புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்'
ரஜினியின் முதல் வண்ணப்படம்
ரஜினி நடித்த "ஆயிரம் ஜென்மங்கள்'', முக்கியமான படம். அவர் நடித்த
முதல் கலர்ப்படம் இதுதான்.
பல்லவி என்டர்பிரைசஸ் சார்பாக பட அதிபர் எம்.முத்துராமன் ("என்.வி.ஆர்''முத்து)
தயாரித்த படம் இது. இதில் விஜயகுமார் - லதா ஜோடியாக நடித்தனர்.
லதாவின் அண்ணனாக ரஜினி நடித்தார்.
இது, ஆவிகள் பற்றிய கதை. மலையாளத்தில், ஷீலா டைரக்ஷனில் "யக்ஷ கானம்''
என்ற பெயரில் பத்திரிகையாளர் மதிஒளி சண்முகம் தயாரித்து வெற்றி
கண்ட படம்.
தமிழ்ப்பதிப்புக்கு மதிஒளி சண்முகம் திரைக்கதை - வசனம் எழுத, துரை
டைரக்ட் செய்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
புதுமையான கதை
இந்த படத்தின் கதை புதுமையானது.
விஜயகுமாரும், பத்மபிரியாவும் காதலர்கள். இருவருக்கும் திருமணம்
நடைபெற சில நாட்கள் இருக்கும் தருணத்தில், பத்மபிரியாவை கற்பழிக்க
வில்லன் முயற்சிக்கிறான். அவனிடமிருந்து தப்பி ஓடும்போது,
நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்து போகிறார், பத்மபிரியா.
அதன்பின் ஆவியாக அலைந்து கொண்டிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்குப்பின், விஜயகுமாருக்கும், லதாவுக்கும் திருமணம்
நடைபெறுகிறது.
ஒரு சமயம் லதா தனியாக இருக்கும்போது, அவர் உடலுக்குள்
பத்மபிரியாவின் ஆவி புகுந்து கொள்கிறது. லதா ஆவியாகத் திரிகிறார்.
விஜயகுமாரும், பத்மபிரியாவின் ஆவி புகுந்துள்ள லதாவும் தாம்பத்ய
உறவு கொண்டால், அந்த ஆவி நிரந்தரமாக லதா உடலிலேயே தங்கி விடும்.
ரஜினி இதைத் தெரிந்து கொள்கிறார். லதாவின் உடலில் இருந்து
பத்மபிரியாவின் ஆவியை வெளியேற்றி, மீண்டும் லதாவின் ஆவியை அதன்
உடலுக்குள் புகச் செய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை வைத்து, கதை
புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் பின்னப்பட்டு இருந்தது.
10-3-1978-ல் வெளியான இந்தப்படம், நூறு நாள் ஓடியது. மாறுபட்ட
வேடத்தில் ரஜினி சிறப்பாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற "வெண்மேகமே'' என்ற பாடல் மிகப்பிரபலம்.
டைரக்டர் துரை அனுபவம்
ரஜினி நடித்த "ரகுபதி ராகவன் ராஜாராம்'', "ஆயிரம் ஜென்மங்கள்'', "சதுரங்கம்''
ஆகிய மூன்று படங்களை டைரக்ட் செய்தவர், துரை.
ரஜினியுடன் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, துரை கூறியதாவது:-
"என் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் "ரகுபதி ராகவன் ராஜாராம்''
அண்ணன் தம்பிகள் மூவரை சுற்றிப் பின்னப்பட்ட கதை. கதாநாயகியின் முறை
மாப்பிள்ளையான வீரய்யன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார்.
எஸ்டேட்டில் சைக்கிள் கடை வைத்திருந்த வீரய்யன், யார் வம்புக்கும்
போகமாட்டான்; வந்த வம்பையும் விடமாட்டான்!
முறைப்பெண்ணை காதலிக்கும் வீரய்யன், அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள்
என்பதை அறிந்து, ஒதுங்கிக் கொள்வான்.
இந்த நிலையில், முறைப்பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான் என்பதை
அறியும்போது துடித்துப்போவான். "உன்னைக் கெடுத்தவனை, உயிருடனோ,
அல்லது பிணமாகவோ உன் காலடியில் போடும்வரை ஓயமாட்டேன்'' என்று சபதம்
செய்துவிட்டு வெளியேறுவான். சொன்னது போலவே, வில்லனை கொன்று, பிணத்தை
முறைப்பெண் முன் கொண்டு வந்து போட்டுவிட்டு போலீசில் சரண் அடைவான்.
ஆழியார் அணையில்
"ஆயிரம் ஜென்மங்கள்'' படப்பிடிப்பு ஆழியார் அணைப்பகுதியில் நடந்தது.
அங்கு மூன்று அறைகள்தான் இருந்தன. ஒரு அறை, கதாநாயகி லதாவுக்கு.
இன்னொரு அறையில், விஜயகுமார் தங்கினார். மூன்றாவது அறை டைரக்டரான
எனக்கும், ரஜினிக்கும் ஒதுக்கப்பட்டது.
அந்த அறையில் ஒரு கட்டில்தான். மற்றொருவருக்காக தரையில் `பெட்'
விரிக்கப்பட்டிருந்தது.
"நீங்கள் கட்டிலில் படுத்துக்கொள்ளுங்கள். நான் தரையில் உள்ள
படுக்கையில் படுத்துக் கொள்கிறேன்'' என்று கூறினேன்.
அதை ரஜினி ஏற்கவில்லை. "நீங்க கட்டிலில் படுங்க. நான் கீழே
படுத்துக்கிறேன்'' என்று கூறி, அப்படியே படுத்துக்கொண்டார்.
அவருடைய பெருந்தன்மை என்னை நெகிழச் செய்துவிட்டது.
அப்பாவி வேடம்
சீரியசான கேரக்டரில் அறிமுகமாகி, ஸ்டைல் வில்லனாக
நடித்துக்கொண்டிருந்த ரஜினி, "சதுரங்கம்'' படத்தில், பெண்களைப்
பார்த்து பயப்படும் அப்பாவியாக நடித்தார். அவர் நடிப்பு ரசிகர்களை
வெகுவாக கவர்ந்தது.
ரஜினி, தொழில் மீது பக்தி மிக்கவர். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து
விடுவார். கடும் உழைப்பாளி. படப்பிடிப்பு நேரங்களில், தான் அடுத்து
நடிக்க வேண்டிய சீன் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பார்.
அவர் என்னை எங்கு பார்த்தாலும், அன்பாக இரண்டு வார்த்தைகளாவது
பேசாமல் போகமாட்டார்.
முன்வைத்த காலை பின்வைக்காமல் வெற்றி நடை போடும் ரஜினி, பல்லாண்டு
வாழவேண்டும்.''
இவ்வாறு கூறினார், துரை.
>>> Part 16
|