சூப்பர்
ஸ்டாரின் சூப்பர் குடும்பம்
சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா தம்பதிகளுக்கு 2 மகள்கள். மூத்த
மகளுக்கு திருமணம் ஆகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திரை உலகில் எதிர் நீச்சல் போட்டு, சூப்பர் ஸ்டாராக உயர்ந்த
ரஜினியின் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடந்தது. மணமகள்
லதா, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மைத்துனி.
திருமணத்தின்போது, லதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் "பி.ஏ'' இறுதி
ஆண்டு படித்துக்கொண்டு இருந்தார். திருமணத்துக்குப்பிறகும்,
2 மாதம் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்று படித்து, பரீட்சை எழுதி, "பி.ஏ''
பட்டம் பெற்றார்.
"ஜில்லு''
இனிய சுபாவமும், கருணை உள்ளமும் கொண்டவர், லதா. அவரை ரஜினி
செல்லமாக "ஜில்லு'' என்று அழைப்பது வழக்கம்.
லதா இனிமையாகப் பாடக்கூடியவர். சில படங்களில் பாடியிருக்கிறார்.
குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை போதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன்
"ஆஸ்ரம்'' என்ற பள்ளியை நடத்தி வருகிறார்.
2 மகள்கள்
ரஜினி - லதா தம்பதிகளுக்கு, மூத்த மகள் ஐஸ்வர்யா 1982 ஜனவரி
1-ந்தேதி பிறந்தார். இரண்டாவது மகள் சவுந்தர்யா 20-9-1985-ல்
பிறந்தார்.
ஐஸ்வர்யா, "கார்பரேட் லா'' படித்தவர். சவுந்தர்யா, "மல்டி மீடியா
கிராபிக்ஸ்'' படித்தவர்.
திருமணம்
ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுசுக்கும் 2004 நவம்பர் 18-ந்தேதி
திருமணம் நடைபெற்றது. இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த காதல்
திருமணம்.
ரஜினியின் ஆசான் கே.பாலசந்தர், தாலியை எடுத்துக்கொடுக்க, அதை தனுஷ்
வாங்கி மணமகள் கழுத்தில் கட்டினார்.
திருமணத்துக்கு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா வந்திருந்து
மணமக்களை வாழ்த்தினார்.
திருமண வரவேற்புக்கு தி.மு.கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி வந்து
வாழ்த்தினார்.
மற்றும் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ராஜா, அன்றைய தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி
சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் கமலஹாசன், சிவகுமார், விஜய், விக்ரம்,
`ஜெயம்' ரவி, நடிகைகள் குஷ்பு, மனோரமா, பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன்,
ஆர்.பி.சவுத்ரி, கேயார், ராமா நாயுடு உள்பட பிரமுகர்கள், கலை
உலகத்தினர் பெருந்திரளாக வந்து வாழ்த்தினர்.
பேரன்
ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பெயர் `யாத்ரா.'
பேரன் யாத்ரா மீது ரஜினிக்கு கொள்ளைப் பிரியம். படப்பிடிப்பு
இல்லாத நேரங்களில், பேரனை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவதிலேயே
அதிக நேரம் செலவிடுகிறார்.
பத்மபூஷண்
தமிழக அரசின் "கலைமாமணி'' விருதைப் பெற்ற ரஜினிகாந்த், மத்திய
அரசின் "பத்மபூஷண்'' விருதையும் பெற்றுள்ளார்.
2000-வது ஆண்டு மார்ச் 30-ந்தேதி நடைபெற்ற விழாவில், ரஜினிக்கு
இந்த விருதை அன்றைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வழங்கினார்.
ரஜினியின் ஆசை
ரஜினியை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பட
அதிபர்களுக்கும் உண்டு. ரஜினிக்கு கலைஞர் கருணாநிதி கதை - வசனத்தில்
நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அது இன்றுவரை நிறைவேறவில்லை.
வீடு
ரஜினியின் வீடு, போயஸ் தோட்டத்தில் உள்ளது. வீட்டின் பெயர் "பிருந்தாவனம்.''
இந்த வீட்டின் முகப்பில் "வாய்மையே வெல்லும்'', "சத்யமேவஜெயதே''
என்ற வாசகங்கள் முன்பு இருந்தன. இப்போது, "வாழ்க வளமுடன்'' என்ற
வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் அறைக்கு யார் சென்றாலும் (மனைவியே ஆனாலும்) கதவைத்தட்டி
அவர் "கம் இன்'' என்று குரல் கொடுத்த பிறகே உள்ளே நுழையவேண்டும்.
வீட்டுக்கு வருபவர்களை ஜில்லென்ற வெந்தய மோர் கொடுத்து
உபசரிக்கிறார். வெந்தயத்தை ஊற வைத்து, முளை கட்டி, காய வைத்து பொடி
செய்து, இளம் மோரில் கலந்து குடிப்பது ரஜினிக்குப் பிடிக்கும்.
முதல் கார்
ரஜினி, தான் முதன் முதலாக வாங்கிய காரை இன்னமும் பத்திரமாக
வைத்திருக்கிறார்.
முன்பெல்லாம் ரஜினியே காரை ஓட்டிச்செல்வது வழக்கம். இப்போது டிரைவர்
ஓட்டுகிறார்.
காரில் போகும்போது, ரஜினீஷ், ராமகிருஷ்ணர் போன்றவர்களின் ஆன்மீக
புத்தகங்களை அதிகம் படிப்பது வழக்கம். நடிகரும் டைரக்டருமான
மணிவண்ணன், பெரியார் எழுதிய சில நூல்களைக் கொடுக்க, அவற்றைப்
படித்த ரஜினி, "பெரியார் மிகப்பெரிய மனிதர்'' என்று புகழ்ந்தார்.
கோவில்
முன்பெல்லாம் திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திரா கோவிலுக்கும்,
மைலாப்பூரில் உள்ள ஷீரடி சாயிபாபா கோவிலுக்கும் அதிகாலையிலேயே
சென்று தரிசனம் செய்வது வழக்கம். அவர் எங்கே போனாலும் கூட்டம் கூடி
விடுவதால், இப்போது தியானம், பூஜை எல்லாம் வீட்டில்தான்.
>>> Part 113
|