தமிழ்நாட்டில்
ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்!
வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்
தமிழ்நாட்டில் ரஜினிகாந்துக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் உள்ளன.
ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.
இந்த தகவலை அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணா
வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"தமிழ்நாட்டில் மட்டும் அங்கீகாரம் பெற்ற ரஜினி மன்றங்கள் 25 ஆயிரம்.
இப்போது அங்கீகாரம் பெறாத மன்றங்களையும் சேர்த்து 30 ஆயிரம்
மன்றங்கள் உள்ளன. பதிவை நிறுத்தியபிறகும், ரஜினி மேல் அன்பு
கொண்டவர்கள் மன்றங்களை தொடங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களுக்கு நாங்கள் பதிவு எண் கொடுக்கவில்லை என்றாலும்
இந்தியாவில் தமிழர்கள் பரவலாக இருக்கும் அத்தனை இடங்களிலும் ரஜினி
மன்றங்கள் தொடங்கிய வண்ணமாகத்தான் இருக்கிறார்கள்.
வெளிநாட்டுத் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் மன்றங்கள் அமைக்க
விரும்பி எங்களிடம் கேட்டு வருகிறார்கள். சமீபத்தில் அந்தமானில்
இருந்தும் இப்படி கேட்டார்கள்.
ஜப்பானில்
ஜப்பானில் "முத்து'' திரையிடப்பட்ட பிறகு அங்கு அவருக்கு
கிடைத்துள்ள ரசிகர்கள் - ரசிகைகள் ஏராளம். சினிமா மூலம் ரஜினி
சாருக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்துக்கள் இவர்கள்.
நாம் போற்றி வணங்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் "மாதா பிதா குரு
தெய்வம்'' என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த
வரிசையில் "மாதா பிதா குரு தெய்வத்துக்கு அடுத்த இடத்தில் ரஜினி
சாரை வைத்திருக்கிறேன். அவர் மூலம் கிடைத்த இந்த பொறுப்பை எனக்குக்
கிடைத்த பெரிய பாக்யமாக உணருகிறேன்.''
இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.
இணைய தளம்
ரஜினிகாந்த் பற்றிய விவரங்கள் அடங்கிய இணைய தளங்கள், நிறைய உள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து,
www.rajinifans.com என்ற இணைய தளத்தை
அமைத்துள்ளனர். ரஜினியின் வாழ்க்கைக் குறிப்பு, அவர் நடித்த படங்கள்,
சாதனைகள், பெற்ற விருதுகள் முதலான விவரங்கள் இதில் உள்ளன.
இந்த இணைய தளத்தின் புள்ளி விவர பகுதியை கவனிக்கும் சென்னையைச்
சேர்ந்த டி.வி.ஈ.ராஜேஷ் கூறியதாவது:-
"2002-ம் ஆண்டில், பாபா படம் வெளியான பிறகு, இந்த இணைய தளம்
தொடங்கப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஷாஜஹான் முயற்சியால் இது
உருவாயிற்று. ராம்கி, நடராஜன், சீனிவாசன், டி.வி.சுந்தர்
ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு உண்டு.
உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேர், இந்த இணைய தளத்தின்
உறுப்பினர்கள் ஆகியிருக்கிறோம். ரஜினியை பற்றிய தகவல்களை அவ்வப்போது
பரிமாறிக்கொள்வோம். தினமும் ஏராளமான பேர் இந்த இணைய தளத்தைப்
பார்க்கிறார்கள்.
ரஜினி மீது பற்று கொண்ட ரசிகர்கள், எவ்வித எதிர்பார்ப்புமின்றி
உருவாக்கிய இணையதளம் இது.
இணையதளத்தை உருவாக்கியதுடன் மட்டுமின்றி, சுனாமி ஏற்பட்டபோது, நிதி
திரட்டி வழங்கினோம். ரத்த தானமும் செய்து வருகிறோம்.''
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
99 தமிழ்ப்படங்கள்
"சிவாஜி'' உள்பட ரஜினிகாந்த் நடித்த தமிழ்ப்படங்கள் எண்ணிக்கை 99.
இவை தவிர 9 தமிழ்ப்படங்கள் உள்பட 19 படங் களில் கவுரவ வேடத்தில்
நடித்துள்ளார்.
பிற மொழிகளில் அவர் நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை: தெலுங்கு 16;
கன்னடம் 11; மலையாளம் 2; இந்தி 24; வங்காளம் 1; ஆங்கிலம் 1.
படையப்பா, அருணாச்சலம், பாபா, வள்ளி, மாவீரன் ஆகியவை ரஜினிகாந்த்
சொந்தமாகத் தயாரித்த படங்கள்.
விருதுகள்
தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, நடிகர் சங்கத்தின் "கலைச்செல்வம்''
விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
இவர் நடித்த படங்களில் முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், அவள்
அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகிறது ஆகியவை சிறந்த படத்துக்கான பரிசை
பெற்றன.
முள்ளும் மலரும், மூன்று முகம், முத்து ஆகியவற்றுக்காக தமிழக அரசின்
சிறந்த நடிகர் விருதைப் பெற்றார்.
இவர் நடித்த ஏராளமான படங்கள், பத்திரிகைகள், ரசிகர் சங்கங்கள்
ஆகியவற்றின் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளன.
சாதனை
"சந்திரமுகி'' 700 நாட்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
படையப்பா, பாட்ஷா, அருணாச்சலம், மன்னன் ஆகியவை 200 நாட்கள் ஓடியவை.
18 படங்கள் 25 வாரமும், 5 படங்கள் 150 நாட்களும், 36 படங்கள் நூறு
நாட்களும் ஓடியுள்ளன.
(நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி - நாளை)
***
ரஜினி பற்றி ரஜினி
வன்மு
* என்னுடைய படங்களில் வன்முறைகள் இருக்கலாம். ஆனால்,
அநியாயத்துக்காக வன்முறையில் ஈடுபடுவது மாதிரியான காட்சிகள்
இருக்காது. வன்முறையின் முடிவில், நடப்பது நல்லது என்கிற மாதிரிதான்
காட்சிகள் இருக்கும்.
கடவுளே காரணம்
* சினிமாவில் என் வெற்றிக்கு காரணம் கடவுள்தான். அதோடு என்
முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தன. கடவுளே எல்லாவற்றையும்
பார்த்துக் கொள்வார் என்று விட்டிருந்தால் நான் இன்னும்
கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில், அந்த
பத்திரமான உத்தியோகத்தை விட்டு விட்டு, தைரியமாக சென்னைக்கு வந்தது
என் முயற்சிதான்.
கசந்த காலம்
* என்னோட வாழ்க்கையின் கசந்த காலம் என்றால் 1978-ல் இருந்து
1981-ம் ஆண்டு வரையிலான பகுதிதான். 34 வயதுக்கு உள்ளாகவே ஆண்டவன்
எனக்கு எல்லாவித சந்தோஷங்களையும், எல்லாவித கஷ்டங்களையும்
கொடுத்துவிட்டான். வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதைப்
பார்த்துவிட்டேன். சகல வசதிகளுடன் சுகம் என்றால் என்னவென்றும்
பார்த்துவிட்டேன்.
நான் போகும் பாதை
* ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக்கொண்டால், உலகம் தானாகவே
திருந்திவிடும். அதன்படி நான் முதலில் என்னைத் திருத்திக்
கொள்கிறேன். என் மனச்சாட்சியின்படி வாழ்கிறேன். மற்றவர்களை
திருத்துவது என் பிரச்சினை அல்ல. நான் யாருடைய பாதையிலும்
போகமாட்டேன்; மற்றவர்களை என் பாதைக்கு கூப்பிட மாட்டேன்.
பாவத்தின் சம்பளம்
* போன பிறவியில் நிறைய தப்பு பண்ணினவங்களுக்கு ஆண்டவன் இந்தப்
பிறவியில் நிறைய குழந்தைகளை கொடுத்திடறான். இன்னும் கொஞ்சம் அதிகமா
தப்பு பண்ணினவங்களுக்கு, பணம், புகழ் இரண்டையும் கொடுத்திடறான்.
அதைவிட அதிகமா தப்பு பண்ணினவங்களைத் தூக்கி அரசியலில் போட்டுடறான்!
நான் இரண்டாவது ரகம் போல இருக்கு.
உழைப்பு
* எல்லோரும் உழைக்கிறாங்க. நானும்தான் உழைக்கிறேன். மற்றபடி நான்
ஒருத்தன் மட்டும் ஸ்பெஷலா உழைக்கலையே! ஒருவேளை, மத்தவங்களைவிட,
எனக்கு ஆண்டவனோட ஆசீர்வாதம் கூடுதலா இருக்கலாம்.
>>> Part 110
|