`சூப்பர் ஸ்டார்'
ரஜினிகாந்த் ஜாதகம்
அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்
ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா என்று நாடே எதிர்பார்க்கிறது.
நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு (அதாவது ஆகஸ்டு
4-ந்தேதிக்குப் பிறகு) இதுபற்றி ரஜினி முடிவு செய்வார்.
ஜாதகம்
ரஜினிகாந்த் ஜாதகத்தை "ஜோதிடக் கலைமணி'', "எண் கலை வித்தகர்'' என்று
புகழ் பெற்றுள்ள சிவல்புரி சிங்காரம் கணித்துள்ளார்.
ரஜினியின் ஜாதக சிறப்புகள் பற்றி அவர் கூறியதாவது:-
1975-ம் ஆண்டு "அபூர்வ ராகங்களின்'' மூலமாக திரையுலகில் பிரவேசித்து
தொடர்ந்து 32 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்காது இடம் பெற்ற `சூப்பர்
ஸ்டார்' அவர்களின் ஜாதகம் ஒரு சூப்பரான ஜாதகம்தான்.
`நான் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொல்லியதற்கு சமம்' என்று
சொல்லிய வாசகம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
யோக கிரகங்கள்
உழைப்பால் உயர்ந்து, வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏறிய
ரஜினிகாந்த் ஜாதகத்தில் யோகத்தை வரவழைக்கும் கிரகங்கள் இடம்
பெற்றிருக்கின்றன.
எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும், அதில் சினிமா நட்சத்திரங்களுக்கு
உரிய பெருமையே தனிதான். அவர்களது நட்சத்திரம்தான் எங்களுக்கும்
என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்வதை அறிந்திருப்பீர்கள்.
சூப்பர் ஸ்டார் பிறந்த நட்சத்திரம் திருவோணம். `திரு' என்று அடைமொழி
உள்ள நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒன்று திருவாதிரை, மற்றொன்று
திருவோணம்.
திருமால் பிறந்த நட்சத்திரம் திருவோணம். சிவபெருமானுக்கு உகந்தது
திருவாதிரை. அந்த அடிப்படையில் விஷ்ணு அம்சத்தில் பிறந்தவர்தான்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.
அவரது பெயரில் `காந்த்' என்று இருப்பதால் காந்தத்திற்குரிய ஈர்ப்பு
சக்தி உண்டு. எனவே, லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை ஈர்க்கும்
விதத்தில் அவர் நடிப்பு அமைய அவரது பெயரும் ஒரு காரணமாக
விளங்குகிறது.
ஆன்மீகச் சிந்தனை
சிம்ம லக்னம், லக்னத்தில் கேது, எனவே ஆன்மீகச் சிந்தனை அவருக்கு
அதிகம் உண்டு. குருவின் பார்வை லக்னத்தில் பதிவதால் மனித
தெய்வங்களையும், மகான்களையும், அருளாளர்களையும் அவர் நேசித்தும்,
பூசித்தும், அவர்களது கருத்துக்களை வாசித்தும், தனக்கென ஒரு தனி
இடத்தைப் பிடித்து வரலாற்றுப் பொன்னேட்டில் இடம் பெற முடிந்தது.
கலைக்கு அதிபதியான சுக்ரன் சகாயஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகிய
இடங்களுக்கு அதிபதியாக விளங்கி, தனலாபாதிபதி புதனுடன் இணைந்து
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் பூர்வ புண்ணியத்தின் பலனாய்
கலைத்துறையில் ஈடுபட்டு சூப்பர் ஸ்டாராக புகழ் பெறும் யோகத்தைத்
தந்தது.
அது மட்டுமல்லாமல், புத - சுக்ர யோகமும் இருப்பதால், செல்வம், வசதி,
வாய்ப்புகள் போன்றவற்றைக் கொடுக்கும் கோடீஸ்வர யோகமும் இவருக்கு
வந்து சேருகிறது.
தைரியம்
லக்னாதிபதி சூரியன் விருச்சிகத்தில் சஞ்சரிக்கிறார். ராஜகிரகம்
சூரியனின் விருச்சிக சஞ்சாரம் அரசியல் துறையில் அவருக்கு அதனுடைய
ஆதிபத்யம் வரும்பொழுது பிரகாசிக்க வைக்கும். அதே நேரத்தில்,
ஆணையிடக்கூடிய `தைரிய காரகன்' செவ்வாய் 6-ம் இடத்தில் உச்சம்
பெறுவது மிகுந்த யோகம்தான். `அதிகாரத்துவ யோகம்' இதன் மூலம்
அவருக்கு அமைகிறது.
ராகு - கேதுக்களுக்கு இடையில் சகல கிரகங்களும் சஞ்சரிப்பதால் அது `கால
சர்ப்ப' யோகமாகும். இளமைக் காலத்தில் சோதனையும், 30 வயதிற்கு மேல்
சாதனையும் நிகழ்த்தினார்.
4, 9-க்கு அதிபதியான செவ்வாய் 6-ல் உச்சம் பெற்று 9-ம் இடத்தைப்
பார்ப்பதால் போக்குவரத்துத் துறையில் ஆரம்ப காலத்தில் பணியாற்றும்
வாய்ப்பு இவருக்கு அமைந்தது.
சந்திரனுக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்கும் புதனும்,
சுக்ரனும் இணைந்து தர்மகர்மாதிபதி யோகத்தை உருவாக்கி குரு வீட்டில்
சஞ்சரிப்பதால், தான தர்மங்கள் செய்யும் குணம் இவருக்கு இயற்கையிலேயே
அமைந்தது.
பதவிக்கு ஆசைப்படாமல், உதவி செய்ய ஆசைப்படும் உத்தமராக விளங்க
காரணம் `சந்திர மங்கள யோகம்' இவரது ஜாதகத்தில் அமைந்துள்ளது.
சப்தம ஸ்தானத்தில் உள்ள ராகு பலம் பெற்றதால்தான் காதல் மணமாக,
கலப்பு மணத்தை செய்து கொண்டார். புத்திர ஸ்தானாதிபதி குருவும்,
ராகுவுடன் கூடியதால் இவரது மகளும் காதல் கலப்பு மணம் செய்து
கொள்ளும் வாய்ப்பு உருவாகியது.
உலகப்புகழ்
புத்திர ஸ்தானத்தில் கலைஞன் சுக்ரனும், வித்யாகாரகன் புதனும்
கூடியதால் இவரது இரண்டாவது புதல்வியும் கலைத்துறையில்
பிரகாசிப்பதோடு, தந்தையின் புகழைப் போல தானும் உலகளாவிய புகழ்
பெறும் சூழ்நிலை உருவாகப் போகிறது.
தற்சமயம் இவருக்கு சனி திசை நடக்கிறது. வாக்கு ஸ்தானத்தில் சனி பலம்
பெறுவதால் இவரது சொல்வாக்கை கேட்க காத்திருப்பவர்களின் எண்ணிக்கை
கோடிக்கணக்கில் அமையப்போகிறது.
ராஜயோகம்
12-க்கு அதிபதி சந்திரன் 6-ல் இருப்பதால், `கெட்டவன் கெட்டிடில்
கிட்டிடும் ராஜயோகம்' என்ற வாசகத்தின்படி `ராஜயோக வாழ்க்கை'
இவருக்கு அமைந்தது.
வீடு, நில புலன்களின் சேர்க்கை, அதிர்ஷ்ட வாய்ப்புகள், வாகன யோகம்,
ஆன்மீகச் சிந்தனை, மனித நேயம், அள்ளிக்கொடுக்கும் நல்ல உள்ளம்,
நன்றி மறவாத்தன்மை, எதிரிகளை வெல்லும் ஆற்றல், தர்ம சிந்தனை, புகழ்,
கீர்த்தி, பொது நலத்தில் அக்கறை, அனைத்தும் ஜென்மக் கேதுவினால்,
சிறப்பாக அமைகிறது. தர்ம ஸ்தாபனங்களுக்கு பொறுப்பேற்கும் வாய்ப்பும்
வழங்கும்.
அரசியலா? ஆன்மீகமா?
துரித முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பதன் மூலமும், சொந்த எண்ணங்களுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமும், சர்ப்ப சாந்தி வழிபாடுகளின்
மூலமும், நடக்கும் சனி திசையை நல்ல திசையாக மாற்றியமைத்துக் கொள்ள
இயலும். இந்த ஆண்டு ஆகஸ்டு 4-ந்தேதி நிகழும் சனிப்பெயர்ச்சிக்கு
பிறகே, சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு அரசியல் வாழ்க்கையா? ஆன்மீக
வாழ்க்கையா? என்பதை அறிந்து கொள்ள இயலும்!
`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு தொடர், இத்துடன்
நிறைவு பெறுகிறது.
>>> END
|