பிரமாண்டமாக
உருவாகியுள்ள "சிவாஜி''
ரஜினி படமா? ஷங்கர் படமா?
டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''
ஏவி.எம். தயாரிப்பான "சிவாஜி'',
ரஜினி பாணி படமா? அல்லது டைரக்டர் ஷங்கர் பாணி படமா? - இதற்கு
ஷங்கர் பதில் அளித்துள்ளார்.
இதற்கு முன், ஜெமினியின் "சந்திரலேகா'', எம்.ஜி.ஆரின் "நாடோடி
மன்னன்'', சிவாஜியின் "தில்லானா மோகனாம்பாள்'' ஆகிய படங்கள்
வெளிவந்தபோது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும், பரபரப்பும் அதிகமாக
இருந்தன. அதைவிட அதிகமான பரபரப்பை இப்போது "சிவாஜி''
உண்டாக்கியிருக்கிறது.
"மூவர்'' கூட்டணி
பொதுவாக, பட அதிபர்கள்தான் தங்கள் படத்துக்கு நடிகர்களை தேர்வு
செய்வார்கள்.
தன்னுடைய படத்துக்கு பட அதிபரை தேர்வு செய்யும் நடிகர், அகில
உலகிலும் ரஜினி ஒருவர்தான்! ஷங்கர் டைரக்ஷனில் நடிப்பது என்று ரஜினி
முடிவு செய்த அதே நிமிடத்தில், இந்தப்படத்தை ஏவி.எம். தயாரிக்க
வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆசியாவின் தலைசிறந்த நடிகராக புகழ் பெற்றுள்ள ரஜினி, பிரமாண்டமான
முறையில் படத்தை எடுப்பதில் முத்திரை பதித்த ஷங்கர், பாரம்பரிய
சிறப்பு மிக்க ஏவி.எம்.சரவணன் இந்த "மூவர் கூட்டணி'' இணைந்துள்ளதால்,
"சிவாஜி'' படத்துக்கான எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருப்பதில்
வியப்பில்லை.
1 1/2 ஆண்டு
"சிவாஜி'' பட பூஜை 28-11-2005ல் நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டிலும்,
இந்தியாவின் பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்தது.
இதில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரேயா. ஒரு பாடலுக்கு நடனம்: நயன்தாரா.
இசை: ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள்: வாலி, வைரமுத்து, பா.விஜய்,
நா.முத்துக்குமார். வசனம் சுஜாதா.
படம் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளிவருவதாக இருந்தது. ஆனால், எடிட்டிங்,
டப்பிங் போன்ற வேலைகள் முடிவடையாததால் அடுத்த மாதம் (மே)
வெளிவருகிறது.
முதல் பிரதி தயாராகும்வரை, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கக்கூடாது
என்பது ஷங்கரின் பாலிசி.
ஷங்கர் பேட்டி
"சிவாஜி'' பட அனுபவங்கள் பற்றி ஷங்கர் கூறியதாவது:-
"பொதுவாக, கதையைத் தயார் செய்து, அதற்கேற்ற நடிகர் - நடிகைகளைத்
தேர்வு செய்வோம். `சிவாஜி'யைப் பொருத்தவரை, இது ரஜினி சாருக்காகவே
உருவாக்கப்பட்ட கதை.
ரஜினிக்கு ஒரு இமேஜ் உண்டு. அவரிடம் ரசிகர்கள் நிறைய
எதிர்பார்ப்பார்கள். அதே மாதிரி, என் படங்கள் பற்றியும்
ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் உண்டு. இருதரப்பு ரசிகர்களையும்
திருப்திபடுத்தும் விதத்தில் இப்படம் இருக்கும். அதாவது இது ரஜினி
படமாகவும் இருக்கும்; ஷங்கர் படமாகவும் இருக்கும்.
ரஜினிக்கு எந்தவிதமான `கெட்டப்' இருக்க வேண்டும் என்பதில் தீவிர
கவனம் செலுத்தினோம். அதாவது, ரஜினி பல படங்களில் - பல்வேறு
தோற்றங்களில் நடித்த ஸ்டில்களை எல்லாம் சேகரித்தோம். அவருக்கு எந்த
மாதிரி உடை நன்றாக இருக்கும்? எந்த மாதிரி "விக்'' அழகாக இருக்கும்?
என்றெல்லாம் யோசித்து, உடைகளையும், "விக்''குகளையும்
தேர்ந்தெடுத்தோம். "பில்லா'' காலத்தில் ரஜினி எப்படி இருந்தாரோ
அத்தகைய தோற்றத்துடன், இளமையாக இப்படத்தில் ரஜினி தோன்றுவார்.
இந்தியாவின் மிகப்பெரிய டெக்னீஷியன்கள், இந்தப்படத்தின்
வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். ரஜினி இதுவரை நடித்திராத புதிய
கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
இவ்வளவு பெரிய நடிகர், ஒரு புது நடிகர் போல ஒத்துழைப்பு தந்தார்.
மிக அதிக நாள் நடித்தார். ஆனால் படப்பிடிப்பு முடிந்தபோது, "நேரம்
போனதே தெரியவில்லை'' என்றார்.
கண்ணாடி "செட்''
"சஹாரா பூக்கள் பூத்ததோ'' என்ற வைரமுத்துவின் பாடல் காட்சிக்காக,
இதுவரை இல்லாத அளவுக்கு கண்ணாடியிலேயே `செட்' போட்டோம். கண்ணாடி
செட் போடுவதும் சரி, அதில் படப்பிடிப்பு நடத்துவதும் சரி; ரொம்ப
சிரமமான காரியம்.
`லைட்டிங்' பண்ணக்கூட முடியாது. எல்லா இடத்திலேயும், பிரதிபலிப்பு
ஏற்படும். முதலில் தயங்கின கே.வி.ஆனந்த், பிறகு அதையெல்லாம்
சமாளித்து படம் எடுத்திருக்கிறார்.
இதேபோல், "வாஜி, வாஜி, சிவாஜி'' பாட்டுக்காக ஐதராபாத்தில் ஒரு
பெரிய அரண்மனை செட் போட்டோம். அவ்வளவு பிரமாண்டமான `செட்' போட வேறு
எங்கேயும் புளோர் (படப்பிடிப்பு தளம்) கிடையாது. இதுவரை எந்தப்
படத்துக்கும், இவ்வளவு நுணுக்கமான - பிரமாண்டமான `செட்' போடப்பட்டதே
இல்லை. படப்பிடிப்பை நடத்திய எனக்கே அந்த பிரமிப்பு இன்னும்
நீங்கவில்லை.
அந்த செட்டை ரொம்ப அற்புதமாக போட்டிருக்கிறார், தோட்டா தரணி.
இதற்காகவே, அவருக்கு தேசிய விருது கிடைக்கலாம்.
கதை என்ன?
சிவாஜி படத்தின் கதை பற்றி பல்வேறு ஊகங்களும், கற்பனைகளும்
பத்திரிகைகளிலும் வருகின்றன.
நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒருவர் பலவித கஷ் டங்களையும்,
தடைகளையும் மீறி ஜெயிப்பதுதான் கதை.
படத்தின் முன்பகுதியில் கதையும், காமெடியும் இருக்கும். பிற்பகுதி
அதிரடியாக இருக்கும்.''
இவ்வாறு ஷங்கர் கூறினார்.
(ரஜினியின் குடும்பம் - நாளை)
***
ரஜினி `சுயதரிசனம்'
"தமிழ் மக்களின் நெஞ்சங்கள், ஈரம் உள்ள இரும்பு நெஞ்சங்கள். அந்த
நெஞ்சுக்குள்ளே போவதுதான் கஷ்டம். ஒரு தடவை உள்ளே போயிட்டா, யாரும்
வெளியே எடுக்க முடியாது.''
- ரஜினிகாந்த்.
>>> Part 112
|