பாரதிராஜாவின்
"16 வயதினிலே''
`பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி
`புவனா ஒரு கேள்விக்குறி'யைத்
தொடர்ந்து, ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படம் "16 வயதினிலே.'' இது,
பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம்.
"புவனா ஒரு கேள்விக்குறி'' வெளிவந்து 2 வாரம் கழித்து வெளிவந்த
இப்படம், ரஜினியின் புகழை மேலும் உயர்த்தியது.
இதில் கதாநாயகன் `சப்பாணி'யாக கமலஹாசன் நடித்தார். அவர் அற்புதமாக
நடித்த படங்களில் ஒன்று "16 வயதினிலே.'' கதாநாயகியாக ஸ்ரீதேவி
சிறப்பாக நடித்தார்.
பரட்டை
முழுக்க முழுக்க மண்வாசனை கமழ்ந்த இப்படத்தில் `பரட்டை' என்ற
முக்கிய வேடத்தில் ரஜினி நடித்தார்.
படத்தின் கதை, புதுமையானது.
படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி. அவருடைய தாயார் காந்திமதி.
சதா வெற்றிலையை குதப்பிக்கொண்டு, கோணிக் கோணி நடக்கும் `சப்பாணி'
கமலஹாசன், `ஆத்தா, ஆத்தா' என்று காந்திமதியிடம் மிகுந்த விசுவாசம்
வைத்திருந்தார்.
அந்த ஊருக்கு வரும் ஒரு டாக்டரை (சத்யஜித்) ஸ்ரீதேவி காதலிப்பார்.
டாக்டர் தன்னைக் காதலிப்பதாக ஸ்ரீதேவி நினைப்பார். ஆனால், `நான்
விரும்புவது உன்னுடைய 16 வயதைத்தான்; உன்னை அல்ல' என்று கூறிவிட்டு,
வேறு பெண்ணை டாக்டர் கல்யாணம் செய்து கொள்வார்.
நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அரட்டை அடிப்பது, பெண்களை கேலி
செய்வது ஆகியவற்றையே தொழிலாகக் கொண்ட `பரட்டை'க்கு (ரஜினி) ஸ்ரீதேவி
மீது ஒரு கண்.
ஒருநாள் ஸ்ரீதேவியை அவர் கெடுக்க முயற்சிக்கும்போது, அங்கே வரும்
கமல், ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டு, ரஜினியைக்
கொன்றுவிடுவார்.
அதுவரை கமலை வெறுத்து வந்த ஸ்ரீதேவியின் மனம் அடியோடு மாறும். தன்
கற்பைக் காப்பதற்காக கொலையாளி யாகி ஜெயிலுக்குப் போன கமல், எப்போது
விடுதலையாகி வருவார் என்று எதிர்பார்த்து, ரெயில் நிலையத்தில்
காத்திருப்பார்.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில், மிக முக்கிய இடத்தைப் பெற்ற படம் "16
வயதினிலே.'' ஒரு நிஜ கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய
படம். நடித்தவர்கள் எல்லோரும், உயிருள்ள பாத்திரங்களாக
நடமாடினார்கள். ரஜினி நடித்தது வில்லன் கதாபாத்திரம் என்றாலும்,
மிகச்சிறப்பாக நடித்திருந்தார். "இது எப்படி இருக்கு?'' என்று
கேட்டு அவர் பேசிய வசனங்கள், கைதட்டல் பெற்றன.
நெருப்பு
அஜந்தா கம்பைன்ஸ் தயாரித்த "சகோதர சவால்'' என்ற கன்னடப் படத்தில்
ரஜினி, கவிதா, பவானி, ஹாலம், ஜெயமாலினி, ஜெயபாரதி, பிரமிளா, விஷ்ணு
வர்த்தன் ஆகியோர் நடித்தனர். இந்தப்படம், "நெருப்பு'' என்ற பெயரில்
தமிழிலும், "டில்லர்'' என்ற பெயரில் இந்தியிலும் டப் செய்யப்பட்டது.
ஆடுபுலி ஆட்டம்
சொர்ணாம்பிகை புரொடக்ஷன் தயாரித்த "ஆடுபுலி ஆட்டம்'' என்ற படத்தில்
கமலஹாசனுடன் இணைந்து நடித்தார், ரஜினி. இந்தப்படம் 30-9-1977 அன்று
வெளியாகியது.
மகேந்திரன் கதை-வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட்
செய்திருந்தார். ஸ்ரீபிரியா, சங்கீதா ஆகியோர் நடித்தனர்.
காயத்ரி
பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் "காயத்ரி'' என்ற நாவல், அதே பெயரில்
படமாகியது.
இதில் கதாநாயகன் கெட்டவன். பெண்களை திருமணம் செய்து, முதல்
இரவின்போது ரகசிய கேமராவைக்கொண்டு, படுக்கை அறை காட்சிகளை புளு
பிலிம் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்றுவிடுவான். அந்த
கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார்.
கதாநாயகி ஸ்ரீதேவி. துப்பறியும் அதிகாரியாக ஜெய்சங்கர் நடித்தார்.
"ஏ'' முத்திரையுடன் படம் வெளிவந்தது.
அந்தக் காலக்கட்டத்தில், இந்தக்கதை, வித்தியாசமானதாகவும்,
புரட்சிகரமானதாகவும் கருதப்பட்டது. சிலர், "இப்படியெல்லாம் நடக்குமா!''
என்று கூறினார்கள். எனினும், பிற்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள்
ஏராளமாக நடந்தன.
பஞ்சு அருணாசலம் வசனம் எழுத, இளையராஜா இசை அமைத்தார். டைரக்ஷன்:
பட்டாபிராமன்.
கன்னடத்தில் `நெஞ்சில் ஓர் ஆலயம்'
தமிழில் ஸ்ரீதர் டைரக்ஷனில் மாபெரும் வெற்றிபெற்ற "நெஞ்சில் ஓர்
ஆலயம்'', "குங்கும ரக்ஷே'' என்ற பெயரில் கன்னடத்தில்
தயாரிக்கப்பட்டது.
தமிழில் கல்யாண்குமார் நடித்த டாக்டர் வேடத்தில், கன்னடத்தில் ரஜினி
நடித்தார். மற்றும் மஞ்சுளா, அசோக் ஆகியோர் நடித்தனர். எஸ்.கே.சாரி
டைரக்ட் செய்தார்.
இந்தப்படம் "குறிஞ்சி மலர்'' என்ற பெயரில் தமிழில் டப்
செய்யப்பட்டது.
ஆறு புஷ்பங்கள்
ரஜினி நடித்த அஷ்டலட்சுமி பிக்சர்ஸ் தயாரித்த "ஆறு புஷ்பங்கள்'',
17-11-1977-ல் வெளியாயிற்று.
இதில், விஜயகுமார் கதாநாயகனாக நடித்தார். ஸ்ரீவித்யா, ஒய்.விஜயா
ஆகியோர் இடம் பெற்றனர். கதை-வசனத்தை கலைஞானம், பனசை மணியன் ஆகியோர்
எழுதினர். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
>>> Part 15
|