1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த்
திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''
1977-ம் ஆண்டில் மொத்தம் 15 படங்களில் ரஜினிகாந்த் நடித்தார்.
அவற்றில், "புவனா ஒரு கேள்விக்குறி'' பெரும் திருப்பம் ஏற்படுத்திய
படமாகும்.
ரஜினி நடித்து 1977-ல் வெளிவந்த படங்கள் வருமாறு:-
அவர்கள், கவிக்குயில், ரகுபதி ராகவன் ராஜாராம், சிலசும்மா
செப்பிந்தி (தெலுங்கு), புவனா ஒரு கேள்விக்குறி.
ஒந்து பிரேமதே கதே (கன்னடம்), 16 வயதினிலே, சகோதர சவால் (கன்னடம்),
ஆடுபுலி ஆட்டம், காயத்ரி.
குங்கும ரக்ஷே (கன்னடம்), ஆறுபுஷ்பங்கள், தொலிரேயி கடிசிந்தி (தெலுங்கு),
ஆம் மே கதா (தெலுங்கு), கலாட்டா சம்சாரா (கன்னடம்).
கவிக்குயில்
எஸ்.பி.தமிழரசி தயாரித்த இந்தப்படத்தில், சிவகுமார், ஸ்ரீதேவி
பிரதான வேடத்தில் நடித்தனர். ரஜினிகாந்துக்கு ஜோடியாக லட்சுமிஸ்ரீ
நடித்தார். மற்றும் எஸ்.வி.சுப்பையா, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோரும்
நடித்தனர்.
ஆர்.செல்வராஜ் எழுதிய கதைக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர் பஞ்சு
அருணாசலம். தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தனர்.
இளையராஜா இசை அமைப்பில், பாலமுரளிகிருஷ்ணா பாடிய "சின்னக்கண்ணன்
அழைக்கிறான்'' என்ற பாடல் பெரிய ஹிட்டாகியது.
ரகுபதி ராகவன் ராஜாராம்
இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜயகுமார், சுமித்ரா, ராம்குமார்,
ஷோபனா ஆகியோர் நடித்தனர். ராம்-ரஹீம் கதை-வசனம் எழுதிய இப்படத்தை
இயக்கியவர் துரை.
முதலில் இப்படத்துக்கு "ரகுபதி ராகவராஜாராம்'' என்று பெயர்
வைத்திருந்தனர். தணிக்கை குழுவின் ஆலோசனைப்படி, "ரகுபதி ராகவன்
ராஜாராம்'' என்று மாற்றப்பட்டது.
புவனா ஒரு கேள்விக்குறி
ரஜினிகாந்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் "புவனா ஒரு
கேள்விக்குறி.''
மகரிஷி எழுதிய கதைக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.
எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷனில் ரஜினி நடித்த முதல் படம்.
இந்தப் படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், அதுவரை நல்லவராகவே
நடித்து வந்த சிவகுமார் கெட்டவராகவும், கெட்டவராக நடித்து வந்த
ரஜினிகாந்த் நல்லவராகவும் நடித்தனர்.
இந்த மாற்றம் நன்றாக `கிளிக்' ஆகியது. மாறுபட்ட வேடங்களையும்
தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார்.
சிவகுமாரால் கைவிடப்பட்ட சுமித்ராவுக்கு அடைக்கலம் கொடுத்து
ஆதரிக்கும் நல்லவராக அவர் நடித்ததை ரசிகர்கள் வரவேற்றனர்.
ரஜினி பாடுவதுபோல் அமைந்த "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம்
இல்லை ஆள! ஒரு ராணியும் இல்லை வாழ! என்ற பாடல், பெரிய ஹிட் ஆகியது.
2-9-1977-ல் வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்தப் படத்துக்கு, தமிழக அரசு ரூ.1 லட்சம் மான்யம் வழங்கியது.
எஸ்.பி.முத்துராமன் பேட்டி
"ரஜினிகாந்தை நல்லவராக நடிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம்
உங்களுக்கு எப்படி வந்தது?'' என்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம்
கேட்டபோது அவர் கூறியதாவது:-
"என் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த முதல் படம் "புவனா ஒரு
கேள்விக்குறி.''
வில்லன் வேடத்திலும், ஸ்டைல் நடிப்பிலும் அவர் ஏற்கனவே முத்திரை
பதித்திருந்தார். அவரை, புதுமையான வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும்
என்று நானும், பஞ்சு அருணாசலமும் முடிவு செய்தோம்.
இந்தப்படத்தில் 2 கதாநாயகர்கள். அதுவரை நல்லவராகவே நடித்து வந்த
சிவகுமாரை கெட்டவராகவும், கெட்டவராகவே நடித்து வந்த ரஜினிகாந்தை
நல்லவராகவும் நடிக்க வைக்கத் தீர்மானித்தோம்.
இதுபற்றி அறிந்ததும், `ரசிகர்கள் இந்த மாற்றத்தை ஏற்பார்களா?' என்று
சிவகுமார் கொஞ்சம் தயங்கினார். ஆனால் பிறகு, அதை ஒரு சவாலாக
ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரத்தை ஏற்று, மிகச்சிறப்பாக நடித்தார்.
புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் ரஜினிக்கு ஏக மகிழ்ச்சி.
அற்புதமாக நடித்து, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார்.
இந்தப்படம் வெளியாகும் வரை, சிறந்த வில்லனாகவும், ஸ்டைல்
மன்னனாகவும் மட்டுமே ரஜினியை ரசிகர்கள் நினைத்தார்கள். அவர்
எல்லாவித பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர் என்பதை
எடுத்துக்காட்டிய படம், "புவனா ஒரு கேள்விக்குறி.'' இப்படம்,
ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.''
இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
>>> Part 14
|