|
"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம்
"அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தது
கே.பாலசந்தர் டைரக்ட் செய்த "மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய
வேடம் ஏற்று நடித்தார், ரஜினி. "அவர்கள்'' படத்தின் மூலம்
நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.
"அபூர்வராகங்கள்'' படம் வெளிவந்த பிறகும், ரஜினிக்கு புதிய படங்கள்
எதுவும் `புக்' ஆகவில்லை.
ஆயினும், அவரை முன்னணி நட்சத்திரமாக்க உறுதி கொண்டிருந்த டைரக்டர்
கே.பாலசந்தர், ரஜினிகாந்துக்கு முக்கியத்துவம் கொடுத்து "மூன்று
முடிச்சு'' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.
இந்தப் படத்தில் கமலஹாசன் இடம் பெற்றார் என்றாலும், அது கவுரவ வேடம்
போன்றதுதான். படத்தின் தொடக்கத்திலேயே அவர் இறந்து விடுவார்.
படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில்
நடித்திருந்த அவர், கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.
படத்தில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் நண்பர்கள். இருவருமே ஸ்ரீதேவியை
காதலிப்பார்கள். ஆனால், ஸ்ரீதேவியின் மனதில் இடம் பெற்றது
கமலஹாசன்தான். இதனால், கமல் மீது ரஜினி ஆத்திரம் கொள்வார்.
ஒருநாள், இவர்கள் மூவரும் படகில் சென்று கொண்டிருக்கும்போது,
கமலஹாசன் தவறி ஏரியில் விழுந்து விடுவார். அவரை காப்பாற்றும்படி
ஸ்ரீதேவி மன்றாடியும், ரஜினி மறுத்துவிடுவார்.
இந்த நிகழ்ச்சி, ஸ்ரீதேவி யின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடும்.
தன்னை ரஜினி வெறித்தனமாக காதலிப்பதால்தான், அதற்குப் போட்டியாக
இருக்கும் கமலஹாசன் சாகட்டும் என்று ஏரியில் மூழ்கச்
செய்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார்.
இதற்கு அவரை பழிவாங்கத் தீர்மானிக்கும் ஸ்ரீதேவி, ரஜினியின்
தந்தையையே (கல்கத்தா விஸ்வநாதன்) மணந்து கொள்கிறார்.
கடைசியில் ரஜினி மனம் திருந்துவதோடு படம் முடிவடையும்.
ரஜினியின் `மனச்சாட்சி'யாக டைரக்டர் நட்ராஜ் நடித்திருந்தார்.
ரஜினியுடன் மனச்சாட்சி அடிக்கடி பேசுவதும், பாடுவதும் புதுமையானவை.
`சிகரெட்' ஸ்டைல்
ரஜினிகாந்த் ஆன்டி ஹீரோவாக சிறப்பாக நடித்திருந்தார்.
சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு, வாய்க்கு கொண்டு வரும் ஸ்டைலை
இந்தப் படத்தில்தான் ரஜினி அறிமுகம் செய்தார்.
22-10-1976 அன்று இந்தப்படம் ரிலீஸ் ஆயிற்று. படம் பெரிய வெற்றி
அடையவில்லை என்றாலும், நன்றாகவே ஓடியது. ரஜினியின் ஸ்டைல்கள்
ரசிகர்களைக் கவர்ந்தன. `யார் இந்த ரஜினி? புதுமாதிரி நடிக்கிறாரே?'
என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். ரஜினியின் பேட்டிகளும்,
படங்களும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
இந்தக் காலக்கட்டத்தில், "கதா சங்கமா'' என்ற கன்னடப்படத்திலும், "அந்துலேனி
கதா'' என்ற தெலுங்குப் படத்திலும் ரஜினி நடித்தார். "அவள் ஒரு
தொடர்கதை'' படத்தின் தெலுங்குப் பதிப்புதான் "அந்துலேனி கதா.''
"கதாசங்கமா'' படத்தை புட்டண்ணாவும், "அந்துலேனி கதா'' படத்தை
கே.பாலசந்தரும் டைரக்ட் செய்தனர்.
"கதாசங்கமா'' படத்தில் ஒரு புதுமை. மூன்று கதைகள், ஒரே படத்தில்
இடம் பெற்றன. மூன்றாவது கதையில், ஒரு குருட்டுப் பெண்ணை வில்லன்
கற்பழித்து விடுவான். அவளை கதாநாயகன் ஏற்றுக்கொள்வான். இதில்,
வில்லனாக நடித்தார், ரஜினி.
(இந்த மூன்றாவது கதையை, பிற்காலத்தில் `கை கொடுக்கும் கை' என்ற
பெயரில் தமிழில் மகேந்திரன் முழுப்படமாக எடுத்தார். கன்னட மூலத்தில்
வில்லனாக நடித்த ரஜினி, தமிழில் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக,
ரேவதி நடித்தார்.)
அவர்கள்
இதற்குப்பின் பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் "அவர்கள்.''
பலரும் முக்கோணக் காதல் கதையை படமாக எடுப்பார்கள். அதிலிருந்து
மாறுபட்டு, நான்கு கோணங்களில் காதலை படம் பிடித்துக் காட்டினார்,
பாலசந்தர். திரைக்கதையை மிகத் திறமையாக அமைத்தார்.
கதையின் நாயகி சுஜாதா, இசைக்கலைஞன் ரவிக்குமாரை (புதுமுகம்)
காதலிக்கிறார். அவர் எழுதும் கடிதங்கள் ரவிக்குமாருக்கு போய்ச்
சேராததால், ரஜினிகாந்துக்கு கழுத்தை நீட்டுகிறார். ரஜினிகாந்த்,
ராமநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மனைவியை துன்புறுத்தி
மகிழும் "சாடிஸ்ட்'' அவர்.
மனைவியை கட்டித் தழுவும்போதுகூட, "இந்த மாதிரி அணைத்தால் உனக்குப்
பிடிக்குமா? உன் பழைய காதலன் உன்னை எப்படி அணைப்பான்?'' என்று,
வார்த்தைகளால் தேள் போல கொட்டுவார்.
இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது.
குழந்தையுடன் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார்,
சுஜாதா.
அங்கு கமலஹாசன் (கதாபாத்திரத்தின் பெயர் ஜானி) வேலை பார்க்கிறார்.
மனைவியை இழந்தவர். எல்லோருக்கும் உதவி செய்யும் நல்லவர். அவருக்கு
தோழனாக இருப்பது `ஜுனியர்' என்ற பெயருள்ள பேசும் பொம்மை.
அவர், சுஜாதாவுக்கு உதவிகள் செய்கிறார். கமல் வீட்டிலேயே
குடியேறுகிறார், சுஜாதா.
சுஜாதாவின் கதையை அறியும் கமல், அவரை மனதுக்குள் நேசிக்கிறார்.
ஆனால், அது ஒருதலைக்காதல்.
எதிர்பாராத திருப்பம்
இந்த சமயத்தில், சுஜாதாவின் பழைய காதலன் ரவிக்குமார், பக்கத்து
வீட்டில் வசிப்பது சுஜாதாவுக்குத் தெரிகிறது. இருவரும் சந்தித்துப்
பேசும்போது, ரவிக்குமார் நிரபராதி என்பது சுஜாதாவுக்குத் தெரிகிறது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.
இந்த சமயத்தில், சுஜாதா வேலை பார்க்கும் கம்பெனியின் மானேஜராக
மாற்றல் ஆகி வருகிறார், ரஜினி. தான் திருந்திவிட்டதாக கூறி,
சுஜாதாவுக்கு பல உதவிகள் செய்கிறார்.
இதனால் சுஜாதாவின் மனம் மாறுகிறது. கணவருடன் சேர்ந்து வாழ முடிவு
செய்கிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று வேறு பெண்ணை மணக்கிறார்,
ரவிக்குமார்.
இந்த கல்யாணம் முடிந்து சுஜாதா வீடு திரும்பும் வேளையில், ஒரு
வடஇந்தியப் பெண் கைக்குழந்தையுடன் வந்து, தன்னை ராமநாதனின் (ரஜினி)
மனைவி என்று கூறுகிறாள்.
இதைத்தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால், ரஜினி மாறவே இல்லை என்பதை
சுஜாதா தெரிந்து கொள்கிறார். "ஏன் இப்படி செய்தீர்கள்?'' என்று
சுஜாதா கேட்க, "நீ மறுமணம் செய்வதை தடுக்கவே அப்படிச் செய்தேன். நீ
கதறி அழுவதை பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை!'' என்கிறார், ரஜினி.
மன உறுதி படைத்த சுஜாதா, "என்னை அழவைக்க மட்டும் உன்னால் முடியாது''
என்று கூறிவிட்டு, திருவனந்தபுரத்திற்கு ரெயில் ஏறுகிறார்.
கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைக்கிறார், கமல்.
இந்தப் படத்தில் "ஆன்டி ஹீரோ'' வேடத்தில் அற்புதமாக நடித்திருந்தார்,
ரஜினி.
மலையாளம் கலந்த தமிழிலே பேசி நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்
பிடித்தார், கமல்.
சுஜாதாவும் மிகச்சிறப்பாக நடித்தார்.
தன் மகன், சுஜாதாவை மணந்து அநியாயமாக கைவிட்டதை அறியும் ரஜினியின்
தாயார், வேலைக்காரியாக மாறி சுஜாதாவுக்கு உதவுவது அருமையான
குணச்சித்திர கதாபாத்திரம்.
மொத்தத்தில் "அவர்கள்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு, ரஜினியின்
நடிப்புக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. "எனக்கு நட்சத்திர அந்தஸ்தை
பெற்றுத்தந்த படம் அவர்கள்'' என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
>>> Part 13
| |