எனக்கு "ஆப்த மித்ரா'' கன்னடப் படத்துக்கு இன்ஸ்பிரேஷன்.
அந்தப் படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய கேரக்டர்கள்
வடிவமைப்புடன் "ஆப்த மித்ரா''வை உருவாக்கினேன். இந்தப்படம்தான்
பின்னாளில் "சந்திரமுகி''யாக உருப்பெறும் என்பதை அப்போது
நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கோவிலுக்கு வந்த நல்ல செய்தி
"ஆப்த மித்ரா'' ரிலீசானதும் கேரளாவில் உள்ள சக்குளத்து பகவதி அம்மன்
கோவிலுக்கு போனேன். இது "பெண்களின் சபரிமலை'' என்று சொல்லப்படும்
கோவில். தரிசனம் முடிந்து வெளிவந்த நேரத்தில் கோவில் குருக்கள்
என்னிடம், "27 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வாங்க. நல்ல செய்தி வரும்''
என்றார்.
அவர் சொன்னபடி 27-வது வெள்ளிக்கிழமை தரிசனம் முடித்துவிட்டு
குருவாருக்கு வந்தேன். மதியம் 1ஷி மணிக்கு பிரபு சார் போனில்
பேசினார். "யப்பா! ஒரு சந்தோஷமான விஷயம். ரஜினி சார் நம்ம பேனர்ல
ஒரு படம் பண்றார்'' என்றார்.
இதைக் கேட்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சி. உடனே பிரபு விடம், "ரொம்ப
சந்தோஷமான விஷயம் சொல்லியிருக்கீங்க'' என்றேன்.
"சந்தோஷம் இதோடு முடிந்து விடவில்லை. படத்தை நீதாம்ப்பா டைரக்ட்
பண்றே'' என்றார்.
"நானா?'' ஒரு கணம் எனக்கு இன்ப அதிர்ச்சி. உடனே பிரபு, "ரஜினி சாரே
சொன்னார். உன்னைத்தான் நம்ம பேனர் படத்துக்கு டைரக்டரா போடணும்னு
கேட்டுக்கிட்டார்'' என்றார்.
இப்போது நிஜமாகவே எனக்கு வியப்பு. நான் அவரை "மன்னன்'' படத்தில்
இயக்கி 9 வருஷம் ஆகிவிட்டது. அதற்குப்பிறகு அதுமாதிரி ஒரு பெரிய
வெற்றிப்படம் எதுவும் நான் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் ரஜினி
சார் என்னை அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்க சொல்லியிருக்கிறார்
என்றால், எப்படி?
"ஆப்த மித்ரா'' ரிலீசாகி முதல் வாரமே பெரிய வெற்றிக்கான அடையாளம்
தெரிய ஆரம்பித்திருந்தது. இந்த நேரத்தில் சிவாஜி பிலிம்சுக்காக
ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில், வரும்
வழியிலேயே ரஜினி சாருக்கு என்ன கதை பண்ணலாம் என்று யோசிக்கத்
தொடங்கி விட்டேன். அப்போது என்னிடம் "வலது கை'' என்ற பெயரில் ஒரு
"கமர்ஷியல்'' கதை இருந்தது. இந்தக் கதைக்குள் ரஜினி எந்தெந்த
மாதிரி பிரகாசிப்பார் என்று கதைக்காட்சிகளை மனக்கண் முன்
ஓடவிட்டேன்.
சென்னை வந்து ராம்குமாரை பார்த்தபோது, "யப்பா! ரஜினி சாரே போன்
செய்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பாட்டுவேளை, திடீர்னு
ரஜினி சாரிடம் இருந்து போன். "என்ன பண்றீங்க?'' என்று கேட்கிறார்.
"சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறோம்'' என்றேன். "நம்ம பேனர்ல ஒரு படம்
பண்ணுவோமா?'' என்கிறார். "பண்ணலாம் சார்'' என்கிறேன். உடனே அவரே
"வாசு டைரக்ஷன்ல "ஆப்த மித்ரா''ன்னு ஒரு படம் வந்திருக்கு. நாம அதை
அப்படியே தமிழில் பண்ணலாம்" என்றார். "சந்தோஷமா பண்ணலாம் சார்''னு
சொல்லிட்டேன் என்றார்,
ராம்குமார்.எனக்குள் இப்போது விவரிக்க முடியாத உணர்ச்சி அலைகள்.
"மணிச்சித்ரதாழ்'' படத்தின் கருவை மட்டுமே எடுத்துக்கொண்டு என்
பாணியில் சில கேரக்டர்களை உருவாக்கி "ஆப்த மித்ரா''வை இயக்கினேன்.
அந்தப்படம் ரசிகர்களை கவர்ந்த மாதிரியே ரஜினி சாரையும்
கவர்ந்திருக்கிறதே!
மாறு வேடத்தில் ரஜினி
இதைத்தொடர்ந்து ராம்குமார் பெங்களூரில் இருந்த ரஜினியை பார்க்கப்
போனார். அவரிடம், "என் நண்பர் காந்தி பெங்களூர் சந்தோஷ்
தியேட்டரில் "ஆப்த மித்ரா'' படத்தை பார்த்திருக்கிறார். அவர்தான்
படம் பற்றி என்னிடம் பாராட்டி சொன்னார். அதோட நம்ம வாசுதான்
டைரக்ட் பண்ணியிருக்கார்'னு சொன்னார். காந்தி ஒரு படத்தை அவ்வளவு
சுலபமா பாராட்டற ஆளில்லை. அதனால் காந்தியை அழைத்துக்கொண்டு
மாறுவேடத்தில் நானும் சந்தோஷ் தியேட்டரில் `பிளாக்'கில் டிக்கெட்
வாங்கி படம் பார்த்தேன். அதில் கட்டில் தானா மேலே தூக்கற சீனைப்
பார்த்ததும் அப்படியே ஆடிப்போயிட்டேன். படம் பெரிசா வரும்னு
நம்பிக்கை இருக்கு'' என்றிருக்கிறார்.
நான் சந்தித்தபோது என்னிடமும் படம் பற்றி ரஜினி பாராட்டினார். நான்
அவரிடம், "சார்! ஒரேயொரு வார்த்தை. டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்
உங்களை வெச்சு ஏற்கனவே `ஜக்குபாய்' படம் இயக்கறதா இருந்தது. இப்ப
உள்ள சூழ்நிலையில் நீங்க புதுசா ஏதாவது படம் பண்ணினாக்கூட அதை
கே.எஸ்.ரவிக்குமாரே டைரக்ட் பண்ணினாத்தான் சரியாக இருக்கும்''
என்றேன்.
இப்படிச் சொன்னதும் ரஜினி முகத்தில் ஆச்சரியம். "என்ன இது!
நீங்களும் ரவிக்குமாரும் ஒரே மாதிரி இருக்கீங்க? அவர்கிட்ட இந்த
கதை பற்றி சொன்னேன். "மணிச்சித்ரதாழ்'' படத்தை அவர்
பார்த்திருக்கிறார். அவர் என்கிட்டே, "என்ன சார் கலாட்டா
பண்றீங்களா? நாங்க உதை வாங்கணும்னு ஆசையா உங்களுக்கு? படத்தில்
மோகன்லால் கரெக்டா இடைவேளை நேரத்தில்தான் வரார். நீங்க நடிக்கிற
ஒரு படத்துல இடைவேளை வரைக்கும் உங்களைக் காட்டலைன்னா ரசிகர்கள்
எங்களை சும்மா விடுவாங்களா?'' என்று கேட்டார். அவர்
சொன்னப்புறம்தான் நானும் "மணிச்சித்ரதாழ்'' பார்த்தேன். அப்பத்தான்
அதுக்கும் "ஆப்த மித்ரா''வுக்கும் உள்ள ஏகப்பட்ட வித்தியாசம்
தெரிஞ்சுது. இந்த விஷயத்தை நான் ரவிக்குமார் கிட்டே சொன்னபோது,
"அதனால்தான் சார் சொன்னேன். டைரக்டர் வாசு இந்தப் படத்தை
பண்ணினால்தான் சரியாக இருக்கும்'' என்று சொன்னார்.
இதை என்னிடம் விவரித்த ரஜினி, "நீங்களே டைரக்ட் பண்ணனும்னு
ஆசைப்பட்டதுக்கு இதுவும் முக்கிய காரணம்'' என்றார்.
"தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து கொள்வோம்'' என்றும்
கூறினார்.
அதன் பிறகு மளமளவென பட வேலைகள் தொடங்கின. நான் சில காட்சிகளை
மாற்றம் செய்தேன்.
கன்னடத்தில் வடிவேலு கேரக்டர் கிடையாது. தமிழுக்காக அதை
சேர்த்தேன். `தேவுடா தேவுடா' பாட்டு கிடையாது. அதை சேர்த்தேன்.
இதைவிடவும் முக்கியம், கன்னடத்தில் வேட்டையன் கேரக்டரே கிடையாது.
தமிழுக்காக உருவானவன்தான் வேட்டையன்.''
இவ்வாறு கூறிய வாசு, மேலும் பல சுவையான தகவல்களை தெரிவித்தார்.
>>> Part 108
|