"ரஜினிகாந்த்
சிறந்த நடிகர்; மாமனிதர்''
நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி
ரஜினிகாந்தின் நடிப்புத்
திறமையையும், மனித நேயப் பண்புகளையும் நடிகர் - நடிகைகள் பாராட்டிப்
புகழாரம் சூட்டினார்கள்.
பிரபு
ரஜினியுடன் "தர்மத்தின் தலைவன்'', "குருசிஷ்யன்'', "சந்திரமுகி''
உள்பட சில படங்களில் இணைந்து நடித்த நடிகர் பிரபு கூறியதாவது:-
"அன்புக்குரிய அண்ணன் ரஜினி பற்றி சொல்வதானால், அது ஒரு நாளில்
முடிந்து விடக்கூடியதல்ல. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும்,
அவரைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் நடித்த "ராகங்கள்
மாறுவதில்லை'' வெளிவந்த சமயம். ரஜினி, அந்தப் படத்தை மிகவும்
ரசித்துப் பார்த்திருக்க வேண்டும். "பிரபு, நீங்கள் நல்லா `பைட்'
பண்றீங்க. உங்க டான்ஸ் மூவ்மெண்ட் கூட அழகா இருக்கிறது'' என்று
சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.
எத்தனை நடிகர்களிடம் இந்த விரிந்த மனப்பான்மை - சக நடிகர்களை
தட்டிக் கொடுக்கும் தாராள மனம் இருக்கிறது?
"தர்மத்தின் தலைவன்'' படத்தில் முதன் முதலாக நாங்கள் சேர்ந்து
நடித்தோம்.
அப்பாவுடன் முதன் முதலாக "சங்கிலி'' படத்தில் நடித்தபோது மிகவும்
பயமாக இருந்தது. ஆனால் ரஜினியுடன் நடிக்கும்போது ரொம்ப ஆர்வமாக
இருந்தது.
"நம்ம நடிப்பை ரஜினி எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணப்போகிறார்? அவர் கூட
நடிக்கும்போது, நம் அசைவுகள் எப்படி இருக்கும்?'' என்றெல்லாம் முதல்
நாளில் இருந்தே முடுக்கிவிட்டேன், கற்பனைக் குதிரையை. அவ்வளவு
ஆர்வம்!
ஏராளமான படங்களில் நடித்து முடித்த பிறகும், ஷாட் முடிந்ததும் "நல்லா
பண்ணினேனா?'' என்று மற்றவர்களிடம் அப்பா கேட்டுத் தெரிந்து கொள்வார்.
இதே பழக்கம் ரஜினிக்கும்! அவரது அமோக வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.
அப்பாவைப் பற்றி அவர் சொல்லும் ஒரே வார்த்தை "அடேங்கப்பா!'' இந்த "அடேங்கப்பா''வில்தான்
எத்தனை ஆழமான விமர்சனம் அடங்கியிருக்கிறது! அடேங்கப்பா!
நட்புக்கு மதிப்பு கொடுப்பவர் ரஜினி. போலியும், பொய்ப்பூச்சும்
படியாத தூய்மையான நட்பை அவரிடம் பார்க்கிறேன். வயது, வசதி, பேதம்
பார்க்காமல் அனைவருடனும் நட்புணர்ச்சியுடன் பழகும் அன்புள்ளம்
கொண்டவர், ரஜினி.''
இவ்வாறு பிரபு கூறினார்.
ரோஜா
"வீரா'', "உழைப்பாளி'' ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த
நடிகை ரோஜா கூறியதாவது:-
"என்னுடைய கேரியரில் மறக்க முடியாத மனிதர்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்களில் முதன்மையானவர் யார் என்றால் ரஜினி சாரைத்தான் சொல்வேன்.
அதுமட்டுமல்ல. என் வாழ்க்கையில் நான் வியந்த ஒரே மனிதரும் அவர்தான்.
எப்படி என்று சொல்கிறேன்.
நடிப்பு என்பது எல்லோருக்கும் வாய்த்து விடாது. என்னைப் பொறுத்தவரை
அது ஒரு வரம். நடிப்பதற்காக மேக்கப் போட்டுக்கொண்டு செட்டுக்கு
வந்துவிட்டால் சொந்த சோகங்களை எல்லாம் மறந்து விடவேண்டும். வீட்டை
நினைத்துக் கொண்டிருந்தால் நடிப்பில் கோட்டை விட்டு விடுவோம்.
அதே சமயம் எல்லோராலும் இப்படி டெடிகேஷனாக இருந்துவிட முடியாது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் என்னால் கூட முடியாது. நானும்
சராசரியான மனுஷிதானே?
செட்டுக்குள் வரும்போது சில சமயம் சொந்தப் பிரச்சினைகள் மண்டையைக்
குடைந்து கொண்டே இருக்கும். அதனால் இன்வால்வ் ஆகி நடிக்க முடியாது.
அப்படியான சந்தர்ப்பங்களில் ரீடேக் வாங்க வேண்டியதாகி விடும்.
என்னால் மனதை ஒருமுகப்படுத்தவே முடியாது.
இப்படி இருந்த நான், இப்போது எப்படி இருக்கிறேன் தெரியுமா? என்
சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகம், கஷ்டம் இருந்தாலும்
செட்டில் கரெக்ட்டாக இருக்கிறேன். என் பிரச்சினைகளை என் முகத்தில்
கண்டுபிடிக்கவே முடியாது. இந்த பக்குவத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது
ரஜினி சார்தான்.
அவர் படத்தில் படு ஜாலியாக நடிப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் படு
சீரியசான மனிதர். நடித்து முடித்து விட்டு சேரில் வந்து உட்கார்ந்து,
சிகரெட்டை பற்ற வைப்பார். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும்.
அவரது சிந்தனைகள் எங்கோ இருக்கும். படு சீரியசாக ஏதோ சிந்தனையில்
ஆழ்ந்திருப்பார். அவர் அப்படி உட்கார்ந்திருக்கும்போது எதிரில் எது
நடந்தாலும் அவருக்குத் தெரியாது. தவத்தில் இருப்பது போல் இருப்பார்.
அதே சமயம், "ஷாட் ரெடி'' என்று குரல் கேட்டதும், மான் போல துள்ளிக்
குதித்து எழுந்து, படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.''
இவ்வாறு ரோஜா கூறினார்.
வடிவேலு
"சந்திரமுகி'', "முத்து'', "வள்ளி'' ஆகிய படங்களில் ரஜினியுடன்
சேர்ந்து நடித்த வடிவேலு கூறியதாவது:-
"என்னை வளர்த்துவிட்ட மவராசன்கள்ல ரஜினி சாரும் ஒருத்தர்.
மதுரையில் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு
ராஜ்கிரண் சார் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார். என் ராசாவின்
மனசிலே, அரண்மனைக்கிளி படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து
அறிமுகப்படுத்தினார்.
அந்த இரு படங்கள் வெளிவந்ததும் எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.
பாராட்டுகள் கிடைத்த அளவுக்கு வருமானமோ, நகைச்சுவை நடிகன் என்ற
அந்தஸ்தோ கிடைக்கவில்லை. அப்படி இருந்த என்னை ரஜினி சார்தான் கை
தூக்கிவிட்டார். "வள்ளி'' படத்திற்கு என்னை அழைத்து வாய்ப்புக்
கொடுத்தார்.
அவர் மட்டும் சான்ஸ் கொடுக்கவில்லை என்றால் என் வளர்ச்சி
கேள்விக்குறியாகி இருக்கும்.
"வள்ளி''யில் என்னை அவர் நடிக்க வைத்த பிறகுதான் திரையுலகின் பார்வை
என் மீது திரும்பியது. நிறைய படங்களும் என்னைத் தேடி வர ஆரம்பித்தன.
அதற்காக ரஜினி சாருக்கு அன்றும் இன்றும் என்றும் நன்றிக்கடன்
பட்டிருக்கிறேன்.
மதுரையில் இருந்தபோது தீவிர சினிமா பைத்தியமாக இருந்தேன். ஒரு
படத்தைக்கூட மிஸ் பண்ணமாட்டேன். பகல் முழுக்க கண்ணாடி கடையில் வேலை
பார்த்துவிட்டு, ராத்திரியானால் சினிமாவுக்குப் போய்விடுவேன்.
அதிலும் ரஜினி சார் படம் என்றால் முதல் நாள், முதல் காட்சியே
பார்த்துவிட்டுத்தான் மறுவேலை.
அந்தளவுக்கு ரஜினி சார் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தேன்.
திரையில் பார்த்து வியந்த ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்கும்
பாக்கியம் கிடைக்கும் என்று கனவிலும் நான் நினைத்துப் பார்த்தது
இல்லை.
அதனாலோ என்னவோ வள்ளி படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது என்னால்
நம்பவே முடியவில்லை. ஷூட்டிங் ஆரம்பித்து, கேமரா முன் நின்றபோதுதான்
எனக்கு நம்பிக்கையே வந்தது.
முதல் நாள் ரஜினி சாரை பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை.
சினிமாவில் ஜாலியாக நடிக்கும் அவர் நேரில் ரொம்ப சீரியசாக இருந்தார்.
அதனால் அவர் நம்மிடம் பேசுவாரோ என்னவோ என்ற அச்சத்துடன் கொஞ்சம்
தள்ளியே இருந்தேன். அதைக் கவனித்த ரஜினி சார் என்னைக் கூப்பிட்டு
அவர் அருகிலேயே உட்கார வைத்துக்கொண்டார்.
அதுமட்டுமல்ல, என்னைப் பற்றியும் என் குடும்பப் பின்னணி பற்றியும்
கேட்டுத் தெரிந்து கொண்டார். நான் நடித்த படங்களை எல்லாம்
பார்த்ததாகவும், என் நடிப்பு வித்தியாசமாக இருப்பதாகவும்
பாராட்டினார். அதோடு `சினிமாவில் நீடித்து நிற்க வேண்டும் என்றால்
நம்முடைய குணம் நல்ல மாதிரி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு
மரியாதை கொடுக்க வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கினார்.
இந்த நிமிஷம் வரைக்கும் சினிமாவில் எதையும் சாதித்ததாக நான்
நினைக்கவில்லை. ரஜினி சாரின் அன்பைப் பெற்றது மட்டுமே என் சாதனை!''
இவ்வாறு வடிவேலு கூறினார்.
>>> Part 111
|